Monday, 17 December 2012

சர்க்கரை என்கிற நீரிழிவு நோய். . .

மலேசியாவின் மக்கள்  தொகையில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆப்படி அடையாளம் காணப்படும் ஒவ்வொரு புதிய நோயாளிக்கும் சமமாக அடையாளம் காணப்படாதவர் எண்ணிக்கையும் அதே அளவில் இருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இதன்படி கணக்கிடும்போது மலேசியாவில் சர்க்கரை நோயால் இதுவரை  பாதிக்கபட்டுள்ளோர்  சுமார் 5.2மில்லியன் பேர்களாகும். ( சண்டேஸ்டார்18122012).

முறையான மருத்துவ சிகிச்சை இல்லையேல் இந்நோயின் தாக்கம் ஆபத்தில் முடியும் என்றாலும் இதை உணராது  நோயுடனே வாழும் மக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

அதிகபசி, அதிக தாகம், உதடுகள் காய்ந்து அடிக்கடி சிறு நீர் கழிக்கவேண்டிய உணர்வு (சில நேரங்களில் மணிக்கொரு முறை), அதிக எடை குறைவது, கூடுவது போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.

முற்றிலும் குணப்படுத்தப்பட முடியாத, வெறும் கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்கூடிய நோய் இந்த சர்க்கரை அல்லது இனிப்புநீர் நோய். இந்த நோயாளிகளை 'மற்ற நோய்களும் எளிதில் தாக்கத் துவங்கிவிடும்' என்று நாம் கவனம் செலுத்தவேண்டியதின் அவசியத்தை சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

இருதய நோயைப் பார்த்து மிரளும் அளவுக்கு சர்க்கரை நோயைப் பார்த்து யாரும் பயப்படுவதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் மரணம் உடனடியாக வருவதில்லை என்பதே... ஆனால், இந்நோய் கண்டால், கண்பார்வை கெடுவதும், இருதய நோய் வருவதும், உடலில் ஏற்படும் புண்கள் ஆறாமல் போவதும், கிட்னிகள் பாதிப்புக்குள்ளாவதும் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்துவிடும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உடனடி தடுப்பு அம்சம் ஒன்றே ஒன்று தான். நாம் உட்கொள்ளும் இனிப்பின் அளவை தேவைப்படும் அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். " என்னால் முடியவில்லையே' என்றோ 'அட நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்..' என்றோ பிடிவாதம் காட்டுவது சிறுகக் கொள்ளும் விஷத்துக்கு சமமாகிவிடும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. ஆகவே, மருத்துவரின் ஆலோசனைகளின்படி உடனடி உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

உலக மக்கள் தொகையில் 360 மில்லியன் மக்கள் இந்த சர்க்கரை நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். நம் நாட்டில் 2006ம் ஆண்டு, 14.9 சதவீதம் இருந்தது, 2011ல் 20.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நாம் அனைவரும் உற்று நோக்கவேன்டிய ஒரு புள்ளி விவரமாகும்.

இரத்த நாளங்கள் தாக்கப்பட்டு உடல் உறுப்புகள் சரிவர இயங்க முடியாத நிலைக்குச் சென்று பின்னர் பாதிக்கப்பட்ட உடற்பகுதிகள் துண்டிக்கபடுவது இந்நோய் பற்றி நாம் அதிகம் முக்கியத்துவம் காட்டவேண்டிய காரணமாகும்.

சுமார் 60 - 70 சதவீதம் வரையிலான சர்க்கரை நோயாளிகள் நரம்பு மண்டலத்தின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உடலில் முறையான இரத்த ஓட்டம் இல்லாததனால் உடல் உறுப்புக்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்தவர்கள் எண்ணிக்கையும் கூடிக்கொண்டு போகிறது.

அதிக இனிப்பைத் தவிர்ப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment