Thursday 18 July 2013

கவிஞர் வாலி காலமானார்...

கவிஞர் வாலி தனது 82வது வயதில் நோயின் காரணமாக  காலமானார்.



எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்கு பேரும் புகழும் வாங்கித்தந்தன.  பின்னர் பல கவிதைத்தொகுப்புகளையும் புத்தகங்களையும் எழுதி வந்தார். திரைப்படங்கள் சிலவற்றுக்கு திரைக்கதையையும் அமைந்திருந்தார். கலியுக கண்ணன் அவற்றில் எனக்குப் பிடித்த ஒன்று. திரையில் முகம் காட்டத் தொடங்கிய போது நடிப்பிலும் முத்திரை பதித்தார். ராதிகாவின் அண்ணாமலை தொடரில் கடைசி சில காட்சிகளில் வந்து மனதில் இடம் பிடித்தார்.

கண்ணதாசனுக்குப் பின் கவியரசாக உலா வந்த கவிஞர் வாலிக்கு ஏனோ அத்தனைத் திறமையிருந்தும் 'கவியரசு" என்னும் பட்டம் கிடைக்காமல் போனது. அதிலும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவருக்கு அது கிடைத்ததில் பலருக்கு இன்னமும் ஆச்சரியம்.

இளம் வயது நடிகர்களுக்கும் காதல் பாடல்களை எழுதி ரசிகர்களை பரவசத்தில் அசத்தியதால் அவர் இளமைக் கவிஞர் எனவும் புகழப்பட்டார். எம்.ஜி. ஆர் முதல் தனுஷ் வரை நான்கு தலைமுறைக் கவிஞராக நிலைத்து நின்றவர் கவிஞர் வாலி அவர்கள்.

மத்திய மா நில அரசுகளால் பல பரிசுகளும் பட்டங்களும் கொடுத்து கௌரவிக்கப்பட்டாலும், மக்களின் மனதில் அவரின் கவித்திறன் என்றென்றும் நிலைத்து நிற்கும். 50 வருடங்களில் சுமார் 12 ஆயிரம் பாடல்களை இயற்றி இருக்கும் அவரின் சில புகழ் பெற்ற பாடல்கள் அடுத்த சில பதிவுகளில் இங்கே இடம் பெறும்.

No comments:

Post a Comment