Tuesday, 29 January 2013

குழந்தைகள் விளையாடும் பொருளா கைபேசி?


கைபேசியில் ஏற்படும் கதிர்வீச்சினால் மூளையில் புற்றுநோய் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

பெரியோரைக் காட்டிலும் குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் கதீர்வீச்சு தாக்குதல்  குழந்தைகளை சுலபமாக பலவீனப் படுத்தும்  அபாயம் அதிகம் உள்ளது.

பொதுவாக  ரிங் போகும் போது குழந்தைகள் ஆர்வத்தோடு கைபேசியை காதுக்கருகே வைத்து கேட்பார்கள். பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட  நிஜத்தில்  ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

இப்போதுள்ள கைபேசிகள் பல விதமான விளையாட்டுக்களுடன் வருகின்றன. குழந்தைகள் சிரமம் எடுத்து கூர்ந்து கவனித்துப் பார்ப்பதால் அவர்களின் கண்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.

மேல் சொன்னவற்றை தவிர, சில பொதுவான காரணங்களுக்காகவும் குழந்தைகளிடம் கைபேசி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும்.

முக்கியமாக, பிள்ளைகளின் கவனம்  எல்லாம் கேம்ஸிலும் , எஸ்.எம்.எஸ்ஸிலும் இருந்தால் பிறகு அவர்கள்  எவ்வாறு படிப்பார்கள்?
" அட கைபேசிதானே" என பெற்றவர்கள் அலட்சியமாக இருக்கும்போது மாணவர்கள் என்ன செய்வார்கள்? கல்வியில் இதனால் அவர்கள் கவனம் சிதறுகிறது.

உண்மையில் சில பள்ளிப் பிள்ளைகள் கைபேசியில் கண்ட கண்ட வீடியோக்களை பார்க்கிறார்கள்.  இவர்களா பின் காலத்தில் உறுப்படப் போகிறார்கள்? இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு பெற்றோர்களே காரணமாக இருக்கலாமா?

கைபேசி முக்கியத் தகவல்களை  பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இருப்பதில் நன்மைகள் அதிகம் தான். ஆனால், அதற்கும் மேல் போய் பல தொல்லைகளுக்கு காரணமாகி பாதிப்பை எற்படுத்தும்போதுதான் அதன் பயன்பாட்டை தீர்மானிக்கவேண்டியதிருக்கிறது.

ஆக, குழந்தைகளின் மேல் கவனம் செலுத்தும் பெண்கள், அவர்களின்  எதிர்காலத்தை பாலடிக்கும் இந்த கைபேசியை தவிர்ப்பது அவசியம்.

இப்போது நடக்கும் பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகள் கைபேசியினை கவனக்குறைவாக உபயோகிப்பதும் ஒரு முக்கிய காரணமே.

பெண்களுக்கு முறைகேடாக வரும் அழைப்புகளைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்.

அது மட்டுமா, 'டெலி மார்க்கெட்டிங்' என தேவை இல்லா அழைப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல செலவிடும் நேரத்தை திரும்பப் பெற முடியுமா?

'ரிங் டோன்', 'ஜோக்ஸ்', 'கேம்ஸ்', 'பழகலாம் வாங்க' என பலவித விளம்பரங்களினால் 'பிரிபேய்ட்' கையிருப்பை குறைக்கும் வழிகளையும் கைபேசி நிறுவனங்கள் கற்று வைத்திருக்கின்றன.

எனவே, பல சந்தேகங்களை எழுப்பும் கைபேசி பயன்பாடு குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதை ஒவ்வொரு பெற்றொரும் தெரிந்திருப்பது சாலச் சிறந்தது.

'மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல்கூட சில நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீயாகுமா
அம்மாவென்றழைக்கின்ற சேயாகுமா?
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ'


என தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் அதே நேரம் குழந்தைகளை கண்டிக்கும் பொறுப்பும் ஒரு தாய்க்கு அதிகம் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுதல்  பிள்ளைகள் அறிவுத்திறனோடு வளர வழிவகுக்கும் செயலாகும்.

'எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே..
அது நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பினிலே...'

என எம் ஜி ஆர் பாடியது எவ்வளவு உண்மை என்பதை குழந்தைகள் வளர வளர தாய்க்குலத்துக்கு நன்கு தெரியும்...

No comments:

Post a Comment