Saturday, 16 February 2013

ஒரே நாளில் இரண்டு விண்கற்கள் அதிசயம். . .

விண்கற்கள், எரிகற்கள், எரி நட்சத்திரங்கள் போன்றவை தினமும் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி படித்திருப்போம்.

நெருப்புப் பந்துகள் போல தோன்றும் அவை நம் பூமியை வந்தடைவதற்குள் எரிந்து காணாமல் போகின்றன.

ஆயினும் மிகப் பெரிய அளவில் இருக்கும் விண்கற்கள் எப்போதாவது ஒருமுறை பூமியில் வந்து விழுந்து பல சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

அப்படி பூமியில் விழாவிட்டாலும் பூமியின் நிலப்பரப்பின் மிக அருகில் ஒரு விண்கல் பறந்து செல்லும் போது சில சேதங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.  வெள்ளி  அதிகாலையில் ரஷ்ய யூரல் மலைப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது இச்சம்பவம். 

இந்த எரிகல் வெடித்து சிதறியதில் அவ்விடத்தில் இருந்த கட்டிடங்களின்  ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து அதன்  சிதறல்கள் பட்டு பலர் படுகாயம் அடைந்தனர். உடனடி எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது.  நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது இப்படி இருக்க, இன்னொரு அதிசயக்கச் சம்பவமும் நடந்துள்ளது.  சில மணி நேர இடைவெளியில் ஆஸ்ட்ராய்ட் 2012 டிஏ14 என்ற விண்கல் அதாவது சுமார் ஒரு  கால்பந்து மைதான அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் கூறினர்.

பெரிய மலை போன்ற விண்கல், பூமிக்கு மேலே 17 ஆயிரம் மைல் தொலைவில் கடந்து சென்றதாகவும்  விண்ணில் சுற்றிவரும் சாட்டிலைட்டுகளுக்கு மிக அருகாமையில் இந்த விண்கல் கடந்துள்ளதாகவும் விஞ்ஜானிகள் கூறினர்.

ரஷ்யாவில் எரிகல் வெடித்து சிதறிய சில மணி நேரம் கழித்து இந்த விண்கல் பூமியை கடந்து சென்றதாகவும், அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

ரஷ்யாவில் விழுந்த எரிகல் 49 அடி இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment