Thursday 11 July 2013

இரட்டைக்குழந்தைகள்...

குழந்தைகளில் இரட்டையர்கள் என வந்துவிட்டாலே மனம் அப்படி ஒரு அலாதியான துள்ளலில் பொங்கும். பெற்றோர் தங்களின் புதுவரவைக் கண்டு பூரித்துப் போவார்கள். இருக்காதா பின்னே...? மகிழ்ச்சி இரட்டிப்பாகும் போது முகத்தில் புன்னகை தானாகவே மலர்வது இயற்கைதானே?

முன்பு இரட்டைக்குழந்தைகள் பிறப்பதென்பது அதிசயமாகப் பேசப்பட்டது. ஆனால் இன்றோ, மிகச் சாதாரணமான ஒன்றாக பலருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கக் காண்கிறோம்.

ஒருவருக்கு பதிலாக இருவருக்கான செலவை ஒரே நேரத்தில் செய்யவேண்டிவரும்.  ஆனால் அது பெற்றோருக்கு ஒரு ஆனந்தச் சுமையே.

ஒரு சில நேரங்களில் ஒரே மாதிரியான உருவ அமைப்பில் இருக்கும் இருவரைப் பார்ப்பதில் சில குழப்பங்கள் தோன்றலாம். அச்சு அசலாக, அறிவிலும், நிறத்திலும், வளர்ச்சியிலும்  தோன்றும் இரட்டையர்களைப் பார்க்கும் போது இருவரில் யாருடன் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் எனும் சந்தேகம் நமக்கு எழுவதில் ஆச்சரியமில்லை.  ஆனால் மன நிலையில் அப்படி இல்லாமல் மற்ற  பிற பிள்ளைகளைப் போலவே பல வேறுபாடுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

பிறந்த குழந்தைகள் வளரும்போது பெற்றோர் கையாளும்  வழிகள் அவ்விருவருக்குமான வித்தியாசங்களை கண்டு கொள்ள  உதவுகின்றன. ஒருவருக்கு பொட்டுவைப்பது, தனித்தனியே  அவர்களின் உடையில் வேறுபாட்டைக் காண்பிப்பது மற்றும் பெண் பிள்ளைகளாய் இருந்தால் ஒருவருக்கு நீண்ட முடியும் மற்றவருக்கு பாப் முடியுமாக வைப்பது என அமர்க்களமான வகைகளில் இந்தக் குழந்தைகள் வளர்கிறார்கள்.



அதே நேரம், இரட்டையர்களாகப் பிறந்தாலும், ஒருவருக்கொருவர் எவ்வித சாயலும் இல்லாமல் மற்றவர்களைப்போல இயல்பான தோற்றமளிக்கும் குழந்தைகளும் உண்டு.  அவர்களாகச் சொன்னால் தவிர நமக்கு அவர்கள் இரட்டையர்கள் என சற்றும் எண்ணத்தோன்றாது. 

திரையிலும் தொலைக்காட்சியிலும் இரட்டையர்கள் பற்றிய பல படங்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்த ஆச்சரியம் இப்போது இல்லையென்றாலும், இரட்டையர்கள் என வரும்போது அவர்கள் தோன்றும் காட்சிகள் நம் கவனத்தை இன்னமும் கவருகின்றன.

அந்த சுவாரஸ்ய உணர்வை மனதில் வைத்து துவங்கப்பட்டதே இந்த 'பாவ்ஸ்டபுள்ஸ்' எனும் " ஆயிரம் எண்ணங்கள் " வலைத்தளம்.

ஆரம்பம் முதல் இப்பதிவு வரை மலர்களை போல வருடம் முழுவதும் தூவப்பட்டிருக்கும் இரட்டை வேட புகைப்படங்கள் இந்த வலைத்தளத்தில் நூற்றுக்கணக்கில் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.  அவற்றை ரசித்துவரும் வருகையாளர்களுக்கு இனியும் அவற்றைப்போல தொடர்ந்து இங்கு இடம்பெறும் எனக் கூறிக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று, படங்களில் மட்டுமே இரட்டைவேடங்கள்... நிஜத்தில் அல்ல. 


No comments:

Post a Comment