Wednesday 10 July 2013

திருமணப்பதிவு...

பெண்கள் பல விதங்களில் பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.  அனுபவமும்  திறமையும் இல்லாதவர்கள் அதுபோன்ற பிரச்சினைகளில்  சிக்கி, திக்கு முக்காடுகிறார்கள். சிலர் மூழ்கியும் விடுகிறார்கள்.

ஒன்றைப்பற்றி தெரியாவிடினும் தெரிந்தோரிடம்  விளக்கம் பெற்ற பின் முடிவெடுப்பது சிறந்த செயலாகும். இதில் ஆண் பெண் பேதம் இல்லை. ஆயினும் ஆண்கள் பொதுவாக கூச்சப்படுவதுமில்லை, எதையும் ரகசியம் என மறைத்துச்   செய்வதுமில்லை. தன்னிச்சையாக முடிவெடுத்து பிரச்சினைகளில் வீழ்வதில் இன்னும் பெண்களே முன்னனியில் இருக்கிறார்கள். மலேசிய இளம் பெண்கள் பிரச்சினை பெரியளவில் சமூகப் பிரச்சினையாக உருவெடுக்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.

திருமணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவேண்டும் என்பது நம் நாட்டுச் சட்டம். திருமணம் புரிந்து கொள்ள விழைவோர் தங்களின் எண்ணத்தை தேசிய பதிவிலாகாவில் வழங்கப்படும் பாரத்தில் பூர்த்தி செய்து பொதுமக்களின் பார்வைக்கு 21 நாட்கள் வைக்கப்பட்டு, பின்னரே திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்பது அரசாங்க விதிமுறைகளில் ஒன்று.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் இல்லையா?

இல்லை....
இன்னும் பலருக்கு இந்தச் சட்ட விதிகள் தெரிந்திருக்கவில்லை. அல்லது தெரிந்தும் தெரியாததுபோல தங்களின் சுய நலத்துக்காக நடந்து கொள்கின்றனர்.

அன்மையில் மாவட்ட அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நண்பர் இது பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவருக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் ஒரு வருடத்துக்குப் பின் தன்னிடம் வந்து அழுது புலம்பியதாக கூறினார்.

"ஏன்?"

நீங்கள் கேட்கும் அதே கேள்வியைத்தான் நானும் அவரிடம் கேட்டேன். 'அர்ச்சனைத் திருமணம்' என செய்துகொண்டு ஒருவருடம் தன்னுடன் வாழ்ந்த அவர் இப்போது வேறு எங்கோ சென்றுவிட்டார்' என வருந்தினாறாம் அந்தப் பெண்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்களின் திருமணம் பதிவு செய்யப்படவில்லையாம்.

இதற்கு யார் பொறுப்பு...?

சாஸ்திர சம்பிரதாயம் பார்ப்போர் ஏன் சட்டம், பாதுகாப்பு என பார்க்க தவறிவிடுகின்றனர்...?

பலரையும் சாட்சிக்கு அழைத்து வீட்டிலுள்ள பெரியோர் ஏற்று நடத்தும் திருமணங்கள் பொதுவில் நல்லவிதமே தொடர்கின்றன. ஏதோ ஒன்றிரண்டு பிழையெனப் படலாம். ஆயினும், இப்படி ஒரு சிலரைக்கொண்டு முடியும் திருமணங்கள் பலவும் தேக்க நிலையில், இப்பவோ அப்பவோ என்பது போல இடித்துக்கொண்டும் முறைத்துக்கொண்டுமே காலத்தை கடத்துகின்றன. "எப்போது முறிந்துவிடுமோ" எனும் ஐயம் உடனிருப்போருக்கு நிச்சயம் இருக்கும். பல சந்தர்ப்பங்களில் நாமும் இப்படிப்பட்ட திருமணங்களைப் பார்த்திருப்போம்.

அதுபோல ஒன்றுதான் நண்பர் சொல்லும் இதுவும்.

முறைபடுத்தப் பட்ட, பதிவு செய்யப்பட்ட கோயில்களில் மட்டுமே திருமண பதிவதிகாரிகள் இருக்கின்றனர். எல்லாக் கோயிலகளிலும் அல்ல.

தமிழ் நாட்டிலிருந்து வரும் அர்ச்சகர்களுக்கு இங்குள்ள சட்டம் சரிவரத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் திருமணச் சான்றிதழ் இருந்தால்தான் திருமணம் செய்து வைப்போம் என அவர்கள் கூறியிருக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தினர் இதற்கு முன்னுறிமை கொடுத்து சான்றிதழ் இல்லையேல் கோயில் வளாகம் இதுபோன்ற பயன்பாட்டுக்கு தரப்பட மாட்டாது என்றிருக்க வேண்டும். ஆனால் சில கோயில்களில் நடப்பதென்ன?

திருமணச் சான்றிதழை நண்பரிடம் கேட்டு வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் ஒரு கோயில் அர்ச்சகர். நண்பர் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறவர். கோயிலுக்கு அடிக்கடிச் செல்வதால் இவரிடம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.

 திருமணப் பதிவுகள் தேசிய பதிவிலாகக்களில் மட்டுமே உறுதி செய்யப்படுகின்றன. அவ்விலாகவின் பிரதிநிதிகளாக சில திருமண கவுன்சிலர்களும் ஆலோசகர்களும் நியமிக்கப்படுகின்றனர். வேறு யாரும், அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும்கூட இதுபோல சான்றிதழ்களைக் கொடுத்துவிட முடியாது. இதுவும் அர்ச்சகர் தவறல்ல, நிர்வாகத்தினர் தவறு. தலைமைத்துவத்தின் ஏற்பாட்டில் கோயிலை நிர்வகிக்கும் குழுவில் ஒருவர் இதுபோன்ற செயல்களுக்கென  பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கவேண்டும்.

சமூகப்பிரச்சினைகளைக் களையவும், சீர்கேடுகளைக் தவிர்க்கவும் ஏற்படுத்தப்பட்டதே "திருமணப்பதிவு" எனும் சட்டமாகும். குடும்பப் பாதுகாப்பு மூன்னிறுத்தப்பட்டு, ஆண் பெண் இருவருக்குமான கோட்பாடுகள் முறைபடுத்தப்படுகிறது. இதனால், திருமணம் எனும் புனித பந்தத்தில் இணையும் இருவரும் எந்தவித சந்தேகமுமின்றியும், அச்சமின்றியும் தங்களின் வாழ்வினை மகிழ்ச்சியாக துவங்கலாம்.

இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையிலும் அன்பிலும் மட்டுமல்ல, சட்டப்பூர்வமாகவும் சரி பாதியாகிறார்கள் என்பதே திருமணப் பதிவுகளில் சொல்லப்படுகின்ற கருத்து. இவற்றை மீறிய தவறுகள் கண்டிக்கப்படுகின்றன, தவறுவோர் தண்டிக்கப்படுகிறார்கள்.

தனிப்பட்ட ஒருவருக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் நிறந்ததே இந்த திருமண பதிவுச் சட்டம்.

அர்ச்சனைத் திருமணம் என்பது இப்போது பரவாலாக நடைபெற்று வருகின்றது. நான் பார்த்த ஒரு திருமணம் இது.  மணமகனுக்கு நான்கு பேர், மணமகளுக்கு நான்கு பேர். மொத்தத்தில் எட்டு பேர்தான். இரண்டு கார்களில் வந்தனர். அர்ச்சகர்  மந்திரங்கள் ஓதி மணமுடித்து வைக்க  எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே.

"திருமணம்" எனும் ஒன்று நடந்து முடிந்துவிட்டது.  எந்தச் செலவும் இல்லை.... 'பாக்கேஜ்" எனும்படி இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். காரணம், வந்தவர்கள் "எதுவும் கொண்டுவரவுமில்லை, கொண்டுசெல்லவுமில்லை.

" வாழ்க்கையைத் தொடங்க இப்படியும் ஒரு சுலபான வழி இருப்பதை அன்று தெரிந்துகொண்டேன்.

செலவெனக்கருதினால், அனைத்தும் செலவுதானே....?

பல கேள்விகள் எண்ணத்திரையில் ஓடுவதை உணரமுடிந்தது.

 "திருமணத்தை ஏற்று நடத்தும் கோயில்கள் மலேசிய கோயில்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டதா...?  திருமணத்தை ஏற்று நடத்த ஒப்புக்கொள்ளுமுன் மணமக்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்ததற்கானப் பதிவுச் சான்றிதழ் காட்டப்பட்டதா...?  கோயிலுக்கான நகல் தரப்பட்டதா...?  அர்ச்சனைத் திருமணம் என ஏற்பாடு செய்வதற்கான அடிப்படைக் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா...?   உற்றார் உறவினர் இல்லாததன் பின்னனி என்ன....?  பதிவுக்கு விண்ணப்பித்தப்பின் காத்திருக்க வேண்டிய 21 நாட்கள் எனும் காலக் கெடு முடிவடைந்ததா..?" இப்படி பல கேள்விகள் மனதில் ஓடி மறைந்தன.

முறைப்படி பதிவு செய்யப்படாத திருமணங்கள் பல வித சந்தேகங்களை எழுப்புகின்றன. இருவரில் ஒருவர் இடையிலேயே விட்டுப் பிரியலாம், ஏற்கனவே திருமணம் ஆனவரா எனத் தெரியாது, பிரச்சினை என வரும்போது, சொத்துக்களை பிரித்துக்கொள்ளும் சிரமங்கள் பூதாகாரமாகிவிடும், பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாவார்கள்...பள்ளியில் பதிவதிலிருந்து அடையாள அட்டை எடுப்பது வரை பலவித இன்னல்களை எதிர் நோக்க நேரிடும். 

வாழ்க்கை என்பது அவசரத்தில் தொடங்கி ஆர அமர, ஆசுவாசமாக சிறமப்படுவதல்ல. அது அன்பில் துவங்கி, பண்பில் வளர்ந்து, பல பரிமாணங்களை கடந்து செல்வது...


No comments:

Post a Comment