Friday, 9 November 2012

அங்கும் மழை, இங்கும் மழை. . .

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக வட கிழக்கு பருவ மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களைத் துண்புறுத்தி வருகிறது.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் நான் தமிழகத்தின் சென்னையில் பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வருகிறது. ஆனால் அன்று, அதிக உஷ்ணத்தினாலும் தூசியினாலும் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இப்போது நிலைமை வேறு.

பல இடங்களில் கன மழை காரணமாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளில் மழை நீர் தேங்கி, போக்கு வரத்தை ஸ்தம்பிக்கச் செய்வதுடன் பொதுமக்களின் தினசரி வாழ்க்கையையும் இயங்கவிடாமல் செய்துவிட்டது. இறந்தோர் எண்ணிக்கை ஐம்பதை தொடுகின்றது. நாளிதழ்களில் இதுபோன்ற செய்திகளை படிக்கும் போது மனதுக்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கிறது. என்னதான் சிறப்பாக வளர்ந்தாலும் நம் பூர்வீகம் அங்குதானே... அதனால் ஏற்படும் மனச்சலனமோ ..? பெரியோர் பலரும் தமிழ் நாட்டு நிலை குறித்து கவலைப் படுகின்றனர்.

இதுமட்டுமின்றி, தானே புயலால் வீடு இழந்து தவிப்போர் எண்ணிக்கையும் அதிகம். இயற்கைச் சீற்றங்ளால் மக்கள் பாதிக்கப் படும் நேரம் அரசாங்க நிவாரணப் பணிகள் எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்து தமிழக அரசு எடுத்திருக்கும் துயர் துடைப்பு சேவையை பாராட்டத்தான் வேண்டும்.

தண்ணீர்  தண்ணீர் என மற்ற மாநிலத்தவரை எதிர்பார்க்கும் நேரம், இப்படி தேவைக்கும் அதிகமாக வெள்ளப் பெருக்கில் மக்கள் அவதிக்குள்ளாவது சரி வர விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று.

இம்முறை மலேசியாவிலும் பல இடங்களில் இது போன்ற சேதங்களை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர். கால்வாய்களில் மழை நீர் நிரம்பி காய்கறி தோட்டங்களில் புகுந்து பல லட்சம் வெள்ளி இழப்புக்களை ஏற்படுத்தியவாறு உள்ளது.


நான் வசிக்கும் பகுதியான இங்கேயும் கடந்த மூன்று வாரங்களாக தினந்தோறும் மழை. அதுவும் அந்தி மழை. அந்தி மழை அழுதாலும் விடாது என்பார்கள். அது மிகச் சரி. மாலையில் செய்யும் எல்லா காரியங்களும் தடைபடுகின்றன.


வடிகால் பாசனத்துறை நம் நாட்டில் அவ்வளவு மோசமாக இல்லாதிருப்பதால் ஆங்காங்கே மட்டுமே வெள்ளத்தினாலான பாதிப்புக்களைப் பார்க்கிறோம். மற்றபடி,  நாற்பது  வருடத்திற்கு முன்பிருந்த நிலை தற்போது இல்லை.

அந்தக்  காலத்தில்,  நம் சமூகத்தினர் பலரும் பால் மரம் வெட்டும் தொழிலாளிகளாக இருந்தோம். மழை பெய்தால் வேலை இல்லை எனும் நிலையால், வருமாணம் பாதிக்கும். அதனால் மழை என்றாலே அப்படி ஒரு பயம் பலருக்கும்.


கொஞ்சமோ அதிகமோ...  மழை, செடி கொடி மரங்களின் பசுமையை வளர்க்கிறது. வற்றி வரும் ஆறு, குளம், கால்வாய், நதி என நீர் வளங்களை நிறையச் செய்து நமது எதிர் காலத் தேவையை பூர்த்தி செய்கிறது. 

No comments:

Post a Comment