பத்து மலையில் நேற்று யோக சித்தர் ஓம் ஸ்ரீ ராஜயோக குருவின் தெய்வீக பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் இடம்பெற்றது. காலை 7 மணியில் இருந்து பல ஆயிரம் பேர் மலையடிவாரத்தை முற்றுகை இட ஆரம்பித்து விட்டனர். எப்படியாவது குருஜியின் பார்வை தங்கள் மேல் விழாதா, அவரை அருகில் இருந்து பார்த்துவிடும் சந்தர்ப்பம் கிடைக்காதா என அவர் வரும் பாதையின் இரு மருங்கிலும் ஆட்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.காலை 10.30 மணியளவில் பலத்த கரவொலிக்கிடையே குருஜி வந்து சேர்ந்தார்.
பொதுவில் இளையோரே அதிக அளவில் இருந்ததினாலும், தங்கள் அமைப்பைச் சார்ந்த சின்னத்தை அணிந்திருந்ததாலும் இது ஏதோ ஒரு தனிப்பட்ட ஒரு அமைப்பு ஏற்று நடத்தும் கல்வி யாத்திரை அல்லது ஒரு வேல்வியைப் போலப்பட்டது. பத்துமலை இன்று ஆர்பிடி மையத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது போல கோயில் அடிவாரம் இந்த அமைப்பின் அங்கத்தினர்களால் நிறம்பி வழிந்தது. இதனால், வழக்கமான முருகன் வழிபாடுகளுக்காக வந்திருந்தோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியூர் சுற்றுப்பிரயாணிகளுக்கும் இந்த நிலைதான். என்ன நடக்கிறதென தெரியாமல் குழப்பத்துடன் இருந்தது தெரிந்தது. வழக்கமான பிரார்த்தனைக்கு போகும் பாதைகள் தடுக்கப்பட்டன அல்லது தடுக்கப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல், சேலையில் சில நூறு பெண்களை வழி நெடுகிலும் மனிதச்சங்கிலி போல நிறுத்தப்பட்டிருந்தது சற்று வித்தியாசமாக பட்டது.
தங்களுக்கு பின்னால் குறுகிய பாதையில் நடக்க சிறமப்பட்டு இடித்துக் கொண்டும் பிடித்துக்கொண்டும் உள்ளே நுழையும் மக்கள் இவர்களின் செயல் கண்டு அதிருப்தியில் முகம் சுளித்தது பார்க்க வருத்தம் தந்தது. குருஜி தனிப்பட்ட மேடைக்கு வரும் வரை, இந்த கைகோர்த்தபடி நின்றிருந்த பெண்கள் உதிர்த்த வார்த்தைகளான, " தள்ளி நில்லுங்கள், பின்னால் போய் நில்லுங்கள், உள்ளே வராதீர்கள், இந்தப் பக்கம் வரக்கூடாது, அங்கே செல்லாதீர்கள், யார் உங்களை உள்ளே விட்டது, இங்கே வராதீர்கள் என்பன போன்ற வார்த்தைகள் ஏதோ மந்திரம் போல திரும்பத் திரும்ப இவர்கள் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தது.
பாவம் வயதானோர். இந்நிகழ்விற்கு வந்தது தவறோ என சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டனர். இந்த பந்தா பெண்மணிகளினாலும், இதன் அமைப்பாளரின் அனுபவமின்மையினாலும், நிகழ்ச்சியின் முழு வெற்றி பாதிக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. வழக்கமான தைபூசத் திருநாளையே எவ்வித சலனமும் இல்லாமல் கண்டு களிக்கின்ற மக்களுக்கு இந்த பெண்மணிகளின் செயல் அதிக பட்ச பந்தாவாகவே பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வருடம் நடந்த தவறுகள் நிகழாமல் இருக்க பார்த்துக்கொள்வது நல்லது.
கூட்டுப் பிரார்த்தனைகள், வழிபாடுகள் மூலமாக ஆர்பிடி எனப்படும் இந்த இயக்கம் பல சமூக சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஏழை மாணவர்களுக்கு புத்தகப் பைகளும், தகுதி பெறும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப் படுகின்றன.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட பத்துமலை மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டத்தோ நடராஜா, குருஜியின் கைகளால் தனது புத்தகம் ஒன்றை வெளியீடு செய்தார். 'எங்கெங்கு காணினும் எழில் முருகன் ' எனத் தலைப்பிடப்பட்டிருந்தது அந்த நூல்.
குருஜி பேசும் போது, ஆர்பிடி இயக்கம் இந்திய சமுதாயத்தை நல்வழிப்படுத்த பல ஆய்வுகளுக்குப் பின் தன்னால் ஆரம்பிக்கப் பட்டது என்றார். பல்வேறு கல்வி மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளும் இன்னும் நடத்தப்படும் என்றும் இவை சமுதாய மேம்பாட்டிற்காக தான் எடுத்துக்கொண்ட சேவை என்றும் தன்னால் இதை செய்து முடிக்கும் நம்பிக்கை இருக்கிறதென்றும் குறிப்பிட்டார்.
அவருடைய ஆசிர்வாதத்தினைப் பெற ஆயிரமாயிரமானோர் அவர் பின்னே செல்வதை இங்கே காண முடிந்தது.
No comments:
Post a Comment