இளம் வயதில் நாங்கள் வசித்த கிள்ளான், 'மேட்டன்' தோட்டத்தில் மூடைப்பூச்சி தொல்லையினால் அவதிப் பட்டது நினைவுக்கு வருகிறது.
எனக்கு அப்போது ஒன்பது வயதிருக்கும். கீழே படத்தில் இருக்கும் 'பம்' கொண்டு ஒவ்வொரு இரவும் படுக்கைக்கு போகுமுன் ஒரு வித மூட்டைப்பூச்சி கொல்லி மருந்தை அடித்துவிட்டு சில நிமிடங்கள் சென்றே உறங்கச் செல்வது வழக்கமாக இருந்தது. மூட்டைப்பூச்சி மருந்தால் தற்கொலைகளும் அதிகம் என்பதால், பெரியோர் மட்டுமே வாங்கும் மருந்தாக இது இருந்தது அப்போது. அவ்வளவு கடுமையான பூச்சிக்கொல்லியால் கூட கட்டுப் படுத்தத்தான் முடிந்ததே தவிர முற்ற துடைத்தொழிக்க முடியவில்லை.
கரப்பான் பூச்சியின் சிறிய வடிவமே மூடைப்பூச்சி. ரத்தத்தை உறிஞ்ச உதவும் கொடுக்குடன் காட்சி தரும் இதற்கு ஆங்கிலத்தில் 'பெட் பக்' என்று பெயர். கடித்தபின் அரிப்பதன் பிறகே மூட்டைப்பூச்சியின் கடியை உணரமுடியும். அவ்வளவு லாவகம் தெரிந்தவை இந்த பூச்சிகள். சிலருக்கு கடிபட்ட இடம் தடித்து விடுவதும் உண்டு. ஆனால், ஆத்திரம் கொண்டு அவற்றை நசுக்கிவிட்டாலோ, அதன் நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.
எங்கள் தோட்டத்தில் மட்டுமல்ல, அநேகமாக எல்லா தோட்டப்புறங்களிலும் இந்த மூட்டைப் பூச்சித் தொல்லை இருந்து வந்தது. இன்னும் சொல்லப் போனால் மூட்டைப் பூச்சி சினிமா என்று கிள்ளான் நகரில் ஒன்று அண்மைய காலம் வரை செயல்பட்டு வந்தது. இது வயதாகும் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், இளவயதுக்காரர்களுக்கு தெரியுமோ என்னவோ. ஆயினும், இந்த சினிமா இப்போது நவீன வசதிகள் கொண்டு புது இருக்கைகளுடன் கடந்த மாதம் பல அரங்குகள் கொண்ட சினிமா காம்ப்ளெக்ஸ்ஸாக அறிமுகம் கண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
சினிமாக் கொட்டகைகள் மட்டுமா, வண்டி வாகனங்களிலும், பஸ், ரயில் வண்டிகளிலும் மூட்டைப் பூச்சிகள் ஓஹோவென கொடி கட்டி ஆட்சி புரிந்தன ஒரு காலத்தில். அதன் கடுமையான தாக்கத்தினால் தான் " மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையாக" எனும் பழமொழியும் உருவாகி இருக்கவேண்டும். அப்படி ஒரு பயத்தை இந்த மூட்டைப்பூச்சிகள் உருவாக்கி இருந்தன.
No comments:
Post a Comment