Sunday, 8 April 2012

காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. . .

சிலவற்றை சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் நமக்கே பிரமிப்பாக இருக்கும்.

எவ்வளவு பெரிய சூழ்நிலைகளை நாம் சமாளித்து வந்திருக்கிறோம் என்பது நமது மனத்திரையில் ஓடும்.

காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. அது தனது கடமையைச் செய்துகொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. கால ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் அதனோடு சிக்கிச் சுழன்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

நல்ல அனுபவங்கள் நமக்கு மகிழ்ச்சியூட்டுகின்றன. மற்றவை நம்மை எண்ணச்சிதைவில் தள்ளி ஏக்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டு வாழ்ந்துகொண்டிருப்போர் நம்மிடையே நிறைய பேர் உண்டு.  "அந்தக்காலத்திலே நாங்க..." என பெரியோர்கள் தங்கள் கடந்த கால அனுபவங்களை இப்படி நினைவுகூர்வது  அவர்கள் அன்று மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள் இன்னும் பசுமையாக அவர்கள் மனங்களில் இருப்பதனால்தான்.

அதே நேரத்தில் " வேண்டாம், அதைப்பற்றி பேச விரும்பவில்லை..." என்று எண்ண அலைகளில் பின்னோக்கிச்செல்ல விரும்பாதோரும் உண்டு. இவர்களின் அன்றைய பாதை கல்லும் முல்லும் நிறைந்ததாக இருக்குமோ என்னவோ...

எப்படி பார்க்கினும், வாழ்க்கை நமக்கு எல்லாக் காலங்களிலும் ஏதாவதொன்றை சொல்லிக்கொண்டேதான் வந்திருக்கிறது.

சங்க கால இலக்கியங்களில் சொல்லப்பட்ட பாலையும் நீரையும் பிரித்து உண்ணும் அன்னப் பறவைகளைப் போல நாமும் இருக்கப் பழகினால் அன்றைய இனிமையும் இன்றைய புதுமையும் என்றென்றும் நம்மோடு இணைந்து வந்துகொண்டே இருக்கும்...

No comments:

Post a Comment