Monday 29 July 2013

விளங்காத வாழ்க்கை...

இளம் வயதில் பல நிகழ்வுகள் மறக்க முடியாததாக இருந்திருக்கும். எனக்கும் அப்படி சில உண்டு.  அவற்றுள் ஒன்றுதான் பின்வருவது.

5ம் படிவ பள்ளிப் பரிட்சை முடிந்ததும் வீட்டில் அப்பா திட்டுகிறாரே என்று வேலைத்தேடத் தொடங்கினேன். என்னோடு எனது இன்னும் மூன்று நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டனர். அவர்களது வீட்டிலும் இதே கதைதான்....சோகக்கதை. 

ஒவ்வொரு தனியார் நிறுவனமாக ஏறி இறங்கி வந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் ஒரு காவலாளி எங்களை அழைத்தார். பார்த்ததுமே நாங்கள் வேலை தேடித்தான் அழைகிறோம் என அவருக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.

"உள்ளே போங்க. ஒரு பரிட்சை வைப்பாங்க, பார்த்து எழுதுங்க..." என்று சொல்ல, அவசர அவசரமாக அந்த அலுவளகத்தின்  உள்ளே சென்றோம்.

100 கேள்விகள் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டது.
"இதில் 'செலெக்ட்' ஆகிறவங்களத்தான் இன்டெர்வியூவிற்கு கூப்பிடுவோம்" என ஒரு அதிகாரி விளக்கினார்.

பல கேள்விகளுக்கு விளக்கம் தேவைப்பட்டது. ஆனால் அப்படி விளக்கம் பெற முனைந்தால்  'நமக்கு ஒன்றும் தெரியவில்லை' என நினைத்துவிட்டால்...? 'தெரிந்ததை எழுதுவோம்' என முடிவு பண்ணி, ஒன்றறை மணி நேரத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு வெளியே வந்தேன்.

எனது நண்பர்கள் எனக்காக வெளியில் காத்திருந்தனர்.
"ஏன்டா இவ்வளவு நேரம்?" என வினவினான் ஒருவன்.

"ஏன், நீங்க மொதல்லேயே வந்துட்டிங்களா? எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சிருந்தது? எத்தனை பதில் எழுதினீங்க? " என ஆர்வம் பொங்கக் கேட்டேன்.

ஒருவன் 28 என்றான். மற்றவன் 29 என்றான். மூன்றாமவன் 30 என்றான். அனைவரும் என்னைப் பார்த்தார்கள். நான் பெருமையாக,
" என்னடா நீங்க... நான் நூறு கேள்விகளுக்கும் பதில் எழுதினேனே..." என்றேன்.

"அவ்வளவுதான் நீ ... போ..." என்றார்கள், அனைவரும் ஒரே குரலில்.

 "30 கேள்விகள் எழுதினால் போதுமாம். சரியான பதிலுக்கு மூன்று புள்ளிகள். பதில் தவறாக இருந்தால் ஒரு புள்ளி வெட்டப்படும். கேள்வித்தாளின் அடியே சிறு எழுத்துக்களில் கொடுத்திருந்ததை நீ கவனிக்கவில்லையா?"

"ஐயோ...." என்றேன். வேறென்ன சொல்ல முடியும்....?

வாழ்க்கையிலும் இதுதான் நடக்கிறது. அன்பைப் பரிமாறிக்கொள்ளும் அமைதியான வாழ்விற்கு பதிலாக, கோபம், களவு, ஆடம்பரம், அடிதடி என புரியாது போட்டியிடுகிறோம், புலம்புகிறோம்.

முடிவு?

 சுற்றிச் சுற்றி ஒரே இடத்திலேயே நிற்கிறோம்.  வீணாக நேரத்தை செலவிட்டதுதான் மிச்சம்.




No comments:

Post a Comment