Friday, 11 May 2012

படித்ததில் பிடிக்காதது. . .

"கழுத்தில் தாயத்துக் கட்டிக்கிறது, நியூமரொலொஜி  பார்க்கிறது, கைகளில் மஞ்சள் அல்லது சிவப்பு கயிறு கட்டிக்கொள்வது...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை".

ஆனால், மற்றவர்கள் மனதை நோகச் செய்யாமல் இருக்க மௌனம் காப்பது உண்டு.

 நான் நம்பவில்லை எனபதற்காக மற்றவர்களும் என்னைப் பின் பற்ற வேண்டும் என எண்ணியதில்லை. தனி நபர்களின் நம்பிக்கைகளில் நான் நுழைந்து அதிலுள்ள நன்மை தீமைகளை விவாதித்து தீமைகளை சுட்டிக் காட்டியதில்லை.

நானும் சின்ன வயதில் பல நம்பிக்கைகளில் மூழ்கி மேலெழுந்து வந்தவன் தான்.

"பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்திடும்" என்கிற பயத்தால் உண்மையை மட்டுமே சொல்லி பலமுறை வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.

சில நேரங்களில் "பொய்யும் பொய்யான புகழ்ச்சியும் நல்லது செய்யும்" என போகப் போகத்தான் புரிந்து கொண்டேன்.

அதனால்தான் பக்தியை வளர்க்கும் மத நம்பிக்கைகளில் பொய்யெனத் தெரிந்தாலும் சற்று விட்டுக் கொடுத்துப் போயிருக்கிறேன்.

என்னைப் போல பலர் இருக்கலாம். 'ஏன் வீண் வம்பு' என ஒதுங்கி இருப்போர் நிறைய பேர் இருக்கலாம். ஆனால், இனியும் அப்படி நமக்கென்ன என மௌனமாக இருப்பது சரியா எனப்படுகிறது.

தவறெனப் படுவதை சொல்லத்தொடங்கும் நேரம் வந்து விட்டதோ. இது எக்ஸ்போனென்ஷல் குரோத்தில் அதாவது ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி.... மற்றவர்களிடம் சென்று சேர்க்க நேர்ந்தால் நல்லதுதானே...


கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரமாயிரம் ஆடுகளை பலி கொடுப்பதிலிருந்து காப்பாற்றி இருக்கிறோம். இனி, சாமியாடுவதில் உள்ள உண்மைக்குப் புறம்பானவற்றை சொல்லத் தொடங்குவோம்.

கடந்த மாதம் நடந்த ஒரு சோகம், சாமி ஆடும் மூட நம்பிக்கையால் மூவர் உயிரைக் குடித்திருக்கிறது.  தனிப்பட்ட ஒருவன் மேல் வைத்த அளவற்ற நம்பிக்கை, ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டது. மந்திரத்தால் மாங்காயை விழவைத்து, தந்திரத்தால் மூன்று உயிர்களை கொன்று குவித்துவிட்டான்.

இங்கே மதத்தைக் குறை சொல்லக்கூடாது.  நமக்கு விளங்கிக் கொள்ளும் தன்மை இல்லையேல் மதம் என்ன செய்யும்...?

 நமது மதம் அறிவுப்பூர்வமானது. கற்றரிந்து தேர்ச்சிபெற்றோரிடம் விளக்கங்களைப் பெற்ற பின் எதிலும் நம்பிக்கை வைக்கவேண்டும்.

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. " இன் டவுட், டோன்ட்" என்பார்கள். 'சந்தேகம் இருந்தால், செய்யாதே... 'என்று தமிழில் சொல்லலாம்.

அப்படி எதிலாவது சந்தேகம் தோன்றின், அல்லது சரிவர விளங்காவிடில் நாம் அதை செய்யாமல் விட்டு விடுவதே சிறப்பு.

அப்படி மீறிச்செய்யவதனால் இதுபோல உயிர்ச்சேதம்தான் மிஞ்சும்.

நன்றி : மக்கள் ஓசை, ஞாயிறு பதிப்பு

No comments:

Post a Comment