Saturday 20 July 2013

கவிஞர் வாலியின் நினைவுகள்...

கவிஞர் வாலி திரைப்படல்கள் எழுத வரும் முன்பே டி.எம்.சௌந்தரராஜனுக்கு முருகனைப் பற்றிய பக்திப்பாடல் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் நம்மை உருகவைத்த அந்தப் பாட்டு,
 " கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உன்னை மறவேன்..." என்பதாகும். எத்தனை முறை கேட்டாலும் புத்துயிர் தரும் பக்திக்கு இப்பாடல் ஒரு உதாரணம்.

சினிமாவுக்கு முதன் முதலில் அவர் எழுதிய பாடலும் இனிமையான ஒன்று தான்.
" நிலவும் தரையும் நீயம்மா,
உலகம் ஒரு நாள் உனதம்மா? "
எனும் மனதைக் கவரும் மெல்லிசையாகும். 1958ல் அழகர் மலை கள்வன் எனும் திரையில் இடம்பெற்ற பாடல் இது.

அடுத்தது அற்புதமான பாடல்களைக்கொண்ட "கற்பகம்" திரைப்படம்.
1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம், 'கற்பகமாகும்'. கே. எஸ். கோபாலாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர்.ராதா என பலரும் திறம்பட நடித்திருந்தனர். 1964 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழ் பெற்ற படம் இது. இத்திரைப்படத்தின் மூலம் கே. ஆர். விஜயா தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அவர் மட்டுமல்ல தமிழ் நல்லுலகத்தை ஆளப்போகும் ஒரு மிகச் சிறந்த கவிஞரும் அன்று பலர் கண்களுக்கு தெரியத்தொடங்கினார்.

'பக்கத்து வீட்டு பருவ மச்சான், பார்வையிலே படம் புடிச்சான்....'
'அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா,
ஆடும்வரை ஆடிவிட்டு அல்லி மலர் மூடம்மா...'
'மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா'
'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு'

எனும் பாடல்கள் சிறந்த கதைக்கும் நடிப்புக்கும் ஈடு கொடுத்து படத்தை வெற்றி பெறவைத்தன.

ஆயினும் கவியரசு கண்ணதாசனின் முரணான போக்கினால் எம்.ஜி.ஆர் தனக்காக பாட்டெழுத ஒருவரை தேடிக்கொண்டிருந்த போது கவிஞர் வாலியின் திறமையக் கேள்விப்பட்டு தனக்கு பாட்டெழுதும்படி அழைக்க, எம்.ஜி. ஆரின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பாடல்கள் நிறைய வெளிவந்து வெற்றியடையத் தொடங்கின. அதுபோன்ற மிக அருமையான பாடல்களின் மூலம் எம்ஜிஆருடைய பேரன்பை பெற்றவர் வாலி.

சில காலத்திலேயே பலரும் தேடும் கவிஞராகவும்  உருவானார்.

இசைத்தட்டுக்கள், டேப்புகள், சிடிக்கள் மற்றும் வீடியோக்கள் விற்பனையில் உள்ளோர், " வாலி எம்ஜிஆர் ஹிட்ஸ்" சிடிக்கள் தொடர்ந்து அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதை  பத்திரிக்கைகளில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சாதனையாக கருதப்படும் இந்த சிடி விற்பனை இன்னும் தொடர்கிறது. எம்ஜிஆர், டி.எம்.எஸ் அவர்களுக்கு அடுத்து அதிகமாக விற்பனையாவது கவிஞர் வாலியின் ஆல்பங்களாகும்.

" நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்..."
" ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..."
" கண் போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா.."
போன்றவை அவற்றுள் சில.

அவரின்  இனிமையான பாடல்களில் சில...

-  வெற்றிவேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல்
-  அந்த நாள் ஞாபகம் நெஞிலே வந்ததே நண்பனே ....
-  சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
-  மல்லிகை என் மன்னன் மயங்கும்
-  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே....

இப்படி அவரின் திறமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்த பாடல்கள் இன்னும் எத்தனையெத்தனையோ...

ஒரு முறை, கலங்கரை விளக்கம் திரைப்படத்தின் போது எம்ஜிஆர் அவர்கள் 15 நிமிடத்தில் ஒரு பாடலை இயற்றித்தந்தால் தனது கைக்கடிகாரத்தை பரிசளிப்பதாக கூற, அப்போது உருவானதே " காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் " எனும் பாடல்.

நம் நாட்டில் மலாய்க்காரர்களும் சீனர்களும் அன்றைய எஸ்டேட் திரையீடுகளின் போது இந்த பாடலை பாடி மகிழ்ந்ததை நானே நேரில் கண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடலாக அது அன்று இருந்தது.

ஆயினும் எம்ஜிஆரின் கருத்துக்களுக்கு எதிரானவர்களோடு  கடந்த சில வருடங்களாக  இவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டதால், இவரின் உண்மை அபிமானிகள் சற்று வருத்தத்தில் இருந்தது வெள்ளிடை மலை.

No comments:

Post a Comment