எனக்கு விவரம் தெரிந்த அறுபதாம் / எழுபதாம் ஆண்டுகளில், ஒருவர் அணிந்திருக்கும் உடையிலிருந்தே அவர் யார், என்ன தொழில் செய்கிறார் என ஏறக்குறைய அவரின் குண நலன்கள் பற்றி விவரித்து விடலாம். நூற்றுக்கு ஐம்பது சதவிகிதமாவது சரியாகவே இருக்கும்.
ஆனால், இப்போது அப்படி சொல்லிவிட முடியாதளவிற்கு உலகமும், உலகத்தவரும் மாறிவிட்டோம்.
பெண்களில் குமரிகள் பாவாடை தாவனியிலும், குடும்ப மாதர்கள் சேலையிலும் வருவார்கள் அன்று. இன்றோ, சுடிதாரின் வருகையால் வயது வித்தியாசமின்றி அனைவரும் அதில் நுழைந்து கொள்கிறார்கள்.
ஆண்களும் இதற்கு விதிவிளக்கல்ல. சாதாரண வேலை செய்பவர்களிருந்து அலுவலக அதிகாரிகள் வரை எல்லோருமே ஒரே தரத்தில் அல்லவா உடை அணிகிறார்கள்... சீருடை இருந்தாலன்றி அவர்களில் வேறுபாட்டை காண்பது அரிதாகிறது. அதிகாரியும் தொழிலாளியும் ஒரே வித உடைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள் இப்போது. இதற்கு பொருளாதரத்தில் ஓரளவு நாம் அனைவரும் மேலே வந்துவிட்டோம் என்றே எண்ணத்தோன்றுகிறது.
வெளித் தோற்றத்திலேயே இப்படி ஒரு கஷ்டமான சூழல் இருக்கும் போது, நம்மிடம் நல்லவர்போல் நடிப்பவர்களை கண்டுகொள்வது அவ்வளவு சுலபமா என்ன??? இந்த திறன் நம்மிடம் இல்லாததனால் தான் பலரிடம் நாம் ஏமாந்து போகிறோம்.
கண்ணுக்குத் தெரியும் எதிரிகளைப் பார்த்து பொதுவில் யாரும் அஞ்சுவதில்லை. நயவஞ்சக சிரிப்பால் நம்மிடம் நல்லவர் போல் நடித்து நமக்கே நாசம் செய்ய நினைப்போரை கண்டு அஞ்சத்தான் வேண்டி இருக்கிறது.
இதையே வள்ளுவர் சொல்கிறார்,
"முகத்தின் இனிய நகா அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்"
ஆனால், இந்த நயவஞ்சகக்காரர்கள், பலரின் சாபங்களுக்கு ஆளாகியும் கண்முன்னே மிக ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் தான் உலா வருகிறார்கள்.
பல நேரங்களில் அவர்களோடு சரிசமமாக நம்மால் பேச இயலாது போகிறது. அயோக்கியர்களுக்கு அஞ்சா நெஞ்சம் அமைவது இயற்கையே. அவர்களை எதிர்த்து மனச் சோர்வுக்கு இடம் கொடுப்பதை விட, ஹிந்து தர்ம சாஸ்திரப் படி விட்டுவிடுவதே நல்லது.
நாம் மறுபிறவியில் நம்புவது இதனால் தான். முன் பிறவி இல்லாதிருந்தால் அனைவரும் ஒரே மாதிரியாக பணக்காரர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் நல்லவர்களாகவும் படைக்கப்பட்டிருப்போம். மாறுபாடுகளோடு நாம் பிறப்பதற்கு நமது கர்ம பலன் களே காரணம். ஏமாற்றுக்காரர்களும் நம்பிக்கைத் துரோகிகளும் இப்பிறவியில் இல்லாவிடினும் பின்னொரு பிறவியில் அனுபவித்தே தீரவேண்டும்.
" நீ எதைச் செய்தாலும் அதற்கு ஏற்புடையதாகவும் எதிர்மறையாகவும் உள்ள பாவ புண்ணியங்களில் சிக்கி உழல்வாய். "
No comments:
Post a Comment