Sunday 21 July 2013

சிரிக்கத் தெரிந்தால் போதும்...

வாய்விட்டுச் சிரியுங்கள்.  மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி பொங்க கள்ளம் கபடமில்லா சிரிப்பே சரியான வழி.

வயதாக ஆக சிரிப்பதை குறைத்துக் கொள்கிறோம் நாம்.  கடந்து வந்த அனுபவங்களும் இனி கடக்கவிருக்கும் பயணங்களும் தெளிவில்லா ஒரு நிலையை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தலாம். இதையொரு பின்னடைவாக பார்க்காமல் காலத்தால் நாம் அடையும் மனமுதிர்ச்சியையும், பக்குவத்தினையும் உபயோகத்திற்கு கொணர்ந்து கல கலவென சிரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த மனப்பாங்கினையுடைய பலர் எல்லாவித சூழ்நிலைகளிலும் இன்முகத்துடன் வாழ்வினை எதிர்கொள்கிறார்கள்.

சிரிப்பதென்பது நோய் தடுக்கும் மருந்து. வந்த பின் அல்ல, வரும் முன்னரே....

மருத்துவர்கள் சிலர் நண்பர்களாக எனக்கிருப்பதால், அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். உங்கள் வாழ்வில் ஆரோக்கியம் பெருக நிறைய சிரியுங்கள். இதுவே மருத்துவ உலகம் அறிவுரையாகச் சொல்லும் ரகசியம்.

கள்ளமற்ற சிரிப்பினில் ஆரோக்கியம் அடங்கியுள்ளது என்பதை உணர்வோம். கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிரிக்கப் பழகுவோம்.

பின் குறிப்பு: ஒரு சில மருத்துவர்கள் சிரிப்பதன் அவசியத்தை வெளியில் அவ்வளவாக சொல்வதில்லை என்றும் காதில் விழுகிறது. " உங்கள் நோயும் தொடரட்டும் எனது வருமானமும் பெருகட்டும்" என இன்னமும் ஒரு பிரிவினர் நினைக்கிறார்கள் போலும். அதற்கென்ன, பரவாயில்லை... அவர்களை விட்டுவிடுவோம். இப்போதுதான் அந்த ரகசியம் நமக்கு தெரிந்துவிட்டதே... வாய்விட்டுச் சிரிப்போம், வளமாக வாழ்வோம்.


No comments:

Post a Comment