Thursday, 22 November 2012

மூளை இருக்கா...?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புதிய சவால்களைச் சந்தித்து வருகிறோம் இப்போது. காலையில் துயில் நீங்கி எழும் நேரம் தொடங்கி அன்றைய சவால்களைச் சந்திப்பதற்கும் அவற்றை வெற்றிகரமாக கடந்து வாழ்வை மகிழ்ச்சியாக தொடர்வதற்கும் '   நம்மால் முடியும்' எனும் மாபெரும் உந்துதல் சக்தி நமக்குத் தேவைப்படுகிறது. இவ்விடத்தில் நமக்கு பக்கபலமாக துணைக்கு வருவது நமது மூளையின் பங்களிப்பான 'அறிவும் ஆற்றலுமே'.

பல மாதிரியான தொடர் பயிற்சிகள் மூலம் சோம்பிக் கிடக்கும் நமது மூளையினை மொத்த பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிடலாம். 'மூளையின் வளர்ச்சி நாம் அதற்களிக்கும் பயிற்ச்சியிலே' என பொதுவாகச் சொல்வது உண்டு. இதிலிருந்து பயிற்ச்சி பெறாத மூளை வளர்ச்சியடைவதில் சுணக்கம் காட்டுவது தெரிகிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றனர் பெரியோர். இங்கே 'எண்' எனப்படுவது "கணிதத்தையும்", எழுத்து எனப்படுவது மொழியையும் குறிக்கும். நாம் தமிழர்களாக இருப்பதால் 'தமிழ் கற்பது அவசியம் எனக் கொள்ளலாம'. இவை இரண்டும் நமது மூளையின் வெளிப்பாடான அறிவை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

அந்த இரண்டோடு, தோப்புக்கரணம் போடுவதும் மூளை அபாரமாக செயல்பட நல்ல பயிற்சியாம். பூஜையின் முதல் அங்கமாக பிள்ளையாருக்குப் போடும் தோப்புக்கரணம் மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என இப்போது மேலை நாட்டினரும் புகழ்ந்து தள்ளத் தொடங்கிவிட்டனர். தலைக்குப் போகும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, நினைவாற்றலை வளப்படுத்துவதோடு சிந்திக்கும் திறனை பண்மடங்கு உயர்த்துகிறதாம்.

மருத்துவ உலகம் உட்கார்ந்து எழும் உடற்பயிற்ச்சியை தலைக்குச் சிறந்ததாக குறிப்பிடும்போது, அது நமது முன்னோர்கள் காலங்காலமாக பிள்ளையாருக்கு கொடுக்கும் முதல் மரியாதை என நினைக்கையில் உண்மையிலேயே உள்ளம் மகிழ்கிறது.  ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பதென்பது இதுதானோ..?       பிள்ளையாரை
 கும்பிட்டது போலவும் ஆகிறது, மூளை வளர்ச்சியும் சுறுசுறுப்பும் அடைகிறது.

பள்ளிப்பிள்ளைகள் இதை சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. காரணம், மூளையில் 'ஹிப்போகெம்பஸ்' எனும் இடத்தில் தான் படிக்கும் பாடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின் தேவைக்கு ஏற்ப நினைவு படுத்தப்படுகின்றன. இங்குதான் இறந்த மூளையின் உயிரணுக்களுக்குப் பதிலாக புதிய உயிரணுக்கள் பிறக்கின்றன. ஆக, பள்ளி மாணவர்கள் இதற்காகவும் தோப்புக்கரணம் போடுவதை வழக்கத்தில் கொள்ளவேண்டும். பரீட்சை நேரத்தில் தாங்கள் படித்த அனைத்தும் 'டான் டான்' என பதில் எழுத வரவேண்டாமா...

உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களுக்கு மூளை அறிவுப்பூர்வமான செயல் வடிவங்களைக் கொடுக்கிறது. வளர்ச்சியடைந்த மூளையால் செயல் திட்டங்கள் சிறக்கின்றன. ஆக, நல்ல எண்ணங்களோடு, நமது மூளை வளர்ச்சிக்கு நாமும் சில பயிற்ச்சிகளை ஒவ்வொரு நாளும் மேற்கொள்வோம்.

No comments:

Post a Comment