Friday 19 February 2016

எம்ஜிஆர் 100 | 2

படித்ததில் பிடித்தது...

எம்.ஜி.ஆரின் அக்கறை

------------------------------------------------------


M.G.R. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.

அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பாக்தாத் திருடன்’ படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்திருப்பார். படப்பிடிப்பைக் காண 11 வயது சிறுமியான ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாக பார்த் தார். ஜெயலலிதாவின் துறுதுறுப்பும் சுட்டித்தனமும் எம்.ஜி.ஆரை கவர்ந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிப்போம் என்று ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. எம்.ஜி.ஆருக்கே அது தெரியாது. பின்னர், இந்த ஜோடி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியிலும் திரை யுலகிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

சத்யா மூவிஸ் பேனரில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணி நடித்த திரைப்படம் ‘கண்ணன் என் காதலன்’. படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப் போல நடிப்பார். ஒரு நாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும்போது இயக்குநரிடம் ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி...‘‘இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம்.ஜி.ஆர். இறங்கிவிட்டார். ‘‘அது ரிஸ்க்கான காட்சி. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்து விட்டால் என்ன ஆவது?’’ என்று கூறி வந்துவிட்டார்.

படியில் உருள்வது டூப்தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும். சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே, முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்துக்கு மேல் நகர முடியாத படி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.

ஒத்திகையின்போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர். தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, அதற்குமேல் நாற்காலி உருண்டுவிடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு 10 முறை உறுதி செய்த பின்னர்தான் ஜெயலலிதா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.

1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:

‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.

மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’

ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.

-தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Return to frontpage

No comments:

Post a Comment