Thursday, 24 May 2012

Kelinik Arul 1

அருள்: ஒரு டாக்டராகவும் நண்பராகவும்

1999ல் ஜூலை 17ல் எனக்கு மாரடைப்புக்கான அறிகுறிகள் தோன்றத்தொடங்கின. அடுத்த நாள் பந்திங் நகரில் 'ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர் ஒருவரின் கிளினிக்கிற்கு நான் அழைத்துச்செல்லப்பட்டேன்.

டாக்டர் அருள் என எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட அவர் பின்னாளில் எனக்கு ஒரு நெருங்கிய நண்பராவார் என்று அப்போது நான் எண்ணியதில்லை.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் எனக்கொரு நல்ல மருத்துவராகவும், உற்ற நண்பராகவும் விளங்கி வருகிறார்.

 'பேஷன்ட்' ஆக போய் 'பெஸ்ட் பிரென்ட்' ஆன நிகழ்வுகளே எனது மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.  காரணம், இம்மாதம் 31ம் தேதியோடு அவரது கிளினிக் மூடுவிழா காண்கிறது.

தொழிலில் குறையில்லை, அவர் தற்போது ஒரு  மருத்துவ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக முழு நேர  பொறுப்பில் அமரவிருக்கிறார். அவ்வளவே.

ஆயினும் இந்த 13 ஆண்டுகளில் நடந்தவற்றை மீண்டும் நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியத்தோடு ஒரு புன்னகையும் மலர்கின்றது.

 நான் நோய்வாய்ப் படுவதற்கு முன்பு வரை, மருத்துவமனையில் கொடுக்கப்படும் அடுத்த வருகைக்கான தேதிப்படி நாமே நினைவு வைத்து செல்லவேண்டும். ஆனால், டாக்டர் அருளின் வைத்தியச் சாலையில் நம்முடைய அடுத்த வருகையினை அவர்களே முறைப்படி நமக்கு நினைவூட்டுவார்கள்.

இது அப்போதைய கால கட்டத்தில் நடப்பில் இல்லாத ஒன்று. இதன் மூலம் கிளினிக் அருள் பல வகைகளில் ஏனைய தனியார் மருத்துவச் சாலையிலிருந்து மாறுபடத்தொடங்கியது.

 நோயாளிகளின் சிகிச்சை அட்டவனை தயாரிக்கப்பட்டுவிடும் இங்கு. அதன்படி, தேதி தவறாமல் எப்பொய்ன்ட்மென்ட் அழைப்புகள் அவர்களை நாடி வந்து விடும்.

அப்படி அழைப்புக்குப் பின் அழைப்பாக அவரிடம் சென்று சிகிச்சைப் பெற்று வந்தவர்களில்  நானும் ஒருவன்.

என்னுடைய நோயின் தாக்கம் அதிகரிக்க அப்போது எனக்கு அடுத்த கட்ட சிகிச்சை தேவைப்பட்டது.

தேசிய இருதய மருத்துவமனைக்கு டாக்டர் அருளின் உதவியால் அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு டாக்டர் ஜஸ்வான்ட் சிங் மற்றும் சுரேன்டர் கவுர் ஆகிய இருவரின் சிகிச்சையின் மூலம் நலமடைந்து வழக்க நிலைக்கு திரும்பினேன்.

இந்த கால கட்டம் நான் உடல் நிலையில் மட்டுமல்ல, மன நிலையிலும் மிகவும் பாதிகப்பட்ட ஒரு சிறமமான காலமாகும்.

'உங்கள் நோயை நன்றாகத் தெரிந்து கொண்டால் அதிலிருந்து விடுபெற சுலபம் என்பார்.

 குலைவலி என்று பெரியவர்கள் சொன்ன கேஸ்ட்ரிக் வலியின் சூசகமான அறிகுறிகளும் ஏறக்குறைய இருதய நோய் போன்றே தோன்றுவதால், எதற்கான சிகிச்சையை எங்கு தேடிச்செல்ல வேண்டும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதை நிவர்த்தி செய்ய இரண்டினையும் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

இது பின்னாளில் எனக்கு பெரிதும் உதவியது. இதுபோன்றே பல வித நோய்களைப்பற்றி இவரிடம் கலந்து பேசுவது சுவாரஸ்யமாகப்பட்டது.

அதுமட்டுமல்ல, என்னைச்சார்ந்த நோயால் அவதியுறும் நண்பர்களையும் உறவினர்களையும் இவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சையடையச்செய்து நலம் பெற உதவுவேன்.

காலப்போக்கில் இருவரும் நண்பர்களாகிவிட்டோம். காலை வணக்கம் சொல்லவேண்டிய நேரங்களில்,

" அட நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்களே?" என்பார்...

அப்புறம் என்ன, இவரோடு பழகத்தொடங்கிவிட்ட கொஞ்ச நாட்களில் நோய் பயமும் போய்விட்டது.

 

No comments:

Post a Comment