Saturday 12 December 2015

தாரிணி ரவி...

கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளி செல்லும் பிள்ளைகள் எனும்போதே நமக்குள் ஒரு தனிப்பட்ட பிரியம் ஏற்படுவது இயல்பு. அதுவும் பாடங்களில் சிறப்பு தேர்ச்சி பெறும் பிள்ளைகள் பற்றி தெரிய வரும் பொது, அவர்களின் பெற்றோரோடு நமதுள்ளமும் குளிர்கிறது.
அப்படி ஒரு சாதனைக் குழந்தைதான் தாரிணி ரவி.
7 பாடங்களிலும் ஏ எனும் சிறப்பு நிலையை பெற்று 'யூ.பி.எஸ்.ஆர்' தேர்வில் பெற்றோரை மட்டுமல்லாது, நம் சமூகத்துக்கும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்திருக்கும் அவரை இத்தருணத்தில் பாராட்டியே ஆகவேண்டும்.


அவர் இன்று நம் இல்லம் வந்திருந்தார். 
அமைதி, அடக்கம்... அவர் வயதுக்கு நிகரான பிள்ளைகளிடம் இல்லாதது போல், அப்படி ஒரு பண்பும், பணிவுமாய் நம்மோடு பழகினார். எனது மனைவிக்கும், இரண்டு மகள்களுக்கும் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. ( இந்த அமைதிக்கு உடன் இருந்த அனைவரும் அவரைவிட வயதில் மூத்தவர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.) இருந்தாலும், துள்ளிக் குதித்து தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மாணவர்களிடையே, அது ஒன்றும் பெரிய விசயமல்ல என்பது போல புன்சிரிப்புடன் வலம் வந்தது வரவேற்கத் தக்க ஒன்று, நிறைகுடம் தழும்பாது என்பார்களே, அது போல.
'அறிவியல் பாடம் தான் தனக்கு மிகவும் பிடிக்கும்' என்றார். 'தனிப்பட்ட வகையில் ஒன்றும் பெரிய காரணமில்லை... ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை சந்தேகமின்றி செய்திடுவேன், வருப்பரையில் சொல்லித் தருபவைகளை கருத்தூன்றி கேட்டிடுவேன். மற்றபடி ஒன்றுமில்லை' என தன்னடக்கத்துடன் அவர் பதில் சொல்லியது என்னை வெகுவாகக் கவர்ந்தது.
இவர் போல ஒரு பிள்ளை நம் வீட்டில் இல்லையே என அனைவரும் ஆசைப்படும் இவரை பெற்றதற்கு திரு.ரவி தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள் ஆகிறார்கள். இன்னும் பல தேர்வுகள் இடையில் இருக்க இந்த தங்க மகளை சரியான பாதையில் தொடர்ந்து வழி நடத்திச் செல்லும் பெரும் பொறுப்பு இவர்களுக்கு உண்டு.


அடுத்தடுத்த கல்வித் தேர்வுகளிலும் இவர் தனது சாதனைகளைத் தொடர அன்புள்ளங்கொண்ட அனைவரும் மனதார வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment