Sunday 3 September 2023

எனக்கென்ன...

சிறு வயதில் ஆங்கில ஆர்வத்தில் நான் படித்த மேல் நாட்டுக் கதைகளில் இது ஒன்று. ஏதோ ஒரு விழாவிற்கு சென்றிருந்த போது அங்கே இருந்தவர்களில் சிலர் "எனக்கென்ன"  என்ற வார்த்தையை பயன்படுத்திய விதத்தில் இக்கதை மீண்டும் என் நினைவுக்கு வந்துவிட்டது.

ஒரு வெள்ளைக்கார விவசாயியின் வீட்டில் ஒரு எலி வசித்து வந்ததாம். ஒரு நாள் அது தன்னை பிடிக்க வைத்திருந்த எலிப்பொறியை பார்த்துவிட்டது. 


"போச்சிடா சாமி, இதுலே மாட்டுனா என் உயிர் போயிடுமே" என்று எண்ணி பயந்து நடுங்கியது.

அது ஒரு பண்ணை வீடு. அங்கிருந்த கோழியிடம் சென்று தான் கண்டதை சொல்லி உதவி கேட்டது.

ஆனால் கோழியோ," அது உனக்காக வைக்கப்பட்ட பொறி,  அதனால் எனக்கென்ன? " என்றது.

எலி அறுகில் இருந்த பன்றியிடம் சென்று முறையிட்டு அழுதது..."என் உயிருக்கு ஆபத்து. எனக்கு உதவி செய்,  நாம் நண்பர்களாக நெடு நாள் வாழலாம்" என்றது.

ஆனால் பன்றியும் கோழியைப் போலவே "எனக்கென்ன" என்று சொல்லி போய்விட்டது.

அந்தப்பண்ணை வீட்டில் இருந்த மிருகங்களில் காளைமாடுதான் பெரிய உருவம். எலி அதனிடம் சென்று தன்னைக் காப்பாற்றும் படி கேட்டது.

"எலியே நீ அதில் மாட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிப்போ" எனச்சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றது காளைமாடு.

எலிக்கு அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. வளையில் கவலையோடு பதுங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று "பாடார்" என்று ஒரு சத்தம். அந்தப்பொறியில் பாம்பு ஒன்று மாட்டிக்கொண்டது.

சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயியின் மனைவியை அந்த பாம்பு தீண்டி விட்டது.

விவசாயி மருத்துவரை வரவழைத்து விஷத்தை முறிக்கும் மருந்தை கொடுத்தான்.

அயலூர் பண்ணையைச் சேர்ந்த கிழவி ஒருத்தி மருத்துவ தன்மை கொண்ட வேர்களை கஷாயம் செய்து, அதிலே கோழியைப் பிடித்து வெட்டிப்போட்டு அந்த விவசாயியின் மனைவிக்கு உண்ணக்கொடுத்தாள்.

விவசாயியின் மனைவியை பாம்பு தீண்டி விட்டச்செய்தி விவசாயியின் உறவினர்களுக்கும் தெரிய வந்தது. அவர்களும் வந்தனர். உணவுக்கு பன்றியை சமைத்துச் சாப்பிட்டனர். கூடமாட இருந்து அவள் நன்கு தேறிவர ஒத்தாசையாக இருந்தனர். வெகு சீக்கிறமே விவசாயியின் மனைவி குணம் அடைந்தாள்.

விவசாயியோ தன் நன்றியைக் காட்டும் விதமாக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். காளை மாட்டினை வெட்டிச் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் அணைவரும்.

"எனக்கென்ன?" என ஒதுங்கிய கோழி, பன்றி, காளைமாடு  ஆகிய மூன்றும் ஒற்றன்பின் ஒன்றாக உயிர் இழந்ததை தன் வளையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது அந்த எலி.

பல நேரங்களில் நாமும் அப்படித்தான். நம்மைச்சுற்றி உள்ளோரின் சிற்சிறு பிரச்சினைகளை நாம் சரிவரத் தீர்த்து வைக்காமல் அலட்சியப்  படுத்தி விடுகிறோம். அது பெரிதாகி நம்மையே பாதிக்கும் போதுதான் உணர்கிறோம், அது சிறியதாக இருக்கும்போதே நிலைமையை சரிசெய்திருக்கலாமே  என...


No comments:

Post a Comment