மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை.
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
No comments:
Post a Comment