Wednesday, 24 July 2013

கோயிலும் நூல் நிலையமும்...

மலேசிய தமிழர்களின் குறையாகவும், ஆதங்கமாகவும் இருப்பது, மானியம் எனும் பெயரில் கோயில்களுக்குக் கொடுக்கப்படும் கணிசமான தொகையினை சரியான, முறையான வகையில் சமூக முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்தாததே ஆகும்.

இருக்கும் கோயிலை உடைத்துவிட்டு ( அது எவ்வளவு பெரியதாகவும் சிறப்பாகவும் இருந்தாலும்கூட ) இன்னும் பெரியதொரு அமைப்பில் கட்டுவதற்கே அனைத்து ஆலய நிர்வாகங்களும் முனைப்பு காட்டுகின்றதே தவிர மக்களின் சமய விழிப்புணர்வை தூண்டும் செயல்களில் சிந்திக்கவும் காணோம், சமூகம் சீர்படவும் காணோம்.

" கோயில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம் " என்பது நம் முன்னோர் சொன்னது. அதுமட்டுமா சொன்னார்கள், "கோபுர தரிசனம் கோடி புண்ணியம் " என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால்  'இருக்கும் கோயில்களை இடித்துவிட்டு மேல் மாடி வைத்து இன்னும் கட்டிக்கொண்டு போ' என்றோ, 'ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒவ்வொரு கோயிலைக் கட்டிக்கொள்ளுங்கள்' என்றோ அவர்கள் சொல்லவில்லை..

உண்மையில் பெரியளவில் கோயில்களை நவீனமயமாக்கும் இவர்கள், தங்கள் கோயில்களுக்கு தினம் வரும் பக்தர்களை கணக்கெடுத்தால் சமூகத்துக்கு எவ்வித நன்மைகளையும் அவர்கள் செய்யவில்லை என்பதனை ஒப்புக்கொள்வார்கள்.

ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மூன்று கோயில்களை கொண்டிருக்கிறோம் நாம்.

இங்கே, மதம் என்பது வளர்ந்துவிட்டதாக எண்ணுவோர் மீண்டும் சிந்திக்க வேண்டும். இந்த தனித் தனி கோயில்களுக்கு தினமும் போவோர் பத்து பேர் கூட இல்லை, இருந்தும் இங்கே மூன்று கோயில்கள். நமது மதத்திற்கு விடப்படும் சவால் என்றே இதைக்கூற வேண்டும். மக்கள் வராத இடத்துக்கு ஏன் இத்தனை கோயில்கள்....? அல்லது மக்கள் வரும்படியான உபரித்திட்டங்கள் ஏதும் இல்லையா....? பொறுப்பில் இருப்போர் இதை அலசி ஆராய வேண்டும்.  எல்லாக் கோயில்களும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு நிதி உதவி பெற்றதன் பயனாக வெளிப்புற தோற்றம் மாறி இருக்கிறதே தவிர வேறு ஏதும் விசேசமாக மாற்றம் காணவில்லை. அப்படியானால் இவை நமக்குச் சொல்வதுதான் என்ன.....? நம்மிடையே உள்ள பிரிவினையையும் ஒற்றுமையின்மையையுமே இத்தனைக் கோயில்களும் காட்டுகின்றன. இல்லையேல், அருகருகே இதனை கோயில்கள் இருக்கவேண்டியதன் அவசியம்தான் என்ன....?

தமிழ் நாட்டில் துண்டைப்போட்டு ஓடும் பஸ்ஸில் இடம்பிடிப்பது போல இப்போதே எதிர்காலத்துக்கான இடத்தை பாதுகாத்து வைக்கிறார்களோ...?

சம்பந்தப்பட்டவர்கள் பல காரணங்களை கையில் வைத்திருக்கூடும். அவற்றைக் கேட்குமுன்னரே அவை நமது நேரத்தை வீணடிக்கும் ஒன்று என நாமே யூகித்துவிடலாம்.

இதில் குருபூஜை எனவும் அதற்கொரு ரத ஊர்வலம் எனவும் புதுமையைப் புகுத்துவதும் நாம் நிஜத்தில் எத்திசையில் பயணிக்கிறோம் எனும் சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.  "குறைந்த நேரத்தில் நிறைந்த இலாபம்" எனும் கருப்பொருளில் சில பிரிவுகள் நமது இயலாமையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். சமய சன்மார்க்கத்தில் ஆர்வமுள்ளோர் கசடற கற்றுத் தெளிந்த பின் தங்கள் மதச்சேவையை தொடரவேண்டும். தவறுகள் குறைய இதுவே வழி. அறிவுச் சார்ந்த ஒன்றை அவர்கள் தங்களுக்கு பின்னால் வருவோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது அவர்களின் புகழை மங்கா ஒளியுடன் இரட்டிப்பாக்கும்.

தற்சமயம், வசதி உள்ளோரும், நிதியுதவி பெருவோரும் சமயத்தலைவர்களாக தங்களைக் அடையாளம் காட்டிக்கொண்டு செய்யக்கூடாத மாற்றங்களை மதரீதியில் செய்து வருகின்றனர். இது நல்லதல்ல. சங்கமும், மாமன்றமும் நாட்டுப் புறத்தில் நடப்பதை கண்டும் காணாதது போல இருப்பதும் சரியல்ல. அப்படி இதுபோன்றவை அவர்களின் கவனத்திற்கு எட்டவில்லை என்றால் அவர்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் செயல்பாடுகளை ஆராயவேண்டும். அவர்களின் பிரதி நிதிகளை இன்னும் அதிகரித்து தேவை ஏற்படுமானால் உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். காரணம் காட்டும் கடிதம் ஒன்று அனுப்பினாலே பலர் தங்களை திருத்திக்கொள்வார்கள் என்பது பலரின் நம்பிக்கையாகும்.

கோயில்கள் வருடாந்திர திருவிழாக்களுக்கும் திருமணங்களுக்கும் மட்டுமே உபயோகத்தில் இருக்கின்றன. சங்கத்திலும் மன்றத்திலும் இருப்போர் நிருபர்கள் தேடிவந்தால் தான் வாயே திறக்கிறார்கள். அவர்களாக நாடு முழுவதும் பயணம் சென்று செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என பிரச்சாரம் செய்வதில்லை. பல நேரங்களில் இந்த சங்கமும் மன்றமும் எதற்கென்றே நினைக்கத் தோன்றுகிறது. எங்களூரில் அனாதைப் பிணங்களின் இறுதிச் சடங்குகளை இவர்கள்  மேற்கொள்வதை சில நேரங்களில் பார்திருக்கிறேன். அவ்வளவுதான். கோயில்களிலும் பிற இடங்களிலும் நடைபெறும் தவறுகளை தட்டிக்கேட்கும் நிலைக்கு அவர்கள் தயாராக இல்லை. " ஏன் இந்த வீண் வம்பு...?" என்றிருக்கிறார்கள். 

ஆனால், யாரும் எவரும் நமது சமூகம் விழிப்புணர்வு அடைவதற்கான அடிப்படைகளை எண்ணிப்பார்க்க நேரத்தை ஒதுக்குவதாக தெரியவில்லை.
தலைவர்கள் நாளிதழ்களில் அறிக்கைகள் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். பெற்றோர் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்க்கிடக்கிறார்கள்.

இதனிடையே, வளரும் சமுதாயத்தை நல்வழி நடத்த எவ்வித புதுத்திட்டங்களையும் யாரும் அறிமுகப்படுத்தக்காணோம். நிதி சார்ந்த பல திட்டங்களே அவர்கள் கண்ணுக்குத் தெரியுமோ என்னவோ... அதற்கான போட்டிகளை பார்க்கும் போது நமக்கு பல சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. ஒரு சில கோயில்களில் அங்கத்தினர்களாக சேர்வதற்கு ஆயிரம் ரிங்கிட் கட்டனமாக வசூலிக்கப்படுகிறதாம். இவ்வளவும் கட்டி சிலர் அங்கு சேருகிறார்கள் என்றால் 'அவர்கள் சிறந்த சேவையாளர்கள்' என் கிறார்கள் சிலர். 'உண்மையாகவா? ' என கண் சிமிட்டுகிறார்கள் சிலர்.

இதற்கு தீர்வுதான் என்ன.....?



திரு,ரகு சரித்திரப்பாடத்தை போதிக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். தனது 30வது வருட அனுபவத்தில் சரித்திரச் சம்பவங்களை பள்ளிப் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் அதே நேரம் தன்முனைப்புப் பயிற்சியரங்கங்களையும், பட்டறைகளையும் நடத்தி மாணவர்களின் எதிர்காலத் தேவையறிந்து சேவை செய்து வருபவர், சரித்திரப் பாட 'ஸ்பெஷலிஸ்ட்'.

மாற்றி யோசிக்கும் தன்மையினால் சக ஆசிரியப் பெருமக்களாலும், பெற்றோர்களாலும் வரவேற்கப்படுபவர்.

தற்கால பிரச்சினைகளைப் பற்றி தன் சிந்தனையில் உதித்த கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இங்கு...

" நமக்கு இப்போ இருக்கிற பிரச்சினைகள் ரெண்டுதான் சார். கோயில்கள் புதிய வடிவில் நிர்மானிக்கும் அளவுக்கு அங்கே மத போதனைகள் இல்லை.  இறையான்மையை வெளிக்கொணர்ந்து கோயிலுக்கு வரவழைக்கும் வழிகளை பல இடங்களில் பின்பற்றவில்லை. தேவார வகுப்புக்களும் பரத நாட்டிய பயிற்சிகளும் ஆங்காங்கே  ஒரு சில இடங்களில்தான். மற்ற நேரங்களில் கோயில் ஒரு வெற்றிடம்.

தொலைக்காட்சி உள்ளவரை பெற்றோர்களையோ சீரியல்களையோ கட்டுப்படுத்த ஒருகாலமும் முடியாது. அதோடு பல வீடுகளில் பெரியோர்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு சீரியல்கள்தான்.  அதை தடுக்கும் நிலை நல்லதும் அல்ல...."

" மிஸ்டர் ரகு, அப்போ இதுக்கு வழிதான்  என்ன....?"

"இருக்கு சார்! நல்ல திட்டம் ஒண்ணு கையிலெ இருக்கு. சொல்றேன் கேளுங்க... ஒவ்வொரு கோயில் மண்டபத்திலும் ஒரு நூல் நிலையம் அமையனும். அங்கே இரவு 7ல் இருந்து 10வரை மாணவர்கள் வந்து அமர்ந்து அமைதியாக படிக்கும் வசதிகள் செய்துதரப்படனும்.  நூல் நிலையம் எனும்போது புத்தகங்கள் வாங்க செலவாகுமோன்னு சிலர் பயப்படலாம்.  நல்ல நெஞ்சங்கள் பல இதுபோன்ற சேவைகளுக்கு உதவ முன்வருவாங்க. இதுபோன்ற நூல் நிலையங்களை பராமரிக்கும்  பொறுப்பை கோயில் நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களில் தினம் இருவராக பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள கோயிலால் ஏற்பாடு செய்யப்படனும்.. அதுமட்டுமல்ல, போதுமான இடவசதி இருந்தா, நல்லுள்ளங்கொண்ட ஆசிரியர்கள் தங்கள் நேரத்தை இதுபோன்ற பயனுள்ள இடங்களில் செலவிட முன் வருவார்கள். இதை அருகில் இருக்கும் பள்ளியாசிரியர்களிடமோ அல்லது சுற்றுவட்டார தமிழ் ஆசிரியர்களிடமோ கலந்து பேசி உதவி கேட்கலாம். ஆனால், பிள்ளைகளின் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொறுப்பு கோயில் நிர்வாகத்தினுடையதாக இருக்கவெண்டும். காரணம் ஒவ்வொரு நாளும் பள்ளியில் பணிபுரிவதால் இந்த கூடுதல் பொறுப்பினையும் அவர்கள் மேல் சுமத்துவது சரியல்ல. அவர்கள் தங்கள் நேரத்தையும்  அறிவையும் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ள முன்வருகிறார்கள், அவ்வளவுதான்.

ஆனா,இது கோயில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நூலகமானதால், வெளியாட்களும் இங்கே வர முனைவார்கள், " நூலகம் பொதுவானது" எனும் கருத்தில். ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளும் சூழ் நிலை இருப்பதால், ஒழுக்கத்தினை பணையம் வைக்காது, முன் பதிவு பெற்றவர்களையே உள்ளே அனுமதிக்கவேண்டும். அப்படி பதிவு செய்துகொள்வோர் முறைகேடாக நடந்துகொள்ளும் போது, கோயில் பொறுப்பாளர்கள் அவர்களை கண்டிக்கவோ அல்லது காவல் துறையிடம் ஒப்படைக்கவோ வழிபிறக்கும். எதுக்கும் போலிசாரிடம் கோயில் சார்பாக நடக்கும் இது போன்ற வகுப்புக்களைப் பற்றி தகவல் தெரிவித்துவிடுவது இன்னும் நல்லது. அவர்களும் அவ்வப்போது இங்கு வந்து பார்வையிட ஏதுவாக இருக்கும். நாம் இங்கு பேசுவது முழுக்க முழுக்க பள்ளிப்பிளைகளுக்கான ஏற்பாடாகையால் பொதுமக்கள் இங்கே தலையிடாமல் இருப்பது நல்லது."

" நல்ல அருமையான ஐடியா, மிஸ்டர் ரகு. அப்புறம்..?"

" அதாவது சார், இதுல இன்னொரு சிறப்பும் இருக்கு.  இந்த நூல் நிலையத்தினுள் செல்லுமுன், கோயிலில் இறைவனை பூஜித்து விட்டுத்தான் வரனும்னு  கண்டிப்பா சொல்லிட்டோம்னா, இளம் வயதில் இறைநம்பிக்கையை சிறுகச் சிறுக அவர்களின் அறிவுக்கு புகுத்துகிறோம்னு இருக்கும். பிள்ளைகளை இங்கே விட வரும்போது, பெற்றோர்களும் கோயில் பூஜைகளில் கலந்து கொள்ள்வது ஏதுவாகும். 

கோயில்களில் அதிக ஆட்கள் வந்து பூஜிக்கும்போது அதன் பாசிடிவ் அதிர்வுகளினால் பல நன்மைகளை உடனிருப்போரும் பெறும்படி அமையும். இதனால்,  தங்களின் மனதை கண்டபடி அலைபாய விடமாட்டாங்க. அரசாங்கத்துக்கும், சமுதாயத்துக்கும் புறம்பான சீழறுப்பு வேலைகளில் ஈடுபட மாட்டாங்க. செய்வதறியாம வெளியிலே சுற்றித் திரியும் மாணவர்களின் போக்கு மாறவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.  அதே நேரத்தில் படிப்பதாக சாக்கு போக்கு சொல்லி கம்ப்யூட்டர் கேம்ஸ், ஃபேஸ் புக் என அடிமைப்பட்டுக்கிடக்கும் பிள்ளைகளுக்கான மாற்று இடமாக இந்த நூலகம் அமையும். நல்வழி, நல்லொழுக்கம் போன்ற சீரிய சிந்தனைகள் அவர்களிடம் குடிகொள்ள ஆரம்பிக்கும்.  பழக்கங்களே வழக்கங்கள் ஆகின்றன. ஒரு மாணவன் தொடர்ந்து பூஜையின் போது கோயிலும், அதன் பின் நூலகத்திலும் இருக்கும் செய்கையானது, நாளடைவில் அவனுள் எழும் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பு. அப்போது இவ்விடங்கள் இருப்பதை ஞாயப்படுத்தவே அவன் முனைவான். இது இய/ர்கை. எதிமறையாக தோன்றுகின்றவற்றாஇ கோயிலில் கிடைக்கும் பக்கிதியின் மூலமும்ம் நூலகத்தில் கிடைக்கும் பகுத்தறிவின் மூலமும் எதிர்கொள்கிறான். விளைவு.... அவன் எதிர்காளம் பிரகாசிக்கத்தொடங்கும் என்பதே...

சரித்திரம் இதைத்தான் கூறுகிறது. இறையருளோடு அறிவை விறுத்திசெய்துகொள்ளும் போது மேன்மக்கள் தோன்றுகிறார்கள்."

"பிரமாதமான கருத்துக்கள் மிஸ்டர் ரகு. அதிக செலவில்லாமல், பொதுச்சேவை செய்ய விரும்புகிறவர்கள் ஆர்வமோடு கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும். ஹ்ம்ம் மேல சொல்லுங்க சார்..."

"..ஹ்ம் ..சுருங்கச் சொன்னா...
   -  எப்போதும் காலியாக இருக்கும் கோயில் கல்வியில் முன்னேற    நினைக்கும் பிள்ளைகளுக்கு நல்ல இடமாகிறது.
   -  அரசாங்க மானியம் சரியான இலக்குக்குச் சென்றடைகிறது.
   -  பெற்றோர் நிம்மதி அடைகிறார்கள்
   -  சமூகம் மேம்பட அருமையான வாய்ப்புக்களை இங்கே நாம் பார்க்கிறோம்."

" சரித்திரப் பாடத்தை 30 வருடங்களுக்கும் மேலாக சொல்லித்தருவதனால, கொஞ்சம் பின்னோக்கிப் போய் பார்த்தா, இதுபோன்ற மாற்றங்கள் பொதுவில் நல்ல பலன்களையே தந்திருக்கின்றன. அதை சில இடங்களில் நான் கவனித்திருக்கிறேன். சுமார் நூறு வருடங்களுக்கு முன் உலகம் எப்படி இருந்தது, உலகமக்கள் எப்படி இருந்தனர் என்பதனை அலசும் போது சமூக சீர்திருத்தங்களின் பங்கினை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

மாற்றம் கொணர்ந்த 'தமடுன்கள்", மத, இன, மக்களை மாற்றிய 'ரிஃபோர்மேஷன்' என சிறிய அளவில் தொடங்கி அறிவுப்பட்டறைகளாக மக்களை உணரச்செய்தது நூல் நிலையங்களே. சில இடங்களில் அமல்படுத்தப்பட்டு அதன் வெற்றி தெரியவரும் போதுதான் பலரும் இதில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்."

" ஆமா மிஸ்டர் ரகு, உங்க கருத்து நிச்சயமாக வரவேற்கப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய ஒன்று.

"ஐடியாவ நாம சொல்லிட்டோம். நடைமுறைப்படுத்த வேண்டியது சம்பந்தப் பட்டவர்களின் பொறுப்பு."

எவ்வளவு நிஜமான வார்த்தைகள். பலரும் எதிர்பார்க்கும் மாற்றங்கள் கோயில் தர்மகர்த்தாக்களிடம் வருமா? திருமண மண்டபம் என வருமானத்தை ஈட்டும் இடமாக இருக்கும் அதே நேரம், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கும் அவ்விடத்தை சில மணி நேரங்கள் விட்டுக்கொடுக்க முன்வருவார்களா...?

 நாலடியார் இப்படிக்கூறுகிறது....

" நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ் நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று..."

பலருக்கும் பயன்படும் அறங்களை உடனே செய்துவிட எண்ணம் வேண்டும், காரணம் அவன் வருகிறான், விரைந்து வருகிறான். அதற்குமுன் செய்து புண்ணியம் தேடிக்கொள்.

Sunday, 21 July 2013

வீட்டினுள் நுழையுமுன்...

வெளியில் சென்று திரும்பும் போது, பேய் தொடருகிறதோ இல்லையோ,  நோய் நம்மைத் தொடராமல் இருக்க கை கால் சுத்தம் செய்துகொண்டு வீட்டினுள் நுழைவது நல்லது.

புதிதாக குழந்தைகள் பிறக்கும் போது இதுபோல் பல வீடுகளில் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளும் இப்படி கை கால் கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் போகப் போக இவ்வழக்கம் கைவிடப்படுகிறது.

வெளியில் தினம் தினம் பலரையும் நாம் சந்திக்கிறோம். அவர்களுடன் கைகுலுக்குகிறோம். அவர்களின் பொருட்களையும் கையாளுகிறோம், சில நேரங்களில் பொது இடங்களில் உள்ள பொருட்களைக்கூடத்தான். பொது பேருந்துகளிலும், வாடகைக் கார்களிலும் பயணிக்கிறோம். இதுபோன்றவை எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறதென்று நமக்குத் தெரியாது. இதற்கு முன் என்னமாதிரியான ஆட்கள் இதுபோன்ற பொது இடங்களிலும் பொது வாகனங்களிலும் வந்து போனார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. எந்த மாதிரியான நோய்க்கிருமிகள் இங்கெல்லாம் இருக்குமென்பதும் நாம் யூகிக்க முடியாத ஒன்று.

 நம்மைத் தொற்றிக்கொண்டு நம் இல்லங்களில் உட்புகுந்து ஒன்றுமறியா நம் குடும்ப உறுபினர்களை தாக்காதிருக்க,  முதற்கட்ட பாதுகாப்பாக அமைவது இப்படி நாம் கை கால் முகம் கழுவிக் கொண்டு வீட்டினுள் அடியெடுத்து வைப்பதே.

"வாய் கழுவாராயினும் கை கழுவ
கழுவாக்கால் நோயாவர் கையழுக்குப் பட்டு"
என்பது நகைச்சுவைக்காக சொல்லப்படும் புதுக்குறள். ஆனல் அதன் முக்கியத்தை எண்ணிப்பாருங்கள். 

ஆரோக்கியம் பேணுவோர் அனுசரிக்கும் முறை இது. நாமும் பின்பற்றுவோமே...

சாலையில் வேண்டாம் வேகம்...

மெதுவாக போயிருந்தால் விலகிப் போயிருப்பேன்,
விரைவாகப் போனதால் விரட்டிப் பிடித்தேன்.."

என மரணம் சொன்னதாக, விபத்தின்போது மரணமுற்றவர்களில் சிலர் இறக்கும் முன் முனுமுனுத்ததாக முதலுதவிக்குப் போயிருந்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விபத்தில் இறப்பது ஒரு பயங்கரம். உடல் பாகங்கள் துண்டு துண்டாக அங்கும் இங்கும் சிதறிக்கிடக்க உயிர் சில நிமிடங்கள் இழுத்துக்கொண்டு,  துடி துடித்து இவ்வுலகை விட்டுப் போவது மிகக் கொடூரமானது. எதிர்பாரா விபத்து என்பது ஒரு புறமிருக்க, வேகக் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாவது தேவையில்லா விபரீதமாகும்.

10.10.10 அன்று, மாலை ஆறு மணிக்கு மலாக்கா பேருந்து நிலையத்தில் இருந்து கோலாலும்பூர் நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்து, 223கி.மீ சிம்பாங் அம்பாட் வடக்கு தெற்கு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. வேகத்தை கட்டுப்படுத்த இயலாது, பக்கத்தில் இருந்த தடுப்புக்கம்பிகளை மீறி எதிர் திசையில் வந்துகொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது அந்த பேருந்து.  ஒரு மைவி ரக காரின் மீது தலைகீழாக அது நின்றது பார்க்க பயத்தை தந்தது. சுமார் 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.




 ( என் குடும்பத்தினரோடு நானும் மலாக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது எங்கள் கண்களுக்கு முன்னர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த விபத்து நடந்தது. சாலையில் அங்கும் இங்குமாக உயிரற்ற உடல்கள் கிடப்பதை பார்த்துக்கொண்டே கடந்து சென்ற அந்த காட்சி பயங்கரமான ஒன்றாகும்) 



அடுத்த சில நாட்கள் நாளிதழ்களில் பல கோணங்களிலும் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அதில் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. விசாரனையின் போது சக பேருந்து ஓட்டுனர்கள், வேகமாக பேருந்துகளை ஓட்டிவரும் நேரங்களில் சாலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் ஏதோ கருப்பாக ஒன்று கடந்து செல்வதை  கண்டாதகச் அதிகாரிகளிடம் சொல்லியிருந்தனர்.

 நமக்கு எழும் சந்தேகம் இதனால் இன்னும் வலுக்கிறது. வேகம் இருக்கும் இடங்களில் எமன் வந்துபோகும் சாயல் இருப்பது போலல்லவா ஆகிறது இவர்கள் சொல்வது.

சாலை, நாம் சவாரி போவதற்காகத்தான், சாகசம் புரிய அல்ல. அதுவும் பக்கத்தில் இருப்போர் மெச்சிக்கொள்ள காரை வேகமாக ஓட்டுவோரும் நம்மிடையே உண்டு. யோசிக்கும் தன்மை உடையோர் இப்படி அநாவசிய, அபாய கணிப்பீடுகளை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். 'ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போல' என தங்கள் திறனை சாலையில் காட்டி பிதற்றியோரில் பலரை இப்போது காணோம்.

அவசரம் + வேகம் = மரணம்.

இந்த புது ஃபோர்முலாவை மனதில் வைப்போம்.
அதிவேகம் மரணத்திற்கு  பிடித்த அம்சம். எமன் அங்கே பல் இளிக்கிறான்.

சாலையில் வேண்டாம் வேகம், அங்கே விவேகமே போதும்.

சிரிக்கத் தெரிந்தால் போதும்...

வாய்விட்டுச் சிரியுங்கள்.  மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி பொங்க கள்ளம் கபடமில்லா சிரிப்பே சரியான வழி.

வயதாக ஆக சிரிப்பதை குறைத்துக் கொள்கிறோம் நாம்.  கடந்து வந்த அனுபவங்களும் இனி கடக்கவிருக்கும் பயணங்களும் தெளிவில்லா ஒரு நிலையை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தலாம். இதையொரு பின்னடைவாக பார்க்காமல் காலத்தால் நாம் அடையும் மனமுதிர்ச்சியையும், பக்குவத்தினையும் உபயோகத்திற்கு கொணர்ந்து கல கலவென சிரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த மனப்பாங்கினையுடைய பலர் எல்லாவித சூழ்நிலைகளிலும் இன்முகத்துடன் வாழ்வினை எதிர்கொள்கிறார்கள்.

சிரிப்பதென்பது நோய் தடுக்கும் மருந்து. வந்த பின் அல்ல, வரும் முன்னரே....

மருத்துவர்கள் சிலர் நண்பர்களாக எனக்கிருப்பதால், அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். உங்கள் வாழ்வில் ஆரோக்கியம் பெருக நிறைய சிரியுங்கள். இதுவே மருத்துவ உலகம் அறிவுரையாகச் சொல்லும் ரகசியம்.

கள்ளமற்ற சிரிப்பினில் ஆரோக்கியம் அடங்கியுள்ளது என்பதை உணர்வோம். கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிரிக்கப் பழகுவோம்.

பின் குறிப்பு: ஒரு சில மருத்துவர்கள் சிரிப்பதன் அவசியத்தை வெளியில் அவ்வளவாக சொல்வதில்லை என்றும் காதில் விழுகிறது. " உங்கள் நோயும் தொடரட்டும் எனது வருமானமும் பெருகட்டும்" என இன்னமும் ஒரு பிரிவினர் நினைக்கிறார்கள் போலும். அதற்கென்ன, பரவாயில்லை... அவர்களை விட்டுவிடுவோம். இப்போதுதான் அந்த ரகசியம் நமக்கு தெரிந்துவிட்டதே... வாய்விட்டுச் சிரிப்போம், வளமாக வாழ்வோம்.


நல்ல மனம் வாழ்க...

அடுத்தடுத்து ஐந்து பரம்பரைக்கு சொத்து இருந்தாலும், இன்னமும் அதே வழியில் சென்று கொண்டிருப்போர் நம்மிடையே அனேகர் இருக்கிறார்கள்.

பொருளீட்டும் யுக்தி தெரிந்தவர்கள் என இவர்களை  ஒரு வகையில் பாராட்ட வேண்டியது அவசியம் தான் என்றாலும், இவர்கள் மனது வைத்தால் ஏழைகளில் ஒரு சிலரின் தலைவிதியை மாற்றிட முடியும் என்பதும் ஒரு நிதர்சனமான உண்மை.

இந்த நற்குணங்களை மனம்தான் நிர்ணயிக்கிறது. சரி என்பதும் இல்லையென்பதும், முடியுமென்பதும் முடியாதென்பதும் ஒரு மெல்லிய நூலிழையில் மனம் எடுக்கும் முடிவினைப் பொறுத்தே அமைகிறது.

'பணம் இருக்கும் இடத்தினிலே மனம் இருப்பதில்லை' எனும் பொய்யான கருத்தினை இவர்கள் உடைத்தெரிய முன் வருவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு.

 நம் கண்முன்னே நடக்கும் பல தொண்டுள்ளம் கொண்டவர்களின் திருப்பணியினைப் பார்க்கும் போது இப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது.

நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க!!!

Saturday, 20 July 2013

கவிஞர் வாலியின் நினைவுகள்...

கவிஞர் வாலி திரைப்படல்கள் எழுத வரும் முன்பே டி.எம்.சௌந்தரராஜனுக்கு முருகனைப் பற்றிய பக்திப்பாடல் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் நம்மை உருகவைத்த அந்தப் பாட்டு,
 " கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உன்னை மறவேன்..." என்பதாகும். எத்தனை முறை கேட்டாலும் புத்துயிர் தரும் பக்திக்கு இப்பாடல் ஒரு உதாரணம்.

சினிமாவுக்கு முதன் முதலில் அவர் எழுதிய பாடலும் இனிமையான ஒன்று தான்.
" நிலவும் தரையும் நீயம்மா,
உலகம் ஒரு நாள் உனதம்மா? "
எனும் மனதைக் கவரும் மெல்லிசையாகும். 1958ல் அழகர் மலை கள்வன் எனும் திரையில் இடம்பெற்ற பாடல் இது.

அடுத்தது அற்புதமான பாடல்களைக்கொண்ட "கற்பகம்" திரைப்படம்.
1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம், 'கற்பகமாகும்'. கே. எஸ். கோபாலாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர்.ராதா என பலரும் திறம்பட நடித்திருந்தனர். 1964 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழ் பெற்ற படம் இது. இத்திரைப்படத்தின் மூலம் கே. ஆர். விஜயா தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அவர் மட்டுமல்ல தமிழ் நல்லுலகத்தை ஆளப்போகும் ஒரு மிகச் சிறந்த கவிஞரும் அன்று பலர் கண்களுக்கு தெரியத்தொடங்கினார்.

'பக்கத்து வீட்டு பருவ மச்சான், பார்வையிலே படம் புடிச்சான்....'
'அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா,
ஆடும்வரை ஆடிவிட்டு அல்லி மலர் மூடம்மா...'
'மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா'
'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு'

எனும் பாடல்கள் சிறந்த கதைக்கும் நடிப்புக்கும் ஈடு கொடுத்து படத்தை வெற்றி பெறவைத்தன.

ஆயினும் கவியரசு கண்ணதாசனின் முரணான போக்கினால் எம்.ஜி.ஆர் தனக்காக பாட்டெழுத ஒருவரை தேடிக்கொண்டிருந்த போது கவிஞர் வாலியின் திறமையக் கேள்விப்பட்டு தனக்கு பாட்டெழுதும்படி அழைக்க, எம்.ஜி. ஆரின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பாடல்கள் நிறைய வெளிவந்து வெற்றியடையத் தொடங்கின. அதுபோன்ற மிக அருமையான பாடல்களின் மூலம் எம்ஜிஆருடைய பேரன்பை பெற்றவர் வாலி.

சில காலத்திலேயே பலரும் தேடும் கவிஞராகவும்  உருவானார்.

இசைத்தட்டுக்கள், டேப்புகள், சிடிக்கள் மற்றும் வீடியோக்கள் விற்பனையில் உள்ளோர், " வாலி எம்ஜிஆர் ஹிட்ஸ்" சிடிக்கள் தொடர்ந்து அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதை  பத்திரிக்கைகளில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சாதனையாக கருதப்படும் இந்த சிடி விற்பனை இன்னும் தொடர்கிறது. எம்ஜிஆர், டி.எம்.எஸ் அவர்களுக்கு அடுத்து அதிகமாக விற்பனையாவது கவிஞர் வாலியின் ஆல்பங்களாகும்.

" நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்..."
" ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..."
" கண் போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா.."
போன்றவை அவற்றுள் சில.

அவரின்  இனிமையான பாடல்களில் சில...

-  வெற்றிவேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல்
-  அந்த நாள் ஞாபகம் நெஞிலே வந்ததே நண்பனே ....
-  சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
-  மல்லிகை என் மன்னன் மயங்கும்
-  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே....

இப்படி அவரின் திறமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்த பாடல்கள் இன்னும் எத்தனையெத்தனையோ...

ஒரு முறை, கலங்கரை விளக்கம் திரைப்படத்தின் போது எம்ஜிஆர் அவர்கள் 15 நிமிடத்தில் ஒரு பாடலை இயற்றித்தந்தால் தனது கைக்கடிகாரத்தை பரிசளிப்பதாக கூற, அப்போது உருவானதே " காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் " எனும் பாடல்.

நம் நாட்டில் மலாய்க்காரர்களும் சீனர்களும் அன்றைய எஸ்டேட் திரையீடுகளின் போது இந்த பாடலை பாடி மகிழ்ந்ததை நானே நேரில் கண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடலாக அது அன்று இருந்தது.

ஆயினும் எம்ஜிஆரின் கருத்துக்களுக்கு எதிரானவர்களோடு  கடந்த சில வருடங்களாக  இவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டதால், இவரின் உண்மை அபிமானிகள் சற்று வருத்தத்தில் இருந்தது வெள்ளிடை மலை.

Thursday, 18 July 2013

கவிஞர் வாலி காலமானார்...

கவிஞர் வாலி தனது 82வது வயதில் நோயின் காரணமாக  காலமானார்.



எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்கு பேரும் புகழும் வாங்கித்தந்தன.  பின்னர் பல கவிதைத்தொகுப்புகளையும் புத்தகங்களையும் எழுதி வந்தார். திரைப்படங்கள் சிலவற்றுக்கு திரைக்கதையையும் அமைந்திருந்தார். கலியுக கண்ணன் அவற்றில் எனக்குப் பிடித்த ஒன்று. திரையில் முகம் காட்டத் தொடங்கிய போது நடிப்பிலும் முத்திரை பதித்தார். ராதிகாவின் அண்ணாமலை தொடரில் கடைசி சில காட்சிகளில் வந்து மனதில் இடம் பிடித்தார்.

கண்ணதாசனுக்குப் பின் கவியரசாக உலா வந்த கவிஞர் வாலிக்கு ஏனோ அத்தனைத் திறமையிருந்தும் 'கவியரசு" என்னும் பட்டம் கிடைக்காமல் போனது. அதிலும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவருக்கு அது கிடைத்ததில் பலருக்கு இன்னமும் ஆச்சரியம்.

இளம் வயது நடிகர்களுக்கும் காதல் பாடல்களை எழுதி ரசிகர்களை பரவசத்தில் அசத்தியதால் அவர் இளமைக் கவிஞர் எனவும் புகழப்பட்டார். எம்.ஜி. ஆர் முதல் தனுஷ் வரை நான்கு தலைமுறைக் கவிஞராக நிலைத்து நின்றவர் கவிஞர் வாலி அவர்கள்.

மத்திய மா நில அரசுகளால் பல பரிசுகளும் பட்டங்களும் கொடுத்து கௌரவிக்கப்பட்டாலும், மக்களின் மனதில் அவரின் கவித்திறன் என்றென்றும் நிலைத்து நிற்கும். 50 வருடங்களில் சுமார் 12 ஆயிரம் பாடல்களை இயற்றி இருக்கும் அவரின் சில புகழ் பெற்ற பாடல்கள் அடுத்த சில பதிவுகளில் இங்கே இடம் பெறும்.