Thursday 25 July 2013

நம்பிக்கை...

உறவு வலுப்பெற முக்கியத் தேவை நம்பிக்கை.  நம்பிக்கைக்கு பங்கம் வரும்போது உறவு உடைகிறது. எந்த உறவிலும் நம்பிக்கை குறையும் போது சந்தேகம் எழுகிறது. சந்தேகம் பின்னர் கோபத்தை கிளறுகிறது. கோபம் உறவை எதிரியாக எண்ணத் தூண்டுகிறது. இதுவே நம்பிக்கையின் 'பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஃபோர்முலா".

அதனால்தான் சொல்கிறோம், இந்த உலகமே நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்குகிறது என்று. நம்பிக்கைக்கு இதர குணங்களும் உதவிக்கு வருகின்றன. அவற்றில் சகிப்புத்தன்மையும் ஒன்று.
" என் மனைவி எல்லாவற்றையும் தன்னிச்சையாக செய்கிறாள். நான் சொல்வதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை." என ஸ்வாமிஜியிடம் குறைபட்டார் ஒருவர்.

" உன்னைவிட சிறந்த குணங்களைக் கொண்டிருந்தால், அவளுக்கு உன்னைவிட உயர்ந்தவன் கணவனாக வந்திருப்பான். குறை சொல்லாமல் அவளிடம் உள்ள நன்மைகளைப் பார்" எனச் சொல்லி அனுப்பிவிட்டார் ஸ்வாமிஜி.

முறைகேடாக இல்லாமல் இருக்கும் போது அவள் செயவதை அனுசரித்து, அதன் நன்மைகளை உணர்ந்து வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். தான் கணவன், எனவே தனக்கு கட்டுப்பட்டே மனைவியானவள் இருக்கவேண்டும் என ஈகோ பார்க்காது அவள்மேல் நம்பிக்கை வைப்பது அவசியம்.

சிறந்த மனைவி என யாரும் இல்லை. பல உபரிக் காரணங்களினால் அப்படி ஒரு சிறந்த நிலையை அடைகிறார்கள் சில பெண்கள். அவ்வளவுதான்.

ஒருவன் திருமண ஏஜென்சிக்கு வந்திருந்தான். தான் திருமணம் செய்துகொள்ள ஒரு பொருத்தமான பெண் வேண்டும் என்றான். நேர்காணலின் போது தனக்கு பிடித்தமான பெண் எப்படி இருக்கவேண்டுமென வினவப்பட்டது.

" நல்ல அழகுடன், மரியாதையான, நகைச்சுவை உணர்வுமிக்க, தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தும் அறிந்தவளாக, பாடும், ஆடும் திறன் கொண்டவளாக, ஓய்வெடுக்க நான் வீட்டிலிருக்கும் போது என்னுடனே வீட்டில் இருக்கும், தேவைப்படும்போது கதைகள் சொல்லி, தேவைப்படாத நேரங்களில் அமைதியாக பேசாதிருப்பது போல் ஒருத்தி வேண்டும்" என்றான்.

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி,
" உங்களுக்கு தேவை ஒரு தொலைகாட்சி பெட்டியே..." எனச் சொல்லிவிட்டார்.

கிடைக்கும் மனைவி எதிர்ப்பார்ப்பதைப் போல இருக்கவேண்டும் என நம்பிக்கை வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது எனச் சொல்கிறார் நண்பர் ஒருவர். 


No comments:

Post a Comment