வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராகும் போது நமது பதிவுக்காக எடுத்த 'டபுள்ஸ்' தனிப்படம். தந்தையின் திறமைக்கு ஒரு மகளாகவும், தாயின் பாசத்துக்கு இன்னொரு மகளுமாக 'பேபி'.
திரு சுந்தரம் அவர்களும் அவர்தம் துணைவியாரும் காலை உணவு விற்பனையில் தங்களை ஈடுபத்திக்கொண்டவர்கள். அதிகாலை 4.30 மணிக்கு துவங்கும் அவர்களின் பணி, நன்பகல் பனிரெண்டு வரை நீடிக்கிறது.
தேங்காய்ப்பால் அப்பம், இட்டிலி, தோசை போன்றவை சிறந்த முறையில் கிடைக்கிறது. இவற்றோடு மீ ஹுன், மலேசிய நாட்டு ஸ்பெஷல் ' நாசி லெமாக்" ஆகியவையும் காலை நேர பசியாரலுக்கு இங்கே கிடைக்கும் ஐட்டங்களாகும்.
தேங்காய்ப்பால் ஆப்பச் சட்டி என்றிருக்கிறது. அதில் ஆப்பம் சுட்டு, கொஞ்சம் தேங்காய்ப் பால் ஊற்றி சாப்பிடுவது நம்மவர் வழக்கம். உடல் ஆரோக்கியம் கருதும் சிலர் அதில் மீன் குழம்பு ஊற்றி சாப்பிடுகிறார்கள். இப்படிச் சாப்பிடுவதில் சுவை அதிகம் என்கின்றார்கள் அவர்கள்.
இட்டிலி தோசைக்கான சட்னியின் ருசியினையும் இங்கு சொல்லியாக வேண்டும். இட்லி செய்ய அதற்கென தனி இட்லி பானை உண்டு. புழுங்கள் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு, இவையே இட்லி செய்ய தேவையானவை. இதில் முக்கியமாக உளுந்து சேர்க்கப்படுவதால், உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கிறது என்கிறார்கள்.
மல்லிகைப்பூ போன்ற இட்டிலியையும், ருசிமிகுந்த தேங்காய்ப் பால் அப்பத்தையும், மலாய் நாட்டின் சுவையான 'நாசி லெமாவும்' விரும்பிச் சாப்பிடுகின்றனர் சுற்றி இருப்போரும், இந்தச் சாலை வழி பயணம் போவோரும்.
அதுமட்டுமன்றி, இவ்விடத்தில் 'காப்பி ஷாப் அரசியலும்' உண்டு. உணவருந்தியபடி இனாமாக கிடைக்கும் நாளிதழ்களைப் படித்து பொது அறிவை வளர்ப்பவர்கள் பலர் வருகை தரும் இடம் இது என்று சொன்னால் அது பொய்யில்லை.
இங்கே வழக்கமாக வருவோர் திரு சுந்தரம் அவர்களை 'பிரதர் ஜேக்' என செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர் . ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறமை கொண்டவர் என்பதனால் என்று யூகிக்கிறேன். அவரது துணைவியார் அன்பே உருவானர். பாசத்துடன் உணவு படைத்து அனைவரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். உடன் இருக்கும் அவர்களின் மகள், பெற்றோரின் அசாதாரண சமையல் திறமைகளை கிரஹித்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.
தொழிலாக இருந்தாலும்கூட, பசியோடு வருவோர்க்கு பசிதீர்த்து திருப்தியளிக்கும் புனித சேவையாகவே இதை அவர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment