Monday, 11 February 2013

தமிழில் சஸ்பென்ஸ் படங்கள். . . 1

எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் புதுப் படங்களுக்கு மத்தியில் பழைய படங்களை மீண்டும் ஒரு முறை பார்த்து வைக்கும் ரசிகர்களும் நம்மிடையே உண்டு. அன்மையில் ஒரு நண்பர் பழையவற்றுள் 'சஸ்பென்ஸ்' படங்கள் பற்றி வினவினார். பல படங்கள் அப்படி உண்டு. அதில் பேய் படங்கள் தவிர, கொலைப் படங்களாகவும் பல வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன.

கொலை செய்து தப்பிப்பதும், தப்பிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டு விழிப்பதும் என பலவித உணர்ச்சிக்குவியல்களாக தமிழ்ப் படங்கள் தந்திருக்கின்றன. இல்லாததை இருப்பதென்றும், இருப்பதை இல்லையென்றும் அடித்துச் சொல்லும் கதாபாத்திரங்களையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். 

எனக்குப் பிடித்த சில திகில் படங்களை இங்கே தருகிறேன், உங்களுக்கும் பிடித்திருக்கும் என்கிற நம்பிக்கையில். பார்க்காதவையாக இருப்பின் குறுந்தட்டுகளில் கிடைக்கும் அவற்றை பார்த்து ரசிக்க இந்தச் சீனப் புத்தாண்டில் இதுவே நல்ல நேரம்.

"புதிய பறவை" - சிவாஜி, சரோஜா தேவி மற்றும் பலரின் இயற்கையான நடிப்பில் வெளிவந்த படம். பணமிருந்தும் நிம்மதி இன்றி ஒரு வித ஏக்கத்தில் சுற்றி வரும் சிவாஜி தான் விரும்பும் சரோஜாதேவியிடம் தனக்கு ஏற்கெனவே மணமானதை சொல்லி அவரின் முதல் மனைவி இறந்துவிட்டதாக முடிக்கிறார். மகிழ்ச்சியாக போகும் சில நாட்களில், இறந்ததாக அவர் சொன்ன அவரின் முதல் மனைவி மீண்டும் வந்து கண்முன்னே நிற்க, அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு அதிர்ச்சி.
புதிதாக பார்ப்போருக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.


இடம் பெற்ற பாடல்கள்:
1   சிட்டுக்குறுவி முத்தம் கொடுத்து

2   உன்னை ஒன்று கேட்பேன்

3   பார்த்த ஞாபகம் இல்லையோ

4   ஆஹா மெல்ல நட மெல்ல நட

5   எங்கே நிம்மதி எங்கே நிம்மதி



"அதே கண்கள்" - ஒரு குடும்பத்தில் தொடர்ச்சியாக கொலைகள் நடக்க, கொலையாளி யாரென இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமல் சிறப்பாக இருந்தது இப்படம். கொலைகாரன் விட்டுச்செல்லும் துண்டு சுருட்டும், அவன் அங்கிருப்போர்களில் ஒருவன் என தெரிய வந்து ஒருவருக்கொருவர் சந்தேகத்தில் பார்த்துக்கொள்வதும் நன்றாகவே இருந்தது. கொலைகாரனை படத்தின் நாயகன் ரவிச்சந்திரன் பிடிக்க முயலும்போது அவன் கண்களை மட்டும் பார்த்துவிடுவதும் பின்பு அங்குள்ளோர் அனைவரையும் ஒவ்வொருவராக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதும்  நம்மை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் காட்சிகள். நாகேஷின் நகைச்சுவையில் அவ்வப்போது சிரிக்கவும் இடமளிக்கும் விதம் காட்சி அமைப்புகள் இருந்தன.

 நல்ல பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இசை டி ஆர் பாப்பா.
1   பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி

2   சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்

3   என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் 
     சொல்ல வார்த்தை இல்லையே...

4   ஒஹ் ஒஹ் எத்தனை அழகு இருபது வயதினிலே

5   பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
     பூதத்தைப் பார்த்து பயந்தாளாம்

6   வா அருகில் வாரா தா உயிரைத் தா....



"யார் நீ?" - ஜெய்சங்கர், ஜெயலலிதா, ஆனந்தன் நடிப்பில் வந்த படம். வெள்ளை ஆடையில் ஜெயலலிதாவின் நடிப்பு, அவர் நடந்து போகையில் கேட்டின் கதவு தானே திறந்து கொள்வது, கார் கண்ணாடியில் தண்ணீர் துடைக்கும் வைப்பர் தானே வேலை செய்வது, முதலில் பார்த்த இடம் மீண்டும் வந்து பார்க்கையில் வேறு விதமாக தோன்றுவது என திகிலை பல வழிகளில் கூட்டியிருந்தனர் படமெடுத்தோர். ஜெய்சங்கர் ஒரு மருத்துவராக இளமை மிடுக்காக படம் முழுக்க வருவார்.

 "நானே வருவேன்..அங்கும் இங்கும்..." என ஆவி பாடுவதாக அருமையான ஒரு பாடலை சேர்த்திருந்தனர் இதில். மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இப்பாடல் படத்தின் சிறப்பம்சம் என்பேன்.

1  என் வேதனையில்
    உன் கண்ணிரண்டும் என்னோடு
    அழுவதேன் கண்ணா...

2  முள்ளில் ரோஜா..துள்ளுதே ராஜா

3  பார்வை ஒன்றே போதுமே...
    பல்லாயிரம் சொல் வேண்டுமா...


"இதயக்கமலம்" - இறந்துவிடும் மனைவியை எரித்து முடித்து கவலையில் சோர்ந்திருக்கும்  ரவிச்சந்திரனிடம் " நான் தான் உங்கள் மனைவி " என கே. ஆர். விஜயா வந்து சொல்ல, படத்தின் சஸ்பென்ஸ் தொடங்குகிறது. அருமையான வாக்குவாதங்கள். பார்ப்போரை எது உண்மை என தெரிந்து கொள்ளும் ஆவலை தூண்டிய படமிது.

இதிலும் பல பாடல்கள் இனிமையாக ஒலித்தன:
1   மேலத்தெ மெல்லத் தட்டு மாமா...

2   நீ போகுமிடமெல்ல்லாம் நானும் வருவேன்
    போ போ போ...

3   மலர்கள் நனைந்தன பனியாலே...

4   என்னதான் ரகசியமோ இதயத்திலே...

5   தோள் கண்டேன் தோளே கண்டேன்...

6   உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...


மேலும் சில படங்களை 2ம் பகுதியில் பார்ப்போம்...

No comments:

Post a Comment