Monday, 11 February 2013

பத்துமலை 2013. . .


1892ல் பத்துமலையில் முதன் முதலில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. 1920ல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன.

ஒற்றையடிப் பாதையில் ஏறிச்சென்று மலைக் குகையில் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் போய் இன்று மூன்று வழிப்பாதையாக இந்த படிக்கட்டுகள் அமைகின்றன. போவதற்கும் வருவதற்கும் என இரண்டும், விழாக்காலங்களில் காவடிகள் போய்வர  நடுவில் ஒன்றும் என இந்த 272 இப்படிகளே பத்துமலையின் வளர்ச்சியினைக் காட்டுகிறது.



அடிவாரத்தில் இருந்து இந்த மலைக்குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. உடல் உபாதைக்குள்ளாகும் பலர் மேலே குகைக்கோயிலுக்கு வர சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வரமுடியாமல் ஏங்குவோரும் நிறையவே உள்ளனர். இருதய நோயால் தாக்கப்பட்ட  நான், சில வருடங்களுக்கு முன்னால் படியேறி மலைமேலே சென்று முருகனை வணங்க முடியா நிலை எனக்கும் ஏற்பட்டதுண்டு.  ஆனால் இம்முறை எவ்வித சிரமுமின்றி 272 படிகளை கடந்துவிட்ட மகிழ்சியில் எடுத்துக்கொண்ட படம் இது.


272 படிகளைத்தாண்டி மேலேறி வரும் பக்தர்களுக்கு கண்குளிரும் விதமாக ஸ்ரீ சுப்ரமணியர் சிலை ஒன்று காட்சிதருகிறது.



இந்துக்களின் புனித தலமாக இருந்தாலும், மலேசிய அரசாங்காத்தால் அங்கிகரிக்கப்பட்ட சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் வெளி நாட்டு  சுற்றுப்பிரயாணிகள் எப்போதும் வந்து இதன் அழகை ரசித்த வண்ணம் உள்ளனர். 

தமிழ் நாட்டில் இருப்பது போல புகைப்படம் எடுக்கக்கூடாதென கட்டுப்பாடு இங்கில்லை  என்பதால் பலரும் மகிழ்ச்சியாக இங்கே வந்து இறைவனை தரிசித்து நிழல் படங்களை எடுத்துச் செல்கின்றனர். தங்கள் நாடுகளில் உள்ள தம் நண்பர்களுக்கு அவற்றை காட்டி அவர்களும் இங்கு வர வழி செய்கின்றனர். நம் பத்துமலை அகில உலக புகழ் பெற்ற காரணங்களில் இதுவும் ஒன்று. அதிலும் விழாக் காலங்களில் அவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.


பத்துமலையின்  உச்சகட்டமாக அமைவது, இங்குள்ள மலை மேலிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலில் இடம்பெறும் பிரார்த்தனைகள்தான்.  எப்போதும் பக்தி மணம் கமழும் பாடல்கள் ஒலியேற்றப்பட்டு காலந்தவறாமல் பூஜைகள் செய்யப்படுகின்றன. அர்ச்சனைகளுக்கு 5.00 வெள்ளி வசூலிக்கப்பட்டாலும், சாதாரணமாக முருகப்பெருமானை வழிபட எந்தத் தடையும் இல்லை. 



ஆக உயரத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை முருகன் கோயில் ஒன்றும் இருக்கிறது. இதனைச் சுற்றி சுண்ணாம்புக்குகையின் இயற்கை வளர்சியை தடை செய்யாமல் அப்படியே விட்டிருக்கின்றனர். உதிரிப்பகுதிகளாக மேலிருந்து தொங்கும் சிறு சிறு மலைக் கட்டிகளின் முன் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர் இங்கு சுற்றிப்பார்க்க வருவோர். அதுமட்டுமல்ல, இந்த இடத்தில் இருந்து மேல் நோக்கினால், திறந்த வெளியில் வானத்தைப் பார்க்கலாம். இதன் வழியாகத்தான் தூய காற்றும் வெளிச்சமும் இங்குள்ள மலைக்கோயில்களுக்கு கிடைக்கின்றன.



பத்துமலையின் இடப்பக்கம் இருக்கும் இடத்தில் 50 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர், நின்ற கோலத்தில் தன் மார்பைப் பிளந்து அங்கு வீற்றிருக்கும்  ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியார் திருவுருவங்களை வெளிக்காட்டி அவர்கள்பால் தமக்கிருக்கும் பக்தியை புலப்படுத்துகிறார்.

 அனுமாரை குலதெய்வமாக வழிபடுவோருக்காக அங்கே ஒரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது.  இந்தக் கோயில் நவம்பர் 2001ல் திறப்புவிழா கண்டது.



இந்தியாவின் திருப்பதிக்குச் செல்ல இயலாதோருக்காக இங்கேயும்   ஸ்ரீ வெங்கடாச்சலபதி ஸ்வாமி அருள் பாலிக்கும் சன்னிதானமும் இருக்கிறது. 

 நமது 'பாவ்ஸ் டபுள்ஸ்' வலைப்பதிவுக்காக இப்படி ஒரு படம். 

வெளிநாட்டினரைக் கவரும் இன்னொரு அம்சமாக அமைவது படிகளின் இருபக்கமும் இருக்கும் 'மக்காவ்' வகை குரங்குகளே.  'ஆஞ்ச நேயா', 'ஹனுமானே'  என செல்லமாக அவற்றுடன் பழகினாலும், அவ்வப்போது அவை தங்களது மூர்க்கத்தனத்தையும் காட்டாமலில்லை. அவற்றைவிட கீழே அடிவாரத்தில் இருக்கும் ஆபத்தில்லாத புறாக்களே மேல் எனப் போவோரும் உண்டு. கும்பலாக தீனியை ருசிக்கும் அவற்றை திடீரென விரட்டிவிட்டு அவை ஒரே நேரத்தில் மேலெழுந்து பறப்பதை புகைப்படங்களாக எடுத்து ரசிக்கின்றனர்.

ஆக, பத்துமலை என்று சொன்னால், அடிவாரத்திலும், மலைமேலும் உள்ள தெய்வத்திருவுருவங்களை பக்தி உணர்வுடன் வழிபட்டு, மற்ற கலை அம்சங்களையும் ஒன்று சேர கண்டு களித்துச் செல்வதில் பலரும் மனச் சாந்தியடைகிறார்கள்.

கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கொம்மியூட்டர் சேவையும் பத்து மலை வரை இருக்கிறது.




No comments:

Post a Comment