Friday, 11 May 2012

முகத்தினில் எதுவும் தெரிவதில்லை...

ஒருவரின் முகத்தை பார்த்து அவர் நல்லவரா இல்லையா என்பதை சொல்லிவிடும் சாத்தியம் இப்போது இல்லை. . .  வன்மத்தை மனமாகவும் நேயத்தை முகமாகவும் கொண்டுள்ளோர் பரவலாக நடமாட தொடங்கி விட்ட தற்போது அரவே இல்லை.

தங்களுக்கு லாபகரமான ஒரு காரியத்தை சாதிக்க சிலர் பல நாட்கள்,   பல வாரங்கள், பல மாதங்கள், ஏன் பல வருடக்கள் கூட நல்லவர்கள் போல் நம் அருகிலேயே இருக்கிறார்கள். காத்திருந்து கிடைத்துவிட்ட பின் அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்... நாம் வருந்தத் தொடங்கி விடுகிறோம். பொதுவாக கடன் கொடுத்தவர்களுக்கே இப்படி பல இடங்களில் நடந்தாலும், மற்ற எல்லா  விசயங்களிலும் கூட இந்த நடிகர் திலகங்கள் ஏராளமானோர் மின்னுகின்றனர்.

சில நேரங்களில் எப்படித்தான் முயன்றாலும் நம்மால் இவர்களிடம் இருந்து தப்ப முடிவதில்லை.  இப்படிப்பட்டோர் நண்பர்கள் வட்டாரத்திலும், உறவினர் மத்தியிலும் இலை மறைக் காயாக இருக்கிறார்கள்.

பழகும் விதத்திலும், சொல் அலங்காரத்திலும் 916 தங்கம் போல நடந்து கொள்வர். நம்மை  நாமே ஊடுருவிப் பார்த்தால் என்ன தெரியுமோ அந்த அனைத்து உன்னதமான குணங்களும் அவர்களிடம் தெரியும். அதே நேரம், நம்மிடம் இல்லாத ஒன்றும் அவர்களிடத்தே தெரியும்... அது, " என்றாவது ஒரு நாள் உன்னை வஞ்சிப்பேன்" எனும் சுடர் விடும் தீ. அதுமட்டும் நம் கண்களுக்குத் தெரியவே தெரியாது.

நானும் இது போன்ற ஏமாற்று வித்தைக்கு விலக்கல்ல. ஆனால் என்னை சில ஆயிரம் வெள்ளிகள் ஏமாற்ற அவனுக்கு சுமார் இருபத்தைந்து  ஆண்டுகள் பிடித்தது.  இப்போது  கண்ணில் படாமல் மறைந்து வாழத் தொடங்கி விட்டான் அவன்.  ஜெகத்தை காக்கும் அந்த ஜெகனுக்குத் தெரியும், என்ன செய்வதென்று.

இதுபோன்ற அனுபவங்கள் பலருக்கும் இருக்கலாம். " வெளியே சொன்னா, வெக்கக்கேடு...." என்பது போல பலரும் மனதுக்குள்ளேயே போட்டு துயர் படுவது உண்டு.

தர்மம், நியாயம், சூடு சொரணை என்பதெல்லாம் தமிழில் அவர்களுக்கு தெரியாத சில வார்த்தைகள்.

No comments:

Post a Comment