Sunday, 30 June 2013

மலர்க்கண்காட்சியில் உணவுச் சந்தை...


மலர்க்கண்காட்சிக்கு வருகை தரும் ஆயிரமாயிரம் மக்களைக் கவர இப்படி ஒரு கூடாரம் அமைத்து அதில் பல மாதிரியான, பல நாட்டினரின் உணவுகளும் பரிமாறப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது இம்முறை.

சுமார் 50 வணிகர்களின் ஆக்ரமிப்பில் இக்கூடாரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதை காண முடிகிறது.

வழக்கமாக வைக்கப்படும் உணவுச் சந்தை போலில்லாமல், இருக்கைகளுடன்,  அமர்ந்து அமைதியாக உணவருந்திச்செல்ல மேஜை நாற்காலிகளும் வரிசையாக இடப்பட்டிருக்கின்றன.

 நான் சென்ற நேரம் மதியம் ஆனதால், இன்று கூட்டமும் சற்று அதிக அளவிலேயே இருந்தது. 

மசாலா கலந்த கோழி, ஆடு, மீன் மற்றும் குருமா குழம்பு  வகைகள் நாவில் சுவையை திணித்தன.


சாப்பிடுவோமா வேண்டாமா எனும் பாதி மனதுடன் இவற்றை பார்ப்பவர்கள் நிச்சயம் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பது தெரிந்திருந்தது.  நம் மலேசியர்கள் நன்றாக சமைக்கத் தெரிந்தவர்கள்...அதில் சந்தேகம் இல்லை. இதில் பல தமிழர்களின் வீடுகளில் தினமும் சமைக்கப்படுபவை  என பார்த்ததுமே நமக்குப் புரிந்துவிடும். மசாலா வகைகள் என நாம் சொன்ன அனைத்துமே நமது 'ஒரிஜினல் ரெசிப்பியை' கொண்டு சற்று நவீன மயமாக்கப்பட்டவை.

இவை மட்டுமா, முறுக்கு, அதிரசம், கெட்டி உருண்டை, போன்ற பலவும் அவர்களின் கைபட்டு சற்றே பெயர் மாற்றம் கண்டு (முறுக்கு மறுக்கு ஆனதைப்போல ) கடைகளில் வியாபாரத்துக்கு வந்துவிட்டதை நாம் பார்த்திருப்போம்.. ஏனோ நம்மவர்கள் அப்படி எதையும் வியாபார ரீதியில் சிந்திக்க அதிக நாட்களாகிறது. உப்புமா, குழாய் புட்டு போன்றவையும் இந்தக் கதிக்கு உள்ளானவை என்றால் அது பொய்யாகுமா?

ஆயினும் அவர்கள் அவற்றை சுவைபட சமைத்து பரிமாறிடும் போது நமக்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவுமே படுகிறது.

ஆக, வருகையாளர்கள் மலர்க்கண்காட்சியை கண்டு களித்த பின், மனதுக்கு திருப்தியான உணவையும் ருசித்து மகிழ இவ்வாண்டு ஏற்பாடுகள் பிரமாதப் படுத்தப்பட்டு இருந்தன.


No comments:

Post a Comment