அதிகாலை நேரத்தில், மேகக் கூட்டத்தினூடே சூரியனுதிக்கும் காட்சியும், அந்தி நேரத்தில் சூரிய அஸ்தமனமும் மனதைக் கொள்ளை கொள்ளும் விதம் பிரமாதமானதாக இருக்கும்.
மற்ற நேரங்களில் 'ஜுக்ரா' என்று எழுத்து நிறுத்தப்பட்டிருக்கும் உயர்ந்த இடத்திலிருந்து கீழே பார்த்தால், மலாக்கா நீரிணை நன்கு தெரியும். இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிற்கும் மலேசியாவுக்குமிடையில் உள்ளது இந்த மலாக்கா நீரிணை. சுமார் 805 கி.மீ நீளமானதாகும் இது. பசுபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் இதில் ஆண்டுதோறும் சுமார் ஐம்பதாயிரம் கப்பல்கள் பயணிப்பதாகக் கூறப்படுகிறது.
லங்காட் ஆறு கடலில் சென்றடையும் எல்லையில் சில சரக்குக் கப்பல்கள் நிற்பதையும் நாம் பார்க்கலாம். இதுபோன்ற கப்பல்களில் இருந்து 'பார்ஜ்' எனப்படும் அகன்ற தளத்தில் பொருட்கள் இறக்கப்பட்டு, அவை பின் மோட்டார் படகுகள் துணைகொண்டு கிள்ளான் துறைமுகத்துக்கு லங்காட் ஆற்றின் வழி அனுப்பப்படுவதும் பார்க்க சுவாரஸ்யமான அம்சமாகும்.
கடந்த சில வருடங்களாக ஜுக்ரா மலை 'கிளைடிங்' என்றழைக்கப்படும் பாரசூட்டில் பறக்கும் விளையாட்டிற்கு மலேசிய அளவில் முக்கிய இடமாக விளங்குகிறது. பல நாடுகளில் இருந்தும் விளையாட்டாளர்கள் இங்கு வந்து, பந்திங்கில் உயரமான இடமான இந்த ஜுக்ரா மலையிலிருந்து பறக்கிறார்கள்.
1976ல் 25 மீட்டர் உயரத்தில் நவீன ஒளி வீசும் சாதனங்களுடன் புதுப்பிக்கப்பட்டது இந்த கலங்கரை விளக்கு. கடல் நீர் மட்டத்தைவிட 146மீட்டர் உயரத்தில் இது இருக்கிறது.
கார்களில் கீழிருந்து மேலே பத்து நிமிடங்களில் போய்விடலாம் என்றாலும், பொதுவாக அவ்விதம் போவது மலையின் உயரம் கருதி பாதுகாப்பான பயணத்திற்கு உகந்ததல்ல என்பதால் கீழே அடிவாரத்திலேயே கார்களை அனைவரும் நிறுத்திவிட்டு நடந்தே செல்கின்றனர்.
பலர் நடை பயிற்சிக்காக இங்கே வருகின்றனர். கணவன் மனைவி, பெற்றோர்களோடு பிள்ளைகள் என பல குடும்பங்கள் இங்கே நடக்க வருவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
கைகளில் தண்ணீர் பாட்டில்களோடு அவர்கள் கதை பேசியபடி மலை மேலே நடந்து போவதும், அங்கே சென்று அங்கிருக்கும் நீண்ட 'பென்ச்சில்' அமர்ந்த படி இயற்கை அழகை பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்த பின் கீழே நடந்து வருவதும் குடும்ப நல்லுறவை வளர்க்கும் செயல் என்றால் அது மிகையில்லை. மகிழ்ச்சியை நிலை நிறுத்த அருகாமையில் இருக்கும் குடும்பங்களின் தலைவர்கள் கடைபிடிக்கும் யுக்தி இது. மாதம் ஒரு முறை உணவுப் பண்டங்களோடு இங்கே வந்து பிக்னிக் போல கலகலப்பாக நேரத்தை செலவிடுகிறார்கள்.
இவ்வளவு நல்ல விசயங்கள் ஜுக்ரா மலையைப்பற்றி சொல்லப்பட்டாலும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு போகும் பாதையின் இடையே சீனர்களின் இடுகாடு இருப்பதனால் இருட்டும் முன்னரே கீழே வந்துவிடுவது நல்லது என்கின்றனர் இங்கே பல வருடங்களாய் வந்து போய்க்கொண்டிருப்போர்.
No comments:
Post a Comment