வெப் உலகத்திற்கு இப்போதுதான் வந்தது போலிருக்கிறது, அதற்குள் என்னுடைய 200 வது பதிவை இங்கு பார்க்கிறேன்.
இது என்னுடைய 200வது பதிவு. காலம் எவ்வளவு வேகமாக போகிறது....
சிறு வயதிலிருந்தே நான் எம்ஜிஆர் ரசிகன். இது என்னத்தெரிந்த எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்னுடன் விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் மக்கள் திலகத்தைப் பற்றி ஏதாவது குறையாக கூறுவார்கள். அது உண்மையோ பொய்யோ, காதில் அது விழுந்தவுடன் கோபம் தலைக்கேறும். "எங்கள் எம்ஜிஆர் இதையெல்லாம் செய்திருக்கிறார்...இன்னும் செய்து கொண்டிருக்கிறார்... இதுபோல செய்தவர் வேறு யாரும் உண்டா...? " என எனக்குத் தெரிந்த ஒரு பட்டியல்...பொதுவாக நீண்ட பட்டியலாகவே இருக்கும்... ஒன்றைத் தருவேன்.
இவர் போல யாரென மற்றவர் சிந்திப்பதை நிறையவே பார்த்திருக்கிறேன். பதில் சொன்னவர்களைக் காணோம். இளம் வயதில் இப்படி பல அனுபவங்கள் எனக்கு. ஆனால் வளர வளர எம்ஜிஆரின் சினிமா முகம் மட்டுமல்ல, அவரின் நிஜ முகமும் தெரியத்தொடங்கி விட்டது. முதியோரிடமும் சாதுக்களிடமும் அவருக்கு இருந்த மரியாதையை படிக்க நேர்ந்த போது, மற்றவர்களுடன் ஏற்பட்ட வீண் விவாதங்களை எண்ணி சிரித்துக்கொள்வேன்.
எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது, ஒருவர் என்னிடம் வந்து " நீதிக்குப் பின் பாசம்" பார்த்தாயா?" என்றார். "பார்த்தேன்" என்றேன். தலையை ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் அசைத்து " பாதிக்குப் பின் மோசம்.." என்றார். அவரின் தமிழ் ஆற்றலை எண்ணிச் சிரித்தேன். ரங்கராவ், ராஜம்மா, அசோகன் என பலரும் திறம்பட நடித்து வெற்றி ஓட்டம் கண்ட பல இனிமையான பாடல்களைக் கொண்ட படம் அது.
சிலருக்கு எம்ஜிஆர் அவர்களை அவர்களின் சொந்த காரணங்களுக்காக பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதில் தவறொன்றுமில்லை. காந்தியை பிடிக்காதோரும் சிலர் இருந்திருக்கின்றனரே.... ஆனாலும் புரட்சித் தலைவரைப் போல வேரொருவர் இல்லை என்பதே என் வாதம், இன்றுவரை.
மக்களுக்கு சில நன்மைகளைச் செய்த அரசியல் தலைவர்களை சிலர் அவ்வப்போது எம்ஜிஆருடன் ஒப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் அரசியலோடு சரி. அதற்கப்புறமும் எம்ஜிஆர் தொடர்கிறாரே... அவருடன் ஒப்பிட்டு பேசிய அரசியல்வாதிகள் மற்ற துறைகளில் எம்ஜிஆருடன் நிகராக வரக் காணோம். அதே போன்றே அவர் நடிப்பும். எனக்குப் பிடித்த பாணியில் அவர் நடிக்கும் போது எனக்கு அவர் சிறந்த நடிகராகவே தோன்றுகிறார். அவரை விட நல்ல நடிகர்கள் இருக்கலாம். அனால், அந்த நடிப்பிற்கு அப்புறமும் பேசக்கூடியவை அவர்களிடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. எம்ஜிஆரிடம் உத்தமமான பல நல்ல குணங்கள் உண்டு. எல்லா லட்சணங்களும் கொண்டது அவரின் முகம். அவர் காலமாகும் வரை அதில் பிரகாசம் இருந்தது. அதே போலவா மற்றவர்கள்...?
எம்ஜிஆர் அவர்களின் குணப் பெருமைகளை பலரும் பேசக் கேட்கும் போதும், படிக்கும் போதும் ஆச்சரியம் எழுந்ததுண்டு. இப்படி ஒரு மாமனிதர் இந்தக் காலத்தில் உண்டா எனும் ஆச்சரியமே அது.
கண் தெரியாத, காது கேளாத, பேச முடியாத பலரின் நல்வாழ்வுக்கு, எம்ஜிஆர் அவர்கள் மறைந்தும் ஆற்றும் மாபெரும் தொண்டு அவர் மனித வடிவில் தெய்வம் என மற்றவர் சொல்வதை ஆமோதிக்க வைக்கிறது.
No comments:
Post a Comment