Sunday, 28 July 2013

தெய்வத் தமிழ்...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது நம் தமிழ் மொழி.  தமிழறிஞர்கள் இதனை மீண்டும் மீண்டும் நம் நினைவில் நிறுத்த எவ்வளவோ பாடுபடுகின்றனர். தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவுதல் வேண்டும் என்பதற்கொப்ப பலவாறும் தமிழ் உணர்வை நிலை நாட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள். கற்றறிந்த தூய உள்ளம் கொண்ட பெரியோர்களின் வேண்டுதலை ஏற்று தமிழ் மொழியை  நடைமுறையில் பின்பற்றிட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

இன்றைய தமிழ், அடுத்த தலைமுறையில்  காலெடுத்து வக்கும்போது என்ன ஆகுமோ எனும் பயம் இப்போது நமக்கு வருகிறது. கல்வியில் வளர்ச்சி காணும் குடும்பங்களும் இதற்கொரு காரணம். பல்கலைக்கழகங்களுக்கு போகும் நம் பிள்ளைகளின் தொடர்பு மொழி ஆங்கிலமாக மாறிவருகிறது இப்போது.  பயிற்சிக்காகவும் படிப்புக்காகவும் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறில்லை. வீட்டில் உரையாடும் மொழியாக தமிழ் இருந்ததென்றால் மெத்த  மகிழ்ச்சி. பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லித்தாருங்கள். ஆனால், தமிழ்மொழிக்கடுத்து அது இருக்குமேயானால், நம்மொழிபால் நமக்கிருக்கும் கடமை உணர்வை நிலை நாட்டுபவர்களாகிறோம்.

நாம் ஆங்கிலத்துக்கு எதிரியல்ல. ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் எனச்சொல்லியும் வருகிறோம். ஆங்கிலம் கற்றுக்கொள்வது பலவகைகளில் நமக்கு உறுதுணையாகவும் இருக்கிறதென்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே ஆங்கிலத்தை ஆதரிப்பது  தவறெனவும் தோன்றவில்லை. ஆங்கிலம் நமக்கு இரண்டாம் மொழியாக அவசியம் தேவை. ஆயினும் தமிழ் மொழியினை வாழவைக்க நாம் தமிழில் எழுதவும், படிக்கவும், பேசவும் வேண்டும். அதே நேரம், நமக்குத்தெரிந்த மற்றவர்களையும்  நம் மொழியில் ஆர்வம் கொள்ளச்செய்வது ஒரு புண்ணியம் சேர்க்கும் செயலாகும்.

 நமக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய தமிழ் நாட்டில் கூட ஆங்கில கலப்பில்தான் தமிழ் உரையாடல்கள் இருக்கின்றன. கல்விகற்றதும் அவர்களின் அடுத்த இலக்கு அமெரிக்கா என இருப்பதால் அந்த மோகமோ....?

தமிழ்த் தலைவரென தமிழகத்தை ஆட்சி புரிந்தோர்கூட தமிழுக்கு வேறெதுவும் செய்திடக் காணோம். தமிழுக்கு உயர்ந்த இடத்தை பெற்றுத்தந்துவிட்ட பெருமை அதற்கு உழைத்த மற்ற அறிஞர்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆட்சியின் போது அப்படி ஏதும் செய்திருந்தால், தமிழ் நாட்டுத் தமிழ் இப்படி "கலப்படத் தமிழ்"ஆகி இருக்காது . இத்தனை வருடங்கள் சென்றபின்தான் சித்திரை மாதத்தில்  வருவது நமது வருடப்பிறப்பல்ல என்றே தெரியவருகிறது சிலருக்கு. வேறென்ன பெரிதாக அவர் போன்றோரிடமிருந்து எதிர்பார்த்துவிட முடியும்....?

உண்மைத் தமிழ் நம் நாட்டில் இன்னும் உயிருடனேயே இருக்கிறது. படிப்பறிவில்லாத பலரும் ஆங்கில கலப்பில்லாத தமிழையே பேசிவருகிறோம். படித்தோரில் சிலர் பழக்கம் காரணமாக அப்படி சற்று இடம் மாறிப்போயிருக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் அவர்களையும் அணைத்துச் செல்லும் சாத்தியம் இன்னும் நிறையவே இருக்கிறது.

தமிழ் மொழி பல மாறுதல்களுக்குப் பின்தான் இந்த தற்பொதைய நிலையை எட்டியிருக்கிறது என்பதை 1950ம் வருடமுதல் இருக்கும் பழைய புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம் தவிர இதர பலமொழிகளினால் கவர்ந்திழுக்கப்பட்ட ஒன்றாகவே அன்றைய தமிழ் நூல்கள் இருந்திருக்கின்றன. எழுத்தாளர் வட்டங்களில் சுய தமிழில் எழுதியோர் மிகக் குறைவே. அன்று நம் மொழி பிறரையும் தன் பக்கம் இழுக்கும் காந்தம் போன்றதொரு சக்தியை கொண்டிருந்திருக்கிறது. பல மொழிக்கலப்பென பெருமிதப்பட நம் முன்னோர் தயாராயில்லை. கால ஓட்டத்தில் அவர்களின் சிரத்தையினால், வேண்டாத பிற மொழி வார்த்தைகள் அகற்றப்பட்டு தூய தமிழில் எழுத்துலகம் சிறக்கத் தொடங்கிவிட்டது.

இன்று அப்படிச் சீரியக் குணங்களுடன் இருக்கும் தமிழ் நம் பெருமைக்குறியதாகிறது. தமிழில் பேசுவோர் அதிகரித்தால் மட்டுமே இது நிலைத்து நிற்கும். சுருங்கும் தமிழ்ப் பள்ளிகள் அந்த சந்தேகத்தை நமக்கூட்டுகின்றன. வீட்டில் தமிழ் பேசுவோரும் குறைவது போல் படுகிறது. தமிழ் நாளிதழ்களை வாங்குவோர் எண்ணிக்கையும் அப்படி உயர்வதாக இல்லை. எனவே நமக்கு வரும் பயம் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றே.

" ஐம் சாரி. எனக்கு தமிழ் வராது...." என ஸ்டைலாகச் சொல்வதை நிறுத்தி, தினமும் சில நிமிடங்கள் பேசிப் படிக்க முயன்றாலே  போதும், பல மாறுதல்களை சில நாட்களிலேயே நம் கண்கூடக் காணலாம்.


No comments:

Post a Comment