Saturday, 13 July 2013

'எண்ணங்கள் ஆயிரம்' இதுவரை...

இணையம் என்பது ஒரு சமுத்திரம். எல்லோருக்கும் எல்லாமும் மலைபோல புதைந்து கிடக்கின்றது இங்கு.  ஆனால், எந்த அளவு நண்மைகள் உண்டோ, அதேயளவு தீமைகளும் எங்கும் பரந்து கிடக்கின்றது  என்பதனை மனதில் நிறுத்தி, சுய கட்டுப்பாட்டுடனும் கட்டொழுங்குடனும் நடந்து கொண்டால், இணையத்தில் நமது பயணம் இனிமையானதாக இருக்கும்.

வாசிக்கும் பழக்கமுள்ளோருக்கு ஒரு வரப்பிரசாதம் போல் இணையத்தில் அறிவுசார்ந்த விசயங்கள் அவ்வளவு உண்டு. தரமான அரிய பலவும் நமக்குப் பயன்படும் வண்ணம் கோப்பில் கிடக்கக் காணலாம்.  'புரோஜெக்ட் மதுரை' போன்ற வலைத்தளங்கள் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும்,  வளமான வாழ்விற்கும் உகந்ததாக பலராலும் முன்மொழியப்படுகின்றது.

அதே நேரம் சுய நலமற்ற சமூகப்பார்வையெனச் சொல்லிக்கொண்டு தங்களின் தனிப்பட்டக் கருத்துக்களை  திணிக்க முயல்வோரும் இங்கு எண்ணிக்கையில் அதிகம்.  நிஜம் எது போலிகள் எது எனப் பிரித்துப்பார்க்கும் மனப்பாங்கு நம்மை காத்து நிற்கும்.இல்லையேல் பார்க்கும் அனைத்தும், படிக்கும் அனைத்தும் நம்மை சலனப்படுத்தும்.

ஒரு நாளின் பல மணி நேரத்தினை வீணடிக்கும் முக நூலும் இங்குண்டு, இவ்வுலகுக்கு மட்டுமல்ல, அவ்வுலகுக்கு தேவையான இறையான்மையும் இங்குண்டு. கழிசடைகளும் இங்குண்டு, கற்பக விருட்சங்களும் இங்குண்டு.

வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு உகந்தவற்றை மட்டுமே மனதில் நிறுத்தினால் இணையம் நமக்கு சேவை செய்யும் ஒரு சிறப்பு மையமாகும். நமது உத்தரவுகளின்படி ஆடும், பாடும், ஓடும், நமக்கென இருக்கும் ஒரு தகவல் களஞ்சியமாகவே மாறிவிடும்.

கணினியில் பல இடங்களுக்கு உலா போவதும், அதிலுள்ளவற்றை படிப்பதுமாக இருப்போரில் இருந்து மாறுபட்டு வலைப்பூவினை அமைத்து இந்த இரண்டாண்டுகள் மனதில் பட்டதை எழுதி வரும் இந்நேரத்தில், எனது பதிவுகளைப்படித்து கருத்துக்களைச் சொன்ன, சொல்லிவரும் முகம் தெரியா அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை இங்கு சொல்லிக்கொள்கிறேன்.
குறைகள் பல இருந்திருக்கலாம் அவற்றை குற்றமெனக் கருதி என்னை தண்டனைக்குட்படுத்தாத வாசகர்களுக்கும் இந்த நன்றிகள்.

தொடங்கும்போது இது ஒரு சாதாரண புகைப்பட ஆல்பம் போலத்தான் இருந்தது. அதிகம் எழுதும் எண்ணம் அப்போது இல்லை. சற்று வித்தியாசமான இரட்டைவேட புகைப்படங்களை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து ரசிக்கவே இங்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டது.  பின்பு, ஒரு சில குடும்ப நிகழ்வுகளும் இடம்பெறத்தொடங்கின.

தொடர்ந்து சில நண்பர்களின் ஆதரவான பேச்சால், என்னைச் சுற்றி நான் காணுகின்றவற்றை விமர்சிக்கத் தொடங்கினேன். அதுவே இப்போது 650 பதிவுகளை தொடும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டது. அதிலும் ஆச்சரியம், பார்க்கும் இடமெங்கும் தமிழில் வலைப்பூக்கள் வாசனையுடன் வலம் வரத்தொடங்கிவிட்டதே. தமிழ்ச் செயலிகள் வரவு நம் மொழிக்கு கிடைத்த வெற்றி என்று துணிந்து சொல்லலாம்.

நான் இங்கெழுதுவதில் ஒரு திருப்தியும் உண்டு. என்னைச்சுற்றி நடக்கும் பலவற்றையே நான் இங்கு பிரதிபலிக்கிறேன். குடும்ப நிகழ்வுகளையும் உள்ளூர் சிறப்புகளையும்,  புகைப்படங்களாக ஒரு ஆல்பம் போல வெளி நாட்டில் இருக்கும் தூரத்து உறவினர்களுக்கு காண்பித்து மகிழும் அதே நேரம், இங்கு நடக்கும் அசௌகரியங்களையும் மற்றவர் மனம் நோகாது சொல்லி வருகிறேன்.

இழிவான எதுவும் இங்கு இடம்பெற்றதில்லை. சொல்லக் கூச்சப்படும் எதையும் நான் எழுதத் துணிந்ததில்லை. அரசியலையும், மற்றவர் மதத்தினையும் நான் ஆழமாக தோண்டிப்பார்க்க எண்ணியதில்லை.  ஆனாலும் ஒரு சில நேரங்களில், மூட நம்பிக்கைகளை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதனை சொல்லியே வந்திருக்கிறேன்.

இரட்டைவேட படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தொடங்கப்பட்ட இவ்வலைத்தளம், இன்று பலரின் ஆதரவில் புதுப்பரிமாணத்துடன் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது. எனது மனசாட்சிக்கும், விருப்பத்துக்கும் ஏற்றது போல இனியும் தொடரும். 

அன்பான சூழலே எனது இலக்கு. இங்கு வரும் அனைவரும் மனதை இலகுவாக வைத்திருக்க உதவுவதே எனது எண்ணம். வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்துவிடக்கூடியது. அதனை ஒவ்வொரு நிமிடமும் மகிழ்வுடன் அனுபவிக்கும் கருத்துப்பரிமாற்றமே இங்கு இனி அதிகம் வரும். சமூக சீர்திருத்தங்கள் என போர் அடிக்கும் விசயங்கள் இங்கு இயன்றவரை இருக்காது.

எந்த பதிவுலக பட்டியலிலும் நான் இதைச் சேர்க்காததால், இந்த வலைப்பூவிற்கு வருகை புரிவோரும் குறைவுதான்.  என்னைத்தெரிந்தோர் மட்டுமே வந்து போகும் தளமாக தற்சமயம் இது இயங்குகிறது.  இதுவரைக்குமான எல்லா பதிவுகளையும் மறு ஆய்வு செய்த பின் மற்ற வலைப்பூக்களின் பட்டியலைத் தாங்கி வரும் மையத் தளம் ஒன்றில் இணைக்க எண்ணம் உண்டு.

அதை பின்னர் பார்ப்போம்.

அன்புடன்,
ராஜ்பாவ்

" ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்..."



No comments:

Post a Comment