Saturday 12 December 2015

சில ரயில் பயணங்கள்...

எல்லோருக்கும் பிடித்த ஒன்று ரயில் பயணங்கள். மலேசியாவில் ''குபு குபு'' என கரும் புகை கக்கிச் சென்ற அந்தக் காலத்து ரயிலிலிருந்து, இன்றைய சத்தமில்லா நவீன மின்சார விரைவு ரயில் வரை ஏறியாச்சு.
ரயில் பயணம் போவது ஒரு வித்தியாசமான அழகுதான்..
சில ரயில்களை மனிதர்கள் இயக்குவதில்லை. மின்சாரமும், கணினியும் தான் அவ்வேலையைச் செய்கின்றன.
அந்த ரம்மியமான ஒரு அனுபவத்திற்காக,
மாநகரில் பணியாற்றிடும் போது பயணித்த ரயில் அனுபவங்களை நாங்களும் பெற, எங்களின் இளைய மகள் வழிகாட்டிட, இன்று பல ரயில்கள் ஏறி இறங்கினோம் என் மனைவியும் நானும்.
'பாண்டார் தாசிக் செலாத்தான்' விரைவு ரயில் நிலையத்தில் எடுத்துக் கொண்ட இரு டபுள்ஸ் படங்கள் இவை.



விலையேற்றத்துக்கு முன் ஒரு சில ரயில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என முன்னரே திட்டம் இருந்திருந்தாலும், நேரமின்மையினால் நேற்று தான் அப்படி போய்வர சந்தர்ப்பம் கிட்டியது.
மாநகரை நோக்கிய எங்கள் பயணத்துக்கு சாலாக் திங்கி ரயில் நிலையம் வசதியானாதாக அமைகிறது. பேருந்தில் இரண்டு மணி நேரம் அல்லது அதற்கும் மேலே என்றால், விமான நிலையத்துக்கான ரயில் சேவையில் வீட்டிலிருந்து சரியாக ஒரு மணி நேரத்தில் ''கே.எல் சென்ட்ரலை'' அடைந்துவிடுகிறோம்.


சாலாக் திங்கி ரயில் நிலையத்திலிருந்து, டி.பி.எஸ் இன்டெர்சேஞ் அதாவது மற்ற இடங்களுக்கான ரயில் சேவைகளை தரும் இடத்துக்கு 20 நிமிடங்களே ஆகின்றது. இங்கிருந்து ஸ்டார், கொம்மியூட்டர் போன்ற ரயில்களின் சேவைகள் நான்கு பக்கமுமாக பிரிகின்றன.



அதிக விலையேற்றம் என்பது, கோலாலம்பூரில் இருந்து கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்துக்கான சேவையில்தான் என்பதனால், அடுத்தாண்டு அப்படி பயணச் சீட்டுக்கான விலை உயர்வுக்கு முன்னர் போய் வந்ததில் மகிழ்ச்சி.
பின்ன இல்லைங்களா....
ஒரு வழிக்கான பழைய கட்டணம் 35.00 ரிங்கிட், புது வருடத்தில் இருந்து 55.00 என அறிவிக்கப் பட்டுவிட்டது. இது டூ மச் தானே.....?
யார் சொல்லி யார் கேட்குறா..... எந்த அரசாங்கம் மக்கள் கருத்தை கேட்டிருக்கு...?
இதுல இன்னொன்னும் சொல்றாங்க. "கட்டண உயர்வு' வெளி நாட்டினரைத் தான் அதிகம் பாதிக்குமாம். நம்ம மந்திரிங்க சொல்றாங்க. அவ்வளவு அறிவு ஜீவிகளை நாம் மந்திரிகளாக கொண்டுள்ளோம். 

நேற்று நான் போய்வந்தேன். இதுபோல அடுத்தாண்டு நான் போகனும்னா அப்போ நான் என்ன வெளிநாட்டுக்காரனா? அப்போதைய விலை உயர்வு என்னை பாதிக்காதா?
மடத்தனமா பேசுறதுல இவனுங்களை வேட்டிக்க முடியாது. வேற ஒண்ணுமில்ல, நாடு அப்படி போய்கிட்டு இருக்குது...
இருந்தாலும் நாங்கள் "டச் எண்டு கோ" எனப்படும் " தொட்டுச் செல்லும் அட்டையினை" வைத்திருப்பதால் விலையில் கழிவு தரப் படுவதை கவனிக்க மறக்கவில்லை. ஆனாலும் இந்த சலுகை மாநகரில் உள்ள மற்ற ரயில் சேவைகளுக்குத் தான்.




''டி. பி. எஸ்'' ரயில் சேவைகள் மாறும் இடத்தினில் இறங்கி, அடுத்து 'ஸ்டார்" ரயிலில் கோலாலம்பூருக்கு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
இந்த ரயிலில் அதிர்வுகளும், சத்தமும் சற்று அதிகம் தான். அசைவுகள், ஆட்டங்கள், குலுக்கள் என இந்த ரயில் நாங்கள் பயணிப்பது ஸ்டார் எனக் காட்டிக் கொண்டது...... பயணிகளும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, வழக்கமான பயணிகளுக்கு சாதாரணமாகப் பட்டாலும், பிரேக் வைக்கும் போது, எப்போதாவது இதில் செல்லுவோர் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லப் படுவதை உணர்ந்தேன்.

 

உள்ளே நுழைந்ததும் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருப்பது தெரிந்தது. ஆயினும், என் தோற்றத்தைப் பார்த்ததும், ஒரு இளம் சீனப் பெண் எழுந்து " நீங்கள் உட்காருங்கள் அங்கிள்" என மரியாதையுடன் என்னை அமரச் சொன்னார். அருகில் இருந்த சீன இளைஞன், புன்னகையுடன் தனது கைகளை இருக்கையின் பக்கம் காட்டி "அமருங்கள்" எனச் சொன்னது அவர்களின் நல்ல மனதை எடுத்துக் காட்டினாலும், " அடடா, நமக்கு ரொம்ப வயசாச்சி போலிருக்கே" என என்னை எண்ண வைத்தது. ( நடுத்தர வயதுக் காரர்களுக்கு இப்போவெல்லாம் யார் அமர இடம் கொடுக்கிறார்கள்..?)


ஸ்டாரில் மக்களின் நடுவே, அந்த இடர்பாடுகளில் சிக்கி அடக்கமே உருவாக அமர்ந்திருந்ததில் இருந்து, (அதாவது புகைப்படம் எடுக்க கிடைத்த சந்தர்ப்பத்தை குறிப்பிடுகிறேன்) சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது அடுத்ததாக நாங்கள் மேற்கொண்ட கே.எல் மோனோ ரயில் பயணம்.



ரயிலை செலுத்துபவருக்கு பின் பக்கத்தில் அமர்ந்தபடி, ஆகாயத்தில் போகும் குட்டி ஹெலிகாப்டரிலான பயணம் போல வாகனங்களும், ஆட்களும் கீழே தங்களது வேலைகளில் மூழ்கி இருக்க, நாங்கள் மேலே பயணித்துக்கொண்டிருந்தோம். இதை நான் வெகுவாக ரசித்தேன்.




புக்கிட் நெனாஸ் எனுமிடத்தில் வீற்றிருக்கும் கோலாலம்பூர் கோபுரத்துக்கு ( வேறு பெயர்கள் : கே.எல் டவர், மேனாரா கே.எல் ) அருகே, சில அடிகள் நடந்து செல்ல வேண்டி இருந்தது.
இந்த கோபுரத்தின் உயரம் 335 மீ (1,099 அடி). உணவருந்திக் கொண்டே நகரின் எழில்மிகு காட்சியைக் கண்டு களிக்க உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றும் உணவகமும் இதில் இருப்பதாக சொல்லப் படுகிறது. ஆயினும் ஏனோ, இன்னும் நான் இங்கு செல்ல சந்தர்ப்பம் கிட்டியதில்லை. இரட்டைக் கோபுரத்தை, அதன் 27 மாடியின் நாடு பாதை வரை சென்று வந்த எனக்கு இங்கு செல்ல மட்டும் இன்னும் ஆர்வம் வரவில்லை.
இன்று ரயில் பயணத்தை மட்டுமே இலக்காக கொண்டு ஊர் சுற்றுவதால், இன்றும் இந்த கோபுரத்தை மேலே சென்று கண்டுவர இயலவில்லை.


மற்றொன்றையும் கவனித்தேன். சாதாரண நாளானாலும் வாகனங்கள் குறைவதாகக் காணோம்.



அடுத்தது, டாங் வாங்கி சுரங்கத்தினுள் செல்லும் மோனோ ரயிலில் ஏறி, கே.எல் சென்ட்ரலை வந்தடைந்தோம். ஆங்கிலப் படங்களில் பார்ப்பது போல நிலத்துக் கடியில் போகும் ரயிலை அது வரும் போது காணும் சந்தர்ப்பம் இல்லை இங்கு. மக்களின் நெரிசல் இந்த ரயிலில் அதிகம், நிற்கக் கூட இடம் இல்லை என்பது போல ஆட்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டி, உரசியபடி நின்றுகொண்டு வந்தனர். அவர்களோடு நாங்களும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொள்ள வேண்டியதாயிற்று.




சில ரயில்களை மனிதர்கள் இயக்குவதில்லை. மின்சாரமும், கணினியும் தான் அவ்வேலையைச் செய்கின்றன...



சிறிது நேறத்தில் கே.எல் சென்ரலுக்கு வந்து சேர்ந்தோம். எல்லா ரயில் இணைப்புக்களும் இங்குண்டு என்பதனால், மக்கள் அதிகமாக காணப்பட்டனர். 
நாங்கள் வந்து சேரும் பொது மதியமாகிவிட்டிருன்தது. உணவுக்கு அலைவோரும்... அதாவது, தங்களுக்கு பிடித்த உணவுக்கு தேடி வருவோரும் கே.எல் சென்ட்ரலில் அதிக எண்ணிக்கையில் காணப் பட்டனர்.
இதனை ஒட்டியே என்,யூ சென்றாலும் இணைந்திருப்பதால் அப்படி ஒரு கூட்டம் போலும்.



பசி நேரத்தில் நாம் தேடிச் செல்வது நல்ல உணவகங்களைத் தான். அப்படி ஒரு உணவகத்துக்கு நாங்கள் சென்றோம். ''அஞ்சப்பர், செட்டி நாட்டு உணவகம்'' என்றிருந்தது, நாங்கள் சென்ற உணவகத்தின் பெயர்.
தமிழ் நாட்டு பாணியில்,
" வாங்க சார். உட்காருங்க, ஃ புள் மீல்ஸ் இருக்கு, சிக்கன் பிரியாணி இருக்கு.... தோசை, இட்லி, சப்பாத்தி இருக்கு.... என்ன சாப்பிடுறீங்க?" என முக மலர்ச்சியுடன் வரவேற்றார் சர்வர்.


உள்ளே அரசியல் வாதிகள், அலுவலக ஊழியர்கள், வங்கியில் வேலை செய்வோர் என ஒரு கூட்டம் அமர்ந்திருக்க, " அப்போ உணவு சுவையாகத்தான் இருக்கும்..." என மனதுக்குள் எண்ணிக்கொண்டிருக்கும் போதே வெளியூரில் இருந்து வந்தவர்கள் போன்ற தோற்றத்தில் இருந்த சிலரும் பசியின் தாக்கத்தில் எங்களை முந்திக் கொண்டு உள்ளே சென்றமர்வது கண்களில் பட்டது.
வெள்ளைக்கார பெண்மணிகள் சிலர் பிரியாணியை தங்களது கைகளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
'ஒரு பிரியாணி, ஒரு வெஜிடேரியன் மீல்ஸ்' என கேட்டு வாங்கி சாப்பிட்டோம்.
ருசி?
''பரவாயில்லை'' என்று சொல்லும் படியாகவே இருந்தது.

No comments:

Post a Comment