Thursday 25 July 2013

தாக்கும் முன் சிந்திக்க...

கராத்தே பயிற்சியின் தொடக்கதிலேயே ஒன்றை சொல்லித் தந்துவிடுகிறார்கள். "கராத்தே நி சென் த நாஷி." அதாவது 'கராதேயில் முதல் தாக்குதல் என்று ஒன்றில்லை" என்று அதற்குப் பொருள். அதனால்தான் ஒவ்வொரு 'கதா'வும் ( கராத்தே நுனுக்கங்களின் வடிவங்களும் ) தற்காப்பிலிருந்தே தொடங்குகின்றன.

'ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு'.  இக்கலையில் தேர்வு பெறுவோர் ஆத்திரம் கொண்டு தாக்கத்தொடங்கினால், அழிவு பண்மடங்கு பாதகமாக இருக்கும் என்பதனை மனதில் கொண்டே கராத்தேயினை ஒரு தற்காப்புக்கலையென குறிப்பிடுகிறார்கள். இதனையொட்டியே மற்ற கலைகளும் "தற்காப்பு"க்கென வடிவமைத்தார்கள். முதல் தாக்குதலின் விபரீதம் பல விசயங்களுக்கும் பொருந்தும்.

இந்தக் கொள்கையே எழுத்துக் கலைக்கும் உண்டு. அதுவும் அலுவளகத்தில் பணிபுரிவோர் அதிகம் கவனிக்க வேண்டியது இது. சினமுடன் எழுதத் தொடங்கினால் சீண்டிப்பார்க்கும் வார்த்தைகளுக்கு பஞ்சம் இருக்காது.

" என்னால் நம்பமுடியவில்லை. உயர்பதவிக்கு பரிந்துரைக்கும் போது 'என்னோடு பணிபுரிபவர்களில் நானே எல்லா தகுதிகளும் கொண்டுள்ளேன்' என என்னைப் பாராட்டிப் பேசி, பொய்யாக என்னை நம்ப வைத்து, இப்போது அந்த உயர்பதவியை வேறொருவருக்கு வழங்கி விட்டீர்கள். 'நீங்கள் ஒரு பாரபட்சமானவர்' என இதனால் தெளிவாகத் தெரிகிறது' என தனது மேலாளருக்கு சுடச் சுட ஒரு மின்னஞ்சல் அனுப்பினார் சியூ மெங்.

" மிக்க நல்லது. உடனடியாக உங்கள் பணியிடத்தை காலி செய்துவிட்டு பாரபட்சம் இல்லாதவரைத் தேடி பணியில் சேரவும். நன்றி."  என பதில் வந்தது.

சியூ மெங்கின் கோபம் ஞாயமானதாகப் படலாம்.  ஒருவேளை அவர்தான் அந்த உயர் பதவிக்கு தகுதியானவராகவும் இருந்திருக்கலாம். ஆனால், தனது 'பாஸ்'ஸை இப்படி விமசித்து எழுதிருப்பதானது அவருக்கு தனது வேலையை இழக்கும் சூழ் நிலையை தந்து விட்டது.

அப்படியானால் சியூ மெங் தனது கோபத்தை எப்படித்தான் தீர்த்துக் கொண்டிருக்கலாம்....?

"அலுவளக அறையை விட்டு வெளியே வந்து, ஒரு காகிதத்தில் தனக்கு எழும் கோபத்துக்கான காரணங்களை எழுதிவிட்டு மீண்டும் அலுவலகத்தின் உள்ளே சென்று எழுதிய அந்தக் காகிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவதுதான் சிறந்தது."

படிக்க பைத்தியக்காரத்தனமாகத் தெரியும் இதுவே மன நல மருத்துவர்களும், நிபுணர்களும் ஒட்டு மொத்தமாக வழங்குகின்ற தீர்வு. இதனால் சியூ மெங்கிற்கு சினமாக எழுந்த எதிர்மறை எண்ணங்கள் வெளிக்கொணரப்பட்டு அழிக்கப்படுகின்றன என்கிறார்கள் அவர்கள்.

சியூ மெங் எழுதியிருக்கவேண்டிய மின்னஞ்சல் ஏறக்குறைய இதைப்போல இருந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்....

" ஐயா, என்மேல் நம்பிக்கை வைத்து உயர்பதவிக்கு என்ன பரிந்துரைக்கப் போவதாக தாங்கள் சொன்னது எனக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தருகிறது. ஆனாலும், அப்பதவி எனக்குக்கிட்டாததை அறிந்து வருந்துகிறேன். அதன் காரணங்களை தங்களை சந்தித்து தெரிந்துகொள்ள விழைகிறேன். இன்றைய ஏமாற்றம் அடுத்தமுறை நடவாமல் தடுக்க இதுவே சிறந்த வழி என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். நன்றி. - சியூ மெங்"

 "சியூ மெங், உங்கள் மின்னஞ்சலைப் பார்த்தேன். கூடிய விரைவில் வேறொரு உயர்பதவிக்கான ஊர்ஜிதக்கடிதம் உங்களைத் தேடி வர என்னால் ஆன அனைத்தையும் செய்வேன் என இங்கு  சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறேன். - பாவ், உங்கள் பணியிட மேலாளர்.


 இதையே ஒரு ஹைக்கூவாக பார்ப்போமா....?
" தாக்கும் முன் சிந்திக்க
சிந்திக்காதோர்
சின்னாபின்னமாவர் சிறந்தவர் கையில் சிக்கி"

No comments:

Post a Comment