Sunday, 28 July 2013

மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி?

பிரச்சினை என வரும்போது, எவ்வித விருப்பு வெறுப்புமின்றி அறிவின் துணைகொண்டு ஆராய்ந்தறிவோர் என்றென்றும் வாழ்வில் மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார்கள்.

சுடு சொற்களும், கடும் தண்டனைகளும் இவர்களிடம் இருந்து வராது. வாழ்க்கை அனைவருக்கும் சமமென நினைப்பவர்கள் இவர்கள்.  வாழ்க்கை வாழ்வதற்கே என வாழ்பவர்கள். அதனால் "வாழு, வாழவிடு" என்பதே இவர்களின் ரகசிய கடவுச் சொல்லாக இருக்கும்.

மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி என்போரைப்பற்றியே நாம் இங்கு  பேசிக்கொண்டிருக்கிறோம்.

அப்படியொரு தனிப்பிரிவாக யாரும் இல்லையென்றாலும் தாங்கள் கடந்து செல்லும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் சாதகமாக மாற்றுந் திறன் கொண்டோர் இந்த பட்டியலில் சேர்கிறார்கள்.

மற்றவர்கள் கையாளும் முறைகளைப்பற்றி அவ்வளவு தெரியாத நிலையில், நான் பொதுவில் எந்தெந்த வழிகளில் மகிழ்ச்சியாக இருக்க முனைகிறேன் என்பதனை பகிர்ந்து கொள்வதில் எனக்கெந்த ஆட்சேபனையும் இல்லை.

எப்போதுமே மற்றவர்களோடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. நான் நானாகத்தான் வாழமுடியும். என்னைவிட பல நற்குணங்கள் பலருக்கு இருக்கலாம், என்னைவிட மேல் நிலையில் அவர்கள் சுகமாக வாழலாம், ஆயினும் என்னிலும் வசதியற்றோரும், குணப்பண்புகள் குறைந்ததோரும் இந்த உலகில்  இருப்பதனால் நான் கவலைப்பட ஒன்றுமில்லை. எனவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  அடுத்தவர் மெச்சும்படியாக நான் எதையும் செய்வதில்லை. அதனால் பெரியளவில் பாதிப்பும் எதுவுமில்லை.

எல்லோருக்கும் குறைகள் உண்டு. அப்படி எனக்கும் உண்டு. ஆனால் என் குறைகளில் நான் என்றும் மிரண்டு போனதில்லை. அவ்வளவு குறைகள் என்னிடம் இல்லை என்றெண்ணுவதால், நல்ல அதிர்வுகளில் எண்ணங்கள் எனக்கு மகிழ்வைத் தருகின்றன.

இருதய நோய்க்கான அறுவை சிகிச்சை முடிந்த நேரம் அது. என்னைப்பார்க்க வந்திருந்தோரில் சிலர், " புது வாழ்வைத் தொடங்குகிறீர்கள், வாழ்த்துக்கள்" என்றனர். பலவீனமாக இருந்த இதயம் அறுவைசிகிச்சைக்குப் பின் பலம் பெற்று புத்துணர்வுடன் செயல் பட தொடங்குவதை பாராட்டியே அப்படி சில வாழ்த்துக்கள். அவர்களுள் ஒருவர், " உங்களுக்கு இது இரண்டாம் பிறப்பு. வாழ்க்கையை எஞ்சோய் பண்ணுங்க..." என்றார். பார்வையாளர்கள் ஏதாவதொன்றை சொல்லியவண்ணம் இருந்தனர். "இனி வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள் உங்களுக்கு. ஆயினும், இன்றே உங்கள் கடைசி நாளென வாழுங்கள்", என்றார் மற்றவர் ஒருவர். அந்த 'கடைசியாக' என அவர் சொன்னது அவ்வப்போது மனதில் தோன்றி மறையும்.

இதுவே என்னுடைய இறுதி நாளாக இருந்தால், எனக்கேன் பேராசை...? நான் ஏன் மற்றவர்களுடன் பகைமை பாராட்டவேண்டும்... ?அடுத்தவர் குறைகளையோ, குற்றங்களையோ காண எனக்கு நேரமிருக்குமா என்ன...? பகைமையும் குதர்க்கமும் மனதில் இல்லாதபோது மகிழ்ச்சி அங்கே, தானே நிறைந்திருக்கும்.

சற்று நிதானமாக எண்ணிப்பார்த்தால் சில உண்மைகள் விளங்கும். நமது குறிக்கோள் மகிழ்ச்சிதான் என்றால், வீண் கவலைகள் எதற்கு? ஆகவே, எதைச்செய்தாலும் மகிழ்வுடன் முடியும்படியாக அவற்றைப் பார்த்துக்கொள்வேன். கலகலப்பானவர்களோடு பழகுவது, புன்னகை தவழும் முகத்தினரை நண்பர்களாக்கிக்கொள்வது எனும் சில செயல்கள் எனக்கு நன்மைகள் தருவதாக நினைக்கிறேன்.

 நமக்கு முன்னால் வாழ்ந்தோர் சொன்னவற்றில் 80 விழுக்காடு நன்மைகளே அதிகம். அதில் நேர்மறை எண்ணங்களை மனதில் பதியவைப்பதன்வழி நாம் இனிமையாக வாழ்ந்திட முடியும். யாருக்கு இல்லை பிரச்சினைகள்? பிரச்சினை ஒன்றே நம் கண்ணுக்குத் தெரிந்தால் நாம் நம் இலக்கைவிட்டு நகர்கிறோம் என்று பொருள். எதிலும் முன்னேற்றம் தரும் நேரான சிந்தனைகளை தூண்டிவிடுவதன் மூலம் நம் மகிழ்ச்சியை நாம் இரண்டு மடங்காக்கலாம்.

மற்றவர் சொல்வதை கேட்பதில் தவறில்லை. ஆனால், அதற்கொரு எல்லையை வகுத்திடுவது எனது வழக்கம்.  அறிவுரைகள் சொல்ல பலரும் உண்டு. அது இனாம்தானே என கேட்பதற்கு, எனக்குத்தான் நேரமில்லை.  பெரியோர் சொல் வேதவாக்கு எனச் சொல்லி வந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை திரும்பச்சொல்லி அவர்களோடு  நான் தர்க்கம் புரிவதில்லை. எனவே பெரியோர் நட்பும் பாசமும் எனக்கு நிறையவே உண்டு. அப்புறம் மகிழ்ச்சிக்கு என்னங்க குறை....?

இன்னொரு முக்கிய காரணத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். என்னைப்பற்றி தீவிரமான எதையும் நான் என் மனதில் அலைபாய விடுவதில்லை. " அடடா, இப்படிச் செய்துவிட்டேனே..." என வருந்தி என்னையே நான் நொந்து கொள்வதில்லை. " பரவாயில்லை, அடுத்த முறை சரியாய்ச் செய்வோம்." என்றே மனதை வழக்கப் படுத்தி வைத்திருக்கிறேன். இதற்கு அதிக நாட்கள் பிடித்ததென்பது உண்மைதான். சின்னச் சின்னதாக எனது தவறுகளை மலைபோல எண்ணி வருந்தி உடல் நலத்தைக் கெடுத்துக்கொண்டதுண்டு முன்பு. அனுபத்தின் காரணமாக இப்படி என்னை நானே குறைபட்டுக்கொள்வதில் இருந்தும், சுய அனுதாபத்தில் இருந்தும் மீண்டுவிட்டேன். சரியானவற்றை நாம் சிந்திக்கவும் செயல்படவும் துணியும்போது, இயற்கையாகவே மகிழ்ச்சி நம்மை ஓடோடி வந்து அணைத்துக்கொள்ளும். 

எல்லாப் பிரச்சினைகளிலும் ஏதாவதொரு நல்லது இருக்கும் என நினைப்பவன் நான். ஆக்வே நிரந்தர துயர் என நான் எதிலும் என் காலத்தை கழிப்பதில்லை.  உடல் நோய்வாய்ப்பட்ட போத்குகூட, " அடுத்து என்ன செய்திட வேண்டும் " என சிந்தித்தது உண்டே தவிர, "ஐயோ அடுத்து என்னாகுமோ..?" என பயந்தது இல்லை. பொருளாதாரத்திலும், குடும்ப நிலவரங்களிலும் ஏற்படும் பிரச்சினைகள் சமாளிக்கும் படியாகவே இருந்துவந்திருக்கின்றன இதுவரை. என் குடும்பத்தினரின் வற்றாத அன்பும் புரிந்துணர்வுமே என்னை மீண்டும் மீண்டும் எழுந்துவர பேருதவி புரிந்திருக்கிறது. அதை எண்ணுகையில், மகிழ்ச்சியின் ரேகைகள் என் முகத்தில் ஓடக் காண்கிறேன். ஆக, மகிழ்ச்சியாக வாழ குடும்பத்தினர் உங்கள் பக்கம் இருப்பது மிகவும் அவசியம்.

 நல்ல நண்பர்களின் சேர்க்கை நமக்குத் தேவைதான். அவர்களே நம் சுதந்திர உணர்வுக்கு பக்க பலமாக இருப்பார்கள். நம்மோடு அவர்கள் இருக்கும் துணிவு பல நேரங்களில் நமக்கு நிம்மதியையும் தருகின்றதாக இருக்கும். ஆயினும், " உனது சிறந்த நண்பனே, உன்னுடைய மிகப்பெரிய எதிரியாவான்..." என யாரோ சொன்ன ஒரு கருத்தையும் மனதில் ஒரு ஓரத்தில் வைத்திருப்பது அவசியம். இதனால் பெரிதாக நாம் அவர்களிடம் இருத்து எதையும் எதிர்பார்த்து ஏமாற்றம் கொள்ளாமல் இருக்க உதவும். நட்பும் நிரந்தரமாகும். இவற்றையும் மீறிய சந்தர்ப்பங்களில், சில நண்பர்களை அந்த பட்டியலில் இருந்து அகற்றிவிடுவது இன்னும் சிறந்ததாகும். உறவினர்களும் இதன் படியே நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஒத்துவராத உறவு நமக்கு வீண் மனவேதனையைத்தான் தரும். ஒன்றுக்கு பத்துமுறை யோசித்தே இந்த முடிவை நான் எடுக்கிறேன். அதனால் எனக்கு, உறவினர்களும் குறைவு, நண்பர்களும் குறைவு. அவற்றோடு பல பிரச்சினைகளும் குறைவென்பதையும் இங்கு சொல்லவேண்டி இருக்கிறது. அமைதியான வாழ்விற்கு வேறென்ன வேண்டும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, எந் நேரமும் ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருக்கும் பழக்கம் நமக்கு வரவேண்டும். சோம்பலில், நோயுற்றவனைப் போல் காட்சித் தருவது நமது இலக்கினை வெகு தூரம் கொண்டு செல்லும் செயலாகும். மகிழ்ச்சியே நமது குறிக்கோள் என முடிவெடுத்தால், ஒன்றும் செய்யாமல் நேரத்தைச் செலவிடுவது சரியல்ல. பலனை எதிர்பார்த்து செய்யாவிட்டாலும், நமது செயல்களில் ஒரு நேர்மையும், பிறருக்கு பயன் தரும்படியும் இருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டும். நான் பகுதி நேர மருத்துவ அட்டை விற்பனையில் இருப்பதனால், பலரிடம் பேசவேண்டியதிருக்கிறது. பலர் பல காரணங்களுக்காக "வேண்டாம்" எனச் சொல்வதுண்டு. ஆயினும், மருத்துவ அட்டையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்வதே எனது கடமை என நான் நினைப்பதால், வருமானம் பற்றி நான் வருந்துவதில்லை. ஆனால், பலரையும் நான் பார்க்கவேண்டியதிருப்பதால், கருத்துப் பரிமாற்றத்தில் நான் மகிழ்வடைகிறேன். என்னிடமிருந்து அவர்களும், அவர்களிடமிருந்து நானும் பலவற்றைக் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு மன நிறைவை தருகிறது. 
மற்ற நேரங்களில், குழந்தைகளுக்குத் தேவையானவற்றை செய்வதிலும், படிப்பதிலும், வலைப்பூ எழுதுவதிலும் மற்றும் மனைவியோடு ஸ்கிரபள் எனும் வார்த்தை விளையாட்டு என பலவித வேலைகளில் நான் மூழ்கிவிடுகிறேன்.  அமைதியாக ஏதும் செய்யாமல்  ஒரே இடத்தில் இருக்கிறேன் என்றால், அன்று எனக்கு உடல் நலம் சரியில்லை என்று பொருள்.

இதுவரையில் நாம் பார்த்தது, நாம் மகிழ்ச்சியாக வாழ நமக்கிருக்கும் வாய்ப்புக்கள். ஆனால், நாம் உடல் நலம் கருதி மகிழ்ச்சியாக வாழ்ந்தாகவேண்டியதும் இருக்கிறது. மருத்துவ சூழலில் இதை நாம் காணவேண்டும்.

பொதுவாக உணவருந்தும் போது, நாம் எவ்வித சலனமுமின்றி மகிழ்வோடு உணவருந்தவேண்டும். உணவின் ஜீரணத்திற்கு நம்மிடம் உள்ள சுரப்பிகளின் பங்கும்  உதவுகிறது.  தேவையான ஜீரண "என்ஸைம்ஸ்" உணவை முறையாக ஜீரணிக்கச் செய்து உடலில் பல பாகங்கள் சரிவர இயங்க உதவுகின்றது. வாயிலிருந்து உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குப்போய், அங்கிருந்து சிறு குடல், பெருங்குடல் என போகும் வரை இந்த ஜீரண என்ஸைம்ஸ் ( டைஜெஸ்டிவ் என்ஸைம்ஸ் ) தனது பங்கினை சிறப்பாக செயல்படுத்துகின்றன. இதற்கு நாம் மகிழ்ச்சியாக இருப்பதென்பது அவசியம். ஜீரணக்கோளாறு வயிற்று வலியினைத்தரும். நெஞ்சிலும் களுத்திலும் வலி பரவுதல் என சில வேலைகளில் இருதய நோய்க்கான  போலியான காரணிகளை காண்பிக்கக் கூடும். அதுமட்டுமல்ல. குடலில் சரியான அளவு பித்த நீரைச் சுரக்கச்செய்து மலச்சிக்கலையும் தவிர்க்கிறது.இவை அனைத்தும் முடங்கி பலவித நோய்களை தருவித்துவிடும் நாம் மகிழ்வாக இல்லாத சூழ் நிலைகள் தோன்றும் போது.


ஆக, மகிழ்ச்சியாக வாழ்வதென்பது ஒன்றுபட்ட பலவற்றின் கூட்டு முடிவு. அதன் அஸ்திவாரம் மெல்ல மெல்ல சரியான முறையில் இருந்திடல் நமக்கு நீண்ட நாள் பயனைத் தரும்.


No comments:

Post a Comment