Wednesday 28 October 2015

மம்தா மோகன்தாஸ்...மிஸ் தன்னம்பிக்கை!!!

 

 

அந்த சிரிப்புதான் என் கேன்சரை முழுமையா குணப்படுத்தியது!

 - மம்தா மோகன்தாஸ்

"வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் நடுவுல இறகு மாதிரி ஒரு மெல்லிய கோடு இருக்குன்னு சொல்வாங்க. அந்தக் கோட்டுக்கு நான் வெச்சிருக்கிற பேர் - நம்பிக்கை. நான் உயிரோடு இருக்கிறதுக்கும் உங்ககிட்ட பேசுறதுக்கும் அந்த நம்பிக்கைதான் காரணம்!" - ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளியையும் அழகாக நிரப்புகிறது மம்தா மோகன்தாஸின் மென் புன்னகை. இரண்டு வருடங்களாக மார்பகப் புற்று நோயோடு போராடி மீண்டு வந்து இருக்கும் மிஸ் தன்னம்பிக்கை.
எப்படி இருக்கீங்க?
இப்போ நல்லா இருக்கேன். மலையாளம், தமிழ், தெலுங்குனு மூணு இண்டஸ்ட்ரியில் படங்கள் நடிச்சுட்டு இருக்கேன். கடந்த ஆறு மாசமா கேன்சர் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தேன். கேன்சர் முழுக்கவே குணமாகிவிட்டதால், ரொம்பவே சுதந்திரமா உணர்றேன். தமிழ்ல இப்போ 'சிவப்பதிகாரம்', 'குரு என் ஆளு' படங்களுக்குப் பிறகு, இப்போ 'தடையற தாக்க' படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்!
கேன்சரை எப்படி இவ்வளவு ஈஸியா எடுத்துக்கிட்டீங்க?
ஹார்ட் அட்டாக், பிரஷர், ஷுகர் மாதிரி கேன்சரும் ஒரு நோய். ஆனா, அது ஏதோ பேய், பூதம் கணக்கா பயமும் அவநம்பிக்கையும் பரவி இருக்கு. 'நாம ஒரு நடிகை. நிறைய சம்பாதிக்கிறோம். நல்லா ஹைஜீனிக்கா சாப்பிடுறோம். நமக்கு எந்த நோயும் வராது'னு நினைச்சுட்டு இருந்தேன். திடீர்னு தொடர்ச்சியான இருமல் வந்துட்டே இருந்தது. உடல் எடையும் குறைஞ்சது. தற்செயலா ஸ்கேன் பண்ணிப் பார்த்தப்போ, மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துச்சு. 'கேன்சர் வந்திருச்சே'ங்கிறதைவிட, எனக்கு எப்படி வந்துச்சுங்கிற அதிர்ச்சிதான் அதிகம். 'இயற்கைக்கு முன்னாடி எல்லாருமே ஒண்ணுதான்'னு எனக்குக் கத்துக் கொடுத்தது இந்த கேன்சர். அந்த வகையில் கேன்சருக்கு நன்றி!
ஈஸியா எடுத்துக்கிட்டீங்க. ஆனா, சிகிச்சையே ரொம்ப வலி கொடுத்திருக்குமே?
உடம்பு வலியை அனுபவிச்சிருப்பீங்க! தசை வலி தெரியுமா? உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் ஊசி வெச்சுக் குத்துற மாதிரி வலி தெறிக்கும். சும்மா வீட்டுக்குள்ள அங்கே இங்கே நடக்கவே நிறைய சாப்பிடணும். வலியை மரத்துப்போகவைக்க சாப்பாட்டுக்குச் சமமா 'பெயின் கில்லர்' மாத்திரைகள் எடுத்துக்கணும். பாதி நேரம் படுத்தேதான் இருக்கணும். ஹீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கிட்டதால முடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சிருச்சு. 'பாய்கட்' பண்ணிக்கிட்டேன். ஒரு நடிகைக்கு உடல் அழகுதான் மூலதனம். அதுலயே சிக்கல்னா, சினிமாவில் எப்படி சர்வைவ் பண்ண முடியும்? என் சினிமா கேரியர் முடிஞ்சிருச்சுன்னுதான் நினைச்சேன். ஆனா, அப்புறம்தான் என் இன்னிங்ஸ் ஆரம்பிச்சுது!
'கேடி'னு ஒரு தெலுங்குப் படத்தில் நடிச்சேன். ஒரு வாரம் ஷூட்டிங்ல இருந்தா, அடுத்த 10 நாள் பெட் ரெஸ்ட்ல இருக்கணும். ஒரு மாசத்தில் நடிக்க வேண்டிய சீன்களை, ஆறு மாசம் டைம் எடுத்து நடிச்சுக் கொடுத்தேன். இவ்வளவு சிரமங்களையும் எனக்காகப் பொறுத்துக்கிட்டாங்க 'கேடி' யூனிட். அதே நேரம் மலையாளத்தில் 'கதை தொடரு', 'அன்வர்'னு நான் நடிச்ச ரெண்டு படமும் எனக்கு ஏகப்பட்ட 'சிறந்த நடிகை' விருதுகளைக் குவிச்சது! நம்பிக்கையா பிடிச்சுக்க ஒரு கை, ஆதரவா சாஞ்சுக்க ஒரு தோள் கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்தப்ப, எல்லாரும் கைதட்டி ஒரு விருது கொடுத்தா, எப்படி இருக்கும்? ரெஃப்ரெஷ் பட்டன் அமுக்கி மீண்டும் பிறவி எடுத்து வந்த மாதிரி இருந்தது!
எனக்கு இப்படி ஒரு பிரச்சினைன்னு தெரிஞ்சதுல இருந்து அம்மா, அப்பாதான் ரொம்பவே துவண்டுட்டாங்க. ஆனா, நான் நம்பிக்கை இழக்காம சிரிச்சுட்டே இருந்ததுதான் அவங்களுக்கு ஆறுதலா இருந்திருக்கு. அந்த சிரிப்புதான் என் கேன்சரையும் முழுமையாக் குணப்படுத்தியது!
ரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல நடிக்குறீங்க... எப்படி இருக்கு அனுபவம்?
அருண் விஜய்கூட 'தடையற தாக்க' படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். எனக்கு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர். அருண் விஜய் இதுக்கு முந்தி பெரிய ஹிட் எதுவும் கொடுத்தது இல்லைனு சொன்னாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி 'மம்தாவுக்கு நடிக்கவே தெரியலை. அந்தம்மா அவ்வளவுதான்'னு சொன்னாங்க. ஆனா, 'பாசஞ்சர்'னு ஒரு படம் என் கேரியரையே மாத்தி அமைச்சதே. இதுவரை நான் 25 ஹீரோக்களோட ஜோடியா நடிச்சிருக்கேன். அதில் எல்லா விஷயங்களையும் ஃபெர்பெக்டா பண்றது அருண் விஜய்தான்!
எப்போ திருமணம்?
விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. என்னுடைய சிறுவயது தோழனையே என் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இவர் பக்ரைனில் வசிக்கிறார். திருமண நிச்சயதார்த்தம் நவம்பரில் நடக்கிறது.

No comments:

Post a Comment