Sunday 21 July 2013

வீட்டினுள் நுழையுமுன்...

வெளியில் சென்று திரும்பும் போது, பேய் தொடருகிறதோ இல்லையோ,  நோய் நம்மைத் தொடராமல் இருக்க கை கால் சுத்தம் செய்துகொண்டு வீட்டினுள் நுழைவது நல்லது.

புதிதாக குழந்தைகள் பிறக்கும் போது இதுபோல் பல வீடுகளில் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளும் இப்படி கை கால் கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் போகப் போக இவ்வழக்கம் கைவிடப்படுகிறது.

வெளியில் தினம் தினம் பலரையும் நாம் சந்திக்கிறோம். அவர்களுடன் கைகுலுக்குகிறோம். அவர்களின் பொருட்களையும் கையாளுகிறோம், சில நேரங்களில் பொது இடங்களில் உள்ள பொருட்களைக்கூடத்தான். பொது பேருந்துகளிலும், வாடகைக் கார்களிலும் பயணிக்கிறோம். இதுபோன்றவை எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறதென்று நமக்குத் தெரியாது. இதற்கு முன் என்னமாதிரியான ஆட்கள் இதுபோன்ற பொது இடங்களிலும் பொது வாகனங்களிலும் வந்து போனார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. எந்த மாதிரியான நோய்க்கிருமிகள் இங்கெல்லாம் இருக்குமென்பதும் நாம் யூகிக்க முடியாத ஒன்று.

 நம்மைத் தொற்றிக்கொண்டு நம் இல்லங்களில் உட்புகுந்து ஒன்றுமறியா நம் குடும்ப உறுபினர்களை தாக்காதிருக்க,  முதற்கட்ட பாதுகாப்பாக அமைவது இப்படி நாம் கை கால் முகம் கழுவிக் கொண்டு வீட்டினுள் அடியெடுத்து வைப்பதே.

"வாய் கழுவாராயினும் கை கழுவ
கழுவாக்கால் நோயாவர் கையழுக்குப் பட்டு"
என்பது நகைச்சுவைக்காக சொல்லப்படும் புதுக்குறள். ஆனல் அதன் முக்கியத்தை எண்ணிப்பாருங்கள். 

ஆரோக்கியம் பேணுவோர் அனுசரிக்கும் முறை இது. நாமும் பின்பற்றுவோமே...

No comments:

Post a Comment