Tuesday, 29 January 2013

விஸ்வரூபம் பார்த்தேன்...

விஸ்வரூபம் முதல் நாள் காட்சியைப் பார்த்தோரில் நானும் ஒருவன்.  ஆனால் அதில் குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எம்மதத்தையும் தரம் தாழ்த்திப் பேசப்படவில்லை.

வழக்கமாக அங்கும் இங்கும் நடக்கும் கலகக்காரர்களின் கதையில் வெளிவந்திருக்கும் ஒரு சாதாரண  படம் இது.  அவ்வளவே...

இந்தப் படத்தைப் பற்றி யாராவது தடை செய்யக்கோறி விண்ணப்பிக்க வேண்டியிருந்தால், அது திருமணமான குடும்பப் பெண்கள் சமூகம் செய்வதற்கான உரிமை இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். காரணம், இப்படத்தில் ஒரு மனைவி, மற்றோருவருடனான கள்ளத்தொடர்பால் தன் கணவனிடம் உள்ள தீய பழக்கங்களை கண்டறிந்து அதைக் காரணம் காட்டி அவனிடம் இருந்து விலக  ஒரு துப்பறிவாளரை அமர்த்துகிறாள். இது கணவனே கண்கண்ட தெய்வம் என போற்றிவரும் நம் குல மாதர்களின் அடிப்படை கௌரவத்தையே ஆட்டி அசைப்பது போலாகும். அதிலும் இலைமறைக்காயாக இருக்கவேண்டியவற்றை ஒலிபெருக்கியில் சொல்வதைப்போன்று திரும்பத்திரும்ப சொல்கின்றனர். உள்ளாடையை வார்த்தையால் சொல்வதில் அவ்வளவு சுகமோ? கமல் இதிலும் திருந்தியதாக தெரியவில்லை.

மற்றபடி சீரியஸான ஆக்க்ஷன் காட்சிகளைத் தவிர்த்து இது ஒரு சராசரிப் படம். இதைவிட மோசமான கதையினை பின்னனியாகக் கொண்ட ஏராளாமான ஆங்கிலப் படங்கள் வெளிவந்து வெற்றியோட்டம் கண்டு வரும் இக்காலக்கட்டத்தில் தமிழில் வெளிவரும் சற்று வித்தியாசமான இதுபோன்ற படங்கள் எதிர்ப்பில் மாட்டிக் கொள்வது ஆச்சரியப் பட வைக்கிறது. 

வழக்கமாக ஆங்கிலப் படம் பார்ப்போருக்கு கமலின் இந்தப் படம் அப்படி ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும் என எனக்குத் தோன்றவில்லை. அதோடு இதில் எந்த பிரமாண்டமும் இல்லை. விமர்சனம் எழுதுவோர் பல படங்களையும், பல மொழிப்படங்களையும் பார்த்து எழுதுவது சிறப்பு. இப்படி தமிழ்ப் படங்களை மட்டும் பார்த்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினால், ஒரு சிறு துரும்பை கண்ணருகே வைத்துப் பார்த்து அது மலையளவு பெரியது என சொல்வது போலாகும்.


No comments:

Post a Comment