Thursday, 3 January 2013

நாம் பேசுவது ஒரு கலை . . .

மற்றவர்கள் நம்மேல் வைக்கும் நற்பெயருக்கு முதல் காரணம் நாம் பேசிப்பழகும் விதமே.  நல்ல, தரமான வார்த்தைகளை உபயோகித்து மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் போது நம்மீதான நன்மதிப்பு கூடுகிறது. இதனால் அவர்களுடனான உறவும் நல்ல விதம் வளர்கிறது.

 நம் உள்ளத்தில் உள்ளதே உதட்டில் வெளிப்படுவதால், நல்லவற்றை மட்டுமே சிந்திப்பதை வழக்கத்தில் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் பண்பு நிறைந்த வார்த்தைகள் பயன்பாட்டிற்கு உணர்வுப்பூர்வமாக, உண்மையாக, அன்போடு வரும்.

தியானமும் இதைத்தான் சொல்லித் தருகிறது.  உள்ளன்போடும் உண்மையாகவும் வாழ்பவர் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பார்கள்.  நீதியானவையும், ஒழுக்கமானவையும், மெச்சத்தகுந்தவையுமே உண்மையானதாக கூறப்படுகிறது.

 நல்லெண்ணங்கள் மனதில் தோன்ற அங்கிருக்கும் தீய எண்ணங்களை முதலில் அப்புறப்படுத்தவேண்டும். அப்போதுதான் தூய்மையான விசயங்களை அங்கு நிரப்புவதற்கு இடம் இருக்கும்.

 நாம் பேசும் விதம் என்பது ஒரு கலை.  இந்த அரும் பெரும் பொக்கிஷத்தை  வைத்தே மற்றவர்கள் நம்மை எடை போடுகிறார்கள். இந்தக் கலையில் வெற்றி பெருபவர்கள் மற்ற அனைவரையும் தங்கள் பால் வசீகரித்துக் கொள்கிறார்கள். சிறுவர் முதல் வயோதிகர் வரை இந்த இனிமையான பேச்சினால் ஈர்க்கப்படுகிறார்கள்.  ஒரு சிலரைச் சுற்றி கலகலப்பான ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருப்பதற்கும் இதுவே காரணம்.

பலர் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும்போது எல்லோரிடமும் இனிமையாக பேசிப் பழகுவார்கள்.  ஆனால், வாழ்வில் ஆனந்தம் அகன்றிடும் போது, அவர்களிடம் இருந்து வரும் வார்த்தைகளும் தடிக்கத் தொடங்கி விடும்.  கையில் இருப்பதிலும் செய்யும் காரியத்திலும் திருப்தி இல்லாத போது நிம்மதி காணாமல் போகிறது. அப்போது அங்கே அளவுக்கு மிஞ்சிய வெறுப்பு உதயமாகிறது.

இப்படியொரு சூழலில், இனிமையான வார்த்தைகள் எங்கிருந்து வரும் என சிலர் நினைக்கக்கூடும்.  உண்மையில் நமது குலத்தையும், குணத்தையும் நிர்ணயிப்பது நமது பூர்வீகம் அல்ல. நமது பழக்க வழக்கங்களே. பண்போடு வளர்ந்தவர்கள் எந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலும் தரம் இழக்க மட்டார்கள்.

ஆக, எப்போதும் இனிமையாக பேசிப்பழகுவோம், இன்பமாக வாழுவோம். மலர்ந்திருக்கும் இந்த 2013 ஆண்டானது, நமக்கு எல்லா வளங்களையும் வழங்கிட வேண்டிக்கொள்ளும் அதே நேரம், எனது அன்பான வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment