வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் எண்ணுகின்ற கருத்துக்களை எழுத்துக்களாய் வலையேற்றி இணையத்தில் இணைக்கும் அத்தனை தமிழ் அன்புள்ளங்களும் இந்த வெற்றிக்கு காரணமானவர்களே.
ஆங்கிலம் உலகமெங்கும் சென்றடைய காரணம், அவர்களின் பயன்பாடும், பகிர்வுகளும் பல ஊடகங்களின் வழி சென்றடைந்துதான். அதன்படி பார்க்கையில், தமிழ்மொழியை பேசி, படிப்பதோடு நின்றிடாமல், எழுத்துலகிலும் சஞ்சரிக்க விடவேண்டும் என்பதுதான் நமது மூதாதையர்களின் இலக்கு. இது வெற்றிபெற நமக்கு உறுதுணையாக வருவது 21ம் நூற்றாண்டின் பிரமாண்ட கண்டுபிடிப்பான இணையம்.
நமது பதிவுகளை பகிர பல வலைத்தளங்கள் இருந்தாலும், எனக்கு எளிமையாக படுவதும், பலரும் இலகுவாக கற்றுக்கொள்ளும் விதம் அமைந்திருப்பதும், வலைப்பூ ஆகும். எண்ணக்கோர்வைகளை தட்டச்சு மூலம் வலைப்பூவில் பகிர்ந்திட நாம் போன பின்பும் நம்பெயர் சொல்லும் என்பர்.
இணையத்தில் நம் பிரதிகள் வெள்ளத்தில் மூழ்காமல், வெந்தணலில் வேகாமல், கள்வர்களால் அழித்திட முடியாமல் காலங்காலமாக நிலைத்து நிற்கும்.
இது சுயநலம் போல் பட்டாலும், பொதுநலம் தாண்டி, மொழிவளம் காப்பதற்கான நமது பங்களிப்பு என்பது உண்மை.
உலகெங்கும் சிதறிப்போனாலும், கட்டுக்கோப்புடன் மீண்டு வந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபடும் சிங்களத்தமிழர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள். யாழ்ப்பாணத்தில் தங்களது நூலகத்தை எரித்தாலும், கிடைக்கும் புத்தகங்களை இணையத்தில் ஏற்றி " அது போனால் போகட்டும் போடா, இங்கிருக்குது புதிதாக வந்து பாரடா" என சவால் விடும் அந்த அன்புள்ளங்களுக்கு தமிழ் மொழியும் தனது நன்றியறிதலை சொல்லவே செய்யும் ...
மதுரை தமிழிலக்கிய திட்டமான மக்களுக்கு தேவையான விலைமதிப்பில்லாத அரிய நூல்களை பதிவிட்டு பாதுகாக்கும் இணைத்தளத்துக்கும் தமிழர்கள் நன்றி சொல்லியாக வேண்டும். அங்கு இனாமாக நாம் வாசிக்க கிடைக்கும் அத்தனை புத்தகங்ளும் பொக்கிஷங்கள். சங்க காலத்து இலக்கிய நூல்கள் தற்போதைய நவீன இலக்கியம் தொடர்பான நூல்கள் அனைத்தும் ஒருங்க இருக்க காணலாம்.
No comments:
Post a Comment