Friday, 14 December 2012

சார், ஒரு சிகரெட் இருக்கா?


மலாக்கா மிருகக்காட்சி சாலையில்  அங்கிருக்கும் மிருகங்களை பார்த்துக்கொண்டு வரும் போது இந்த குரங்கு வருவோர் போவோரிடமெல்லாம் எதையோ கேட்டுக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அருகில் சென்று   மற்றவர்களிடம்  எதைத்தான் அப்படி கெஞ்சிக் கேட்கிறது என உற்று நோக்கியபோதுதான் அந்த ரகசியம் தெரிந்தது. கையை நீட்டி, விரல்களை மடக்கி, ஒரு விரலை மட்டும் முன்னும் பின்னும் அசைத்து புகைபிடிக்கும் பார்வையாளர்களிடம் இருந்து தனக்கும் ஒரு 'சிகரெட்' கேட்கிறது இது.

ஒரு சிகரெட் கிடைப்பதற்காக ரொம்பவும் கெஞ்சுமாம் அங்கிருக்கும் சில குரங்குகள்.  பணியில் இருந்த ஒருவர் அது பற்றி விளக்கினார். "சார்...சார், பிளீஸ்...ஒன்னே ஒன்னு, ஒரு சிகரெட் மட்டும் கொடுங்களேன்..." எனும் பாவணையில் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக்கொண்டு தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டி, எப்படியாவது சுற்றிப்பார்க்க வருவோரிடமிருந்து சிகரெட்டை வாங்கி விடுமாம் இந்தப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குரங்குகள். 

புகைபிடிக்கும் பழக்கத்திற்கு இவையுமா அடிமையாகிக் கிடக்கின்றன?, மனது ஆச்சரியப் பட்டது... அதனால் தானோ என்னவோ, குரங்குகள் எவ்வித சேட்டைகளும் செய்யாமல், ஆர்வம் குன்றி, சோகமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தன அன்று.  

ஆயினும் முன்புபோல் இல்லாமால், இப்போது பார்வையாளர்கள் உணவு முதற்கொண்டு எதையுமே மிருகங்களுக்கு தரக்கூடாதெனும் கட்டுப்பாடு இன்னும் இருக்கமாக அமுல் படுத்தப்பட்டிருக்கிறதாம். காணுகின்ற குறைகளை பலரும் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்வதால், மிருகங்களின் உடல் நலத்தில் மிருகக் காட்சிசாலைகள் அதிக கவனம் செலுத்துகின்றன இப்போது. அரசாங்க மானியங்களோடு தனியார் துறையினரும்  தங்களால் இயன்ற பொருளுதவியை செய்துவருவது குறிப்பிடத் தக்கது. இதனால் மிருகங்களை கவனித்துக்கொள்ளும் பணியில் இருப்போரின் நலனும் பாதுகாக்கப் படுகிறது.

ஓய்வு நேரங்களில் இப்படி மிருகக் காட்சிசாலைகளுக்கு போய்வருவது நமது பொது அறிவை பெருக்கிக் கொள்வதுடன், அவற்றின் வறுமையை தீர்க்கும் நல்ல வழியாகவும் எனக்குப் படுகிறது. 

சரி, வாங்க zஸூவுக்கு போய்வருவோம்.... 

No comments:

Post a Comment