Sunday, 7 July 2013

ஆர்பிடி மையத்தின் அன்னதானம் 2013



பத்து மலையில் நேற்று யோக சித்தர் ஓம் ஸ்ரீ ராஜயோக குருவின் தெய்வீக பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் இடம்பெற்றது. காலை 7 மணியில் இருந்து பல ஆயிரம் பேர்  மலையடிவாரத்தை முற்றுகை இட ஆரம்பித்து விட்டனர். எப்படியாவது குருஜியின் பார்வை தங்கள் மேல் விழாதா, அவரை அருகில் இருந்து பார்த்துவிடும் சந்தர்ப்பம் கிடைக்காதா என அவர் வரும் பாதையின் இரு மருங்கிலும் ஆட்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.காலை 10.30 மணியளவில் பலத்த கரவொலிக்கிடையே குருஜி வந்து சேர்ந்தார்.

பொதுவில் இளையோரே அதிக அளவில் இருந்ததினாலும், தங்கள் அமைப்பைச் சார்ந்த சின்னத்தை அணிந்திருந்ததாலும் இது ஏதோ ஒரு தனிப்பட்ட ஒரு அமைப்பு ஏற்று நடத்தும் கல்வி யாத்திரை அல்லது ஒரு வேல்வியைப் போலப்பட்டது. பத்துமலை இன்று ஆர்பிடி மையத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது போல கோயில் அடிவாரம் இந்த அமைப்பின் அங்கத்தினர்களால் நிறம்பி வழிந்தது. இதனால், வழக்கமான முருகன் வழிபாடுகளுக்காக வந்திருந்தோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியூர் சுற்றுப்பிரயாணிகளுக்கும் இந்த நிலைதான். என்ன நடக்கிறதென தெரியாமல் குழப்பத்துடன் இருந்தது தெரிந்தது. வழக்கமான பிரார்த்தனைக்கு போகும் பாதைகள் தடுக்கப்பட்டன அல்லது தடுக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல், சேலையில் சில நூறு பெண்களை வழி நெடுகிலும் மனிதச்சங்கிலி போல நிறுத்தப்பட்டிருந்தது   சற்று வித்தியாசமாக பட்டது.
தங்களுக்கு பின்னால் குறுகிய பாதையில் நடக்க சிறமப்பட்டு இடித்துக் கொண்டும் பிடித்துக்கொண்டும் உள்ளே நுழையும் மக்கள் இவர்களின் செயல் கண்டு அதிருப்தியில் முகம் சுளித்தது பார்க்க வருத்தம் தந்தது. குருஜி தனிப்பட்ட மேடைக்கு வரும் வரை, இந்த கைகோர்த்தபடி நின்றிருந்த பெண்கள் உதிர்த்த வார்த்தைகளான, " தள்ளி நில்லுங்கள், பின்னால் போய் நில்லுங்கள், உள்ளே வராதீர்கள், இந்தப் பக்கம் வரக்கூடாது, அங்கே செல்லாதீர்கள், யார் உங்களை உள்ளே விட்டது, இங்கே வராதீர்கள் என்பன போன்ற வார்த்தைகள் ஏதோ மந்திரம் போல திரும்பத் திரும்ப இவர்கள் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தது.

பாவம் வயதானோர். இந்நிகழ்விற்கு வந்தது தவறோ என சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டனர். இந்த பந்தா பெண்மணிகளினாலும், இதன் அமைப்பாளரின் அனுபவமின்மையினாலும், நிகழ்ச்சியின் முழு வெற்றி பாதிக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. வழக்கமான தைபூசத் திருநாளையே எவ்வித சலனமும் இல்லாமல் கண்டு களிக்கின்ற மக்களுக்கு இந்த பெண்மணிகளின் செயல் அதிக பட்ச பந்தாவாகவே பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வருடம் நடந்த தவறுகள் நிகழாமல் இருக்க பார்த்துக்கொள்வது நல்லது.

கூட்டுப் பிரார்த்தனைகள், வழிபாடுகள் மூலமாக ஆர்பிடி எனப்படும் இந்த இயக்கம் பல சமூக சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஏழை மாணவர்களுக்கு புத்தகப் பைகளும், தகுதி பெறும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப் படுகின்றன.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட பத்துமலை மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டத்தோ நடராஜா, குருஜியின் கைகளால் தனது புத்தகம் ஒன்றை வெளியீடு செய்தார். 'எங்கெங்கு காணினும் எழில் முருகன் ' எனத் தலைப்பிடப்பட்டிருந்தது அந்த நூல்.

குருஜி பேசும் போது, ஆர்பிடி இயக்கம் இந்திய சமுதாயத்தை நல்வழிப்படுத்த பல ஆய்வுகளுக்குப் பின் தன்னால் ஆரம்பிக்கப் பட்டது என்றார். பல்வேறு கல்வி மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளும் இன்னும் நடத்தப்படும் என்றும் இவை சமுதாய மேம்பாட்டிற்காக தான் எடுத்துக்கொண்ட சேவை என்றும் தன்னால் இதை செய்து முடிக்கும் நம்பிக்கை இருக்கிறதென்றும் குறிப்பிட்டார்.

அவருடைய ஆசிர்வாதத்தினைப் பெற ஆயிரமாயிரமானோர் அவர் பின்னே செல்வதை இங்கே காண முடிந்தது.














Friday, 5 July 2013

திரை கானங்கள்...

"துன்பக் கடலைத் தாண்டும் போது, தோணியாவது கீதம்"
என்றார் கவிஞர். துன்பத்தில் மட்டுமல்ல, இன்பத்திலும்  நம் துணைக்கு வருவது கீதங்களே.

மதுர கானங்களாக நம் காதுகளில் ரீங்காரமிட்டு நம்மை மகிழ்ச்சிக்கடலில் மிதக்க வைப்பவை இது போன்ற பாடல்களே...


தாமதம் செய்யாதே தோழி
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி

தானாக வீடு தேடி தலைவன் வந்த போது
தானாக வீடு தேடி தலைவன் வந்த போது
சரியாக கவனியாமல் இருப்பதும் ஆகாது
சரியாக கவனியாமல் இருப்பதும் ஆகாது
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி

கன்னல் சுவை விருந்து அவர் உண்ண வேண்டாமா
கன்னல் சுவை விருந்து அவர் உண்ண வேண்டாமா
களிப்பினிலே சொர்க்கத்தையும் காணவேண்டாமா
தன்னை மறந்தே அவரும் மயங்க வேண்டாமா
தன்னை மறந்தே அவரும் மயங்க வேண்டாமா
உன் தலைவி அதை பார்த்து மனம் மகிழ வேண்டாமா
உன் தலைவி அதை பார்த்து மனம் மகிழ வேண்டாமா

தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி

 G வரலக்ஷ்மியின் குரலில் என்ன இனிமையாய் ஒலித்தது இப்பாடல்.
மனச்சோர்வுக்கு மருந்து கசக்கும் மருந்துகள் இல்லை. இனிக்கும் நினைவுகளே. அந்த இனிமையான நினைவுகளை மீண்டும் நமக்கு நினைவூட்டுவது பழைய திரை கானங்களே. இதோ இன்னுமொன்று...


மாதா பிதா குரு தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்

ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது நாம்
ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது நாம்
ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதி உணர்ந்தது போலே
ஓதி உணர்ந்தது போலே என்றும்
உண்மையாய் நடந்து உயர்வோம் மண்மேலே

மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்

காலையில் எழுந்ததும் படிப்பு
காலையில் எழுந்ததும் படிப்பு பின்பு
காலைக் கடனையும் உணவையும் முடித்து
காலையில் எழுந்ததும் படிப்பு பின்பு
காலைக் கடனையும் உணவையும் முடித்து
நூலைக் கையிலே எடுத்து
நூலைக் கையிலே எடுத்து பள்ளி
நோக்கி நடந்து கற்பது சிறப்பு

மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்

தெய்வம் தொழுதிட வேண்டும் நம்
தேசத்தின் மீதன்பு செலுத்திட வேண்டும்
கைத்தொழில் பழகிட வேண்டும் மஹாத்மா
காந்தியின் சொற்படி நடந்திட வேண்டும்

மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்

திரைப்படம்: நான் பெற்ற செல்வம், பாடியவர்: ஏ.பி. கோமளா, இயற்றியவர்: கு.ம. ஷெரிஃப்,  இசை: ஜி. ராமநாதன், ஆண்டு: 1956

ழைய திரைகானங்களை கேட்பதில் ஒரு சுவாரஸ்ய உண்மையும் இருக்கிறது.  அதிக அளவில் ஒலியுடன் அவ்வகை கானங்களை நாம் ரசித்து கேட்க முடியாது. ஒலியளவு சுமார் நிலையில் இருந்தால் பாடல்களின் இனிமை கூடுகிறது. 

புதியவை அப்படியள்ள. ஒலி அளவு குறையும் போது பலவித இசைக்கருவிகளின் ஒலி காதுகளில் விழாமலேயே போய்விடுகிறது. ஆனாலும், மற்றவருக்கு உபத்திரவமாக இல்லாதிருக்க காதுகளில் அணியும் ஒலிபெருக்கியின் வழி புதுப் பாடல்களை நம் இஷ்டத்துக்கு கேட்டு மகிழலாம்.
திரைப்படம்: நான் பெற்ற செல்வம்
Singers: A.P. Komala - பாடியவர்: ஏ.பி. கோமளா
Lyrics: K.M. Sherif - இயற்றியவர்: கு.ம. ஷெரிஃப்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாதன்
Year: - ஆண்டு: 1956 - See more at: http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/naan-petra-selvam/maatha-pithaa.php#.UdcwmX8Z5kQ

Wednesday, 3 July 2013

கண்டிப்பு...

கண்டிப்பு என வரும்போது "அவர் என்ன உத்தமனா? பெரிதாய் கண்டிக்க வந்துவிட்டார்..? என ஒரு பிரிவினர் கேள்வி எழுப்புகின்றனர்.

உண்மையில் பல குடும்பங்களில் இளையோரோடு குடும்பத் தலைவர்கள் இந்தவித தர்க ரீதியில்தான் தொடர்பு கொள்ளும் சூழ் நிலைகள் அமைகின்றன. காலம் கடந்த கண்டிப்பும் இதற்கு ஒரு காரணமாகும். பிள்ளைகள், பொதுவில் ஆண் பிள்ளைகளே இப்படி ஒரு கேள்வியுடன் பெற்றோரை எதிர்க்கிறார்கள்.

தந்தை தவறு செய்திருக்கலாம்....அதை எதிர்க் கேள்வியாக பிள்ளைகள் கேட்பது எந்த வகையில் அவர்களுக்கு ஞாயம் எனப் படுகிறதோ, தெரியவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் நீதிபதியை பார்த்து " நீங்கள் உத்தமர்தானா?" எனக் கேட்பதில்லை.

தேர்வில் காப்பி அடித்து மாட்டிக்கொள்ளும் மாணவர்கள் ஆசிரியரைப் பார்த்து " நீங்கள் உத்தமனா?" எனக் கேட்பதுண்டா?

அலுவலகங்களில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலும் மேல் அதிகாரியை " நீங்கள் உத்தமனா?" எனக் கேட்க நேர்ந்தால் அடுத்து என்ன நடக்கும் என எண்ணிப்பாருங்கள்.

கொள்ளையடிக்கப்படும் இடத்துக்கு வரும் போலிஸ்காரர்களைப் பார்த்து " நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா?" எனக் கேட்டு குற்றவாளி ஜாலியாக அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை.

இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆயினும் குடும்பத்தலைவராக இருக்கும் தந்தை கண்டிக்கும் போது மட்டும் எப்படி " நீங்கள் உத்தமனா? என்னைக் கண்டிக்க உங்களுக்கு என உரிமை இருக்கிறது என இன்றைய சில இளைஞர்களால் கேட்கமுடிகிறது?

பெற்றோர் வளர்ப்பில் நேர்ந்த குறை என முடிப்பதை விட வேறென்ன சொல்ல இருக்கிறது?

இளம் பெற்றோர் கவனிக்க வேண்டியது இது. குழந்தைகளை அன்பு, பண்பு, பாசம் என வளர்க்கும் அதே நேரம், சற்று கண்டிப்புடனும் இருங்கள். அதிக செல்லம் அவர்களை கெடுக்கும் என்பது நினைவில் இருக்கட்டும்.

பூம்புகாரில் கண்ணகியின் கால் சிலம்பு...

சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.

 நண்பர் ஒருவர் தமிழ் நாட்டுக்கு சென்றிருந்தார். பல கோயில்களுக்கும் சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கிவிட்டு, பூம்புகார் எனும் இடத்தில் ஒரு கலைக்கூடத்தை சுற்றிப்பார்த்ததாக சொன்னார்.

" அங்கே இருக்கும் சிலைகளில் ஒன்றில் கண்ணகி தன் காலில் அணிந்திருந்த சிலம்பு ஒன்றைக் கோவலனிடம் கொடுப்பதாக இருக்கிறது" என்றார்.

" அட இதில் என்னப்பா சந்தேகம் ? என்றேன் நான். இது நாம் படித்ததுதானே... பின்னர் அ நீதி இழைக்கப்பட்ட கோவலனுக்காக தன்னுடைய மற்றொரு சிலம்பையும் எடுத்துக்கொண்டு அரன்மனைக்குச் சென்று "“நல் திறம் படராக் கொற்கை வேந்தே, என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே!” அதாவது தன்னுடைய காற் சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது எனச் சொன்னதாகத்தான் நாம் படிச்சிருக்கோம்ல...."

நண்பர் தொடர்ந்தார், "அந்த சிலையினில் கண்ணகியின் கால்கள் இரண்டிலும் இரண்டு சிலம்புகள் இருந்ததைப் பார்த்தேன் " என அவர் சொல்லிமுடித்ததும்  அவரின் சந்தேகம் எனக்கும் பற்றிக்கொண்டது.

அதெப்படி சரியாகும்....ஹ்ம்ம்...?
மாதவியைப் பிரிந்து, பார்த்து பல காலம் ஆன கண்ணகியை பார்க்க வரும் கோவலன் ஏதாவது தொழில் செய்து பணம் ஈட்டும் சிந்தனையில் வருகிறான். ஆனால் அவனிடம் ஒன்றுமில்லை, இதை அறிந்திருந்த கண்ணகி, தன் கால் சிலம்புகளில் ஒன்றை கழற்றித்தந்து கோவலனுடைய கவலையை தீர்க்கிறார்.

அப்போ அவர் காளில் இன்னும் ஒரு சிலம்பு மட்டும்தானே இருந்திருக்க முடியும்? மூன்றாவது எங்கிருந்து வந்திருக்கும்...? கணக்கு சரியா வரலையே.... நண்பர் தவறாக பார்த்திருப்பாரோ?


அன்றைய நம் நாட்டு பாடகர்கள்...

பிறந்தது முதல் போவது வரை நம்மோடு துணைக்கு வருவது இசை என நமது பதிவுகளில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இளம் வயதில் நான் பார்த்து, கேட்டு ரசித்த உள்ளூர் பாடகர்களை இன்று நினைவுகூர்வோம்.

பல பாடகர்கள் நம் மொழிப்பாடல்களை வானொலி, தொலைக்காட்சி மற்றும் கலப்பட நிகழ்ச்சிகளில் பாடி பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றனர். அவர்களில், எம் எஸ் பிரிட்டோ, ராஜ ராஜ சோழன், ரேசா, ஸ்ரீ சண்முக நாதன், சாரங்கபாணி, என்.மாரியப்பன், சுதன், கேசவன், கே, லாரண்ஸ், சின்னப்பன், எம் ராமையா, மாதவன் போன்ற ஆண் கலைஞர்களும், சுசிலா மேனன், சுகந்தி பெருமாள், சாந்தி, மலர்விழி மற்றும் மணிமாலா போன்றோரும் எவ்வளவு காலம் ஆனாலும் நம் நினைவை விட்டகலாத அன்றைய நமது உள்ளூர்ப்பாடகர்களாகும்.

1970ம் 80ம் ஆண்டுகளில் தொலைகாட்சியில் நமக்கு ஒரே ஒரு பாடல் பாட வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தபோதே இங்கு சொல்லப்பட்ட பாடகர்கள் அந்த வாய்ப்பினைப் பயன் படுத்தி தமிழ்ப் பாடல்களுக்கு ஏங்கி நின்ற பல்லாயிரம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தங்களின் திறமையினால் முத்திரையிட்டுச் சென்றனர்.

ரங்கையான் மேரா, வானொலி 6 போன்ற கால கட்டங்களில் கலப்படமும் பெரும் புகழோடு உலா வந்துகொண்டிருந்தது. தொடக்க இசை, ஒரு பாடல், ஒரு நகைச்சுவை, ஒரு போட்டி அங்கம் மீண்டும் ஒரு பாடல், இறுதியில் முடிவிசை என கலப்படம் ஒலியேறிக்கொண்டிருந்தது. அதில் பல உள்ளூர்ப்பாடகர்கள் ஜொலிக்கத்தொடங்கினர்.

அன்றைய பாடகர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்க அன்றைய தயாரிப்பாளர்கள் தாயார் நிலையில் இருந்தனர். திறமை இருந்தோரை இது போன்ற மேடை நிகழ்ச்சிகளில் இடம்பெறச்செய்வதனால் அவர்களும் மக்களிடம் மனப்பூர்வமான கைதட்டல்களை வாங்கிச் சென்றனர். வானோலியில் அன்று மதி சுல்தான், அசன் கனி, ரெசா, துளசி கிருஷ்ணன், சுசிலா, பைரோஜி நாரயணன், பி சுப்பையா, வீ ஆறுமுகம், பாலசேனா போன்றோர் பணியில் இருந்து வானொலி நேயர்களுக்கு பொழுது போக்கானதாகவும் அதே நேரம் பயனுள்ளதாகவும் மலேசிய வானொலியில் சேவையாற்றினார்கள்.

எம் எஸ் பிரிட்டோ 80களில் பத்து கேவ்ஸ் பகுதியில் லைனடெக்ஸ் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். வேலை நிமித்தம் அவரை அங்கு பார்த்து பழகிய அனுபவம் எனக்குண்டு. பகுதி நேரங்களில் தன் குரலை மாற்றி சி எஸ் ஜெயராமனைப் போல பாடிவந்தார். சந்தனப் பொதிகையில் தென்றலெனும் பெண்ணாள்.... நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே... போன்ற பாடல்கள் அவர் குரலில் இனிக்கும். தனது சிகையளங்காரத்தை அப்ரோ ஸ்டைலில் வைத்து பல காலம் மக்களின் மத்தியில் பாடி புகழுடன் இருந்தார்.

 பாடகர் ராஜ ராஜ சோழன், சீகாழி கோவிந்தராஜன் குரலில் புகழ்பெற்றார். " அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்..." என அவர் பாடிய போது உடல் சிலிர்த்து அன்று. உணர்வுப்பூர்வமாக பாடல்களை தேர்ந்தெடுத்து, பார்ப்போரையும் கேட்போரையும் பரவசப்படுத்தியவர். அவர் குரலில் எனக்கு அதிகம் பிடித்தது " உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா..." எனும் கர்ணன் திரைப்பாடலாகும். அசலைப்போலவே இவர் குரலும் பாடலோடு ஒன்றியிருந்தது. சீர்காழியார் பாடல்களை இவர் பாடி கேசட் விற்பனையிலும் பெரும் புகழ் சேர்த்தவர் இவர்.

 ஸ்ரீ சண்முக நாதன் பல குரல் மன்னனாக வலம் வந்தார். அவரது இருகுரல் திறமையை வியந்து பாராட்டாதவரே இல்லை எனலாம். நகைச்சுவையில் மலாய் நடிகர் ஜமாலி ஷாடாட் பல குரலில் சிரிப்பலையை தொடர்ந்து கொண்டிருக்க, இரு குரலிசை பாடல்களில் நமது ஸ்ரீ சண்முக நாதன் மக்களை அவர்களது காதுகளை கூர்மையாக்கி தனது குரல் மாற்றிப் பாடும் வித்தையில் லயிக்கச் செய்தார். அவர் பாடிய டூயட்டுகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில்' தாழ்வு எனும் பாடல் பல இடங்களில் பாடப்பட்டது. இன்னும் அவர் இதை மேடைகளில் பாடிக்கொண்டிருக்கிறார். கடைசியாக எஸ் ஜானகி அம்மாவுடன் அவர் பாடி தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தோம்.

சாரங்கபாணி தமிழ்ப்பாடல்களோடு மலாய் மொழியில் பாடுவதிலும் கெட்டிக்காரர். 'ஹித்தாம் மானிஸ், ஒஹ் ஹித்தாம் மானிஸ், பாண்டாங் தாக் ஜெமு, பாண்டாங் தாக் ஜெமு' என அவர் பாட தமிழ் மக்கள் மட்டுமல்ல மலாய் மக்களும் ரசித்தனர். ஹித்தாம் மானிஸ் என்பது கருப்பு வர்ணத்தை குறிக்கும் வார்த்தையாகும். கருப்பானாலும் ( மான் நிறமானாலும் ) போரடிக்காதது உன்முகம் எனும் பொருளில் இருந்தது அப்பாடல். ( கருப்புதான் எனக்கு பிடித்த கலரு பாடலுக்கு முன்னரே திரு சாரங்கபாணி கருப்பு நிறத்தை வர்ணித்து பாடிய பாடல் )


இன்னும் வரும்....
sorry ...work in progress....

கல்வி கற்பதில் பெண்கள்...

கல்வி கற்றவர்களின் வளர்சியை வைத்தே ஒரு குடும்பத்தின் முன்னேற்றம்  அளவிடப்படுகிறது.

ஆரம்பக் கல்வியிலிருந்து இடை நிலை பள்ளிகளில் கற்கப்படுவது கட்டாயக் கல்வியாக இருந்தாலும்,  பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க தேர்வு பெறும் ஆற்றலே தனியொரு நபரை வெற்றிபெற்றவராக காட்டுகிறது. இதனால் அவர் சார்ந்த குடும்பமும் நாடும் பலனடைகிறது.

பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதில் கூட ஆண் பெண்  என பேதம் கொண்டிருந்தோம் முன்பு. இப்போது அந்நிலை மாறிவிட்டது. உண்மையில் ஆண்களைவிட பெண் குழந்தைகளே கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். மலேசிய அரசாங்கம் அறிவித்த புள்ளி விவரங்களைப் பார்க்கையில் 5ம் படிவம் முடிந்து மேல் படிப்புக்கு தேர்வாகும் மாணவர்களில் ஆண் பிள்ளைகள் 32% என்றும் பெண் பிள்ளைகள் 68% என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு பெண் கல்வித் திட்டத்தில் நாம் முன்னேறி விட்டோம் என்பதையே இது காட்டுகிறது. முன்னேறி விட்டோம் என்றாலும் முற்றாக வெற்றி பெற்று விட்டோம் எனவும்  சொல்வதற்கில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியதிருக்கிறது.  காரணம், இன்னும் ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியின் மதிப்பும் முக்கியத்துவத்துவமும் அவர்களின் வாழ்வில் எவ்வளவு இன்றியமையாதது என சொல்லித்தராதது நமக்கு பளிச்செனத் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

ஒரு ஆண் கற்றவராக போற்றப்பட்டால் அது அவருக்கும் அவரைச் சார்ந்த குடும்பத்திற்கும் நன்மையாக அமையும். அதுவே ஒரு பெண் படித்திருந்தால் அது அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவரின் சந்ததிக்கே பெரும் பலமாக கருதப்படும். இதுபெரியோர் வாக்கு. இதில் பொதிந்திருக்கும் உட்கருத்தினை எண்ணிப்பார்க்கவேண்டும்.

பல துறைகளில் நம் சமூகத்தியப் பெண்கள் இப்போது வெற்றிக்கொடியைப் பறக்கவிடத் தொடங்கி விட்டனர்,  அவற்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியத் தொழில் ஒரு முக்கிய உதாரணமாகும். இன்னும் பல்வேறு செயல்திட்டங்கள் கொணரப்படவேண்டிய அவசியம் இருக்கிறது.

ஒருகாலத்தில் அரைகுறை படிப்புடையோருக்கு தொழிற்சாலைகள் கை கொடுத்தன. இப்போது அன்னியத் தொழிலாளர்களின் வரவால் அந்தச் சலுகை நம்மை விட்டுப்போய்விட்டது, நாம் பின்னுக்கு தள்ளப்படும் நிலை உருவாகி விட்டது. இதிலிருந்து மீள குடும்பத்தினரின் பங்களிப்பு இன்னும் அதிக அளவில் தேவை.

கல்வி ஒன்றே பெண்களுக்கு சரியான பாதுகாப்பாக அமையும். அதை பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெரியோரின் கடமை. இவர்களை ஊக்கப்படுத்தவும், கல்வியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பெரியோர் ஆசி என்றென்றும் தேவை.

சில இடங்களில் பெண்கள் முன்னேற்ற முகாம் என சில பொது நல அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதர விசயங்களோடு கல்வியின் சிறப்பு பற்றியும் இங்கு பேசுவதுண்டு. ஆயினும், கலந்து கொள்ளும் பெண்மணிகளில் சிலருக்கு இங்கு கிடைக்கும் நிதி உதவியே அவர்களின் இலக்காக படுகின்றது. இதனாலேயே பலர் இது போன்ற அமைப்புக்களில் அங்கத்தினர்களாகவும் பதிந்து கொள்கின்றனர். கிடைக்கும் உதவிகளை பெண்கள் நன் கு பயன் படுத்திக்கொள்ளவேண்டும். பணத்துக்காக மட்டுமல்ல, வணிகத் துறையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் துணிச்சலோடு ஏற்று தொடர்ந்து செல்லும் மனப்பக்குவம் வேண்டும். அதற்கு அவர்களுக்கு பக்கத் துணையாக ஓடோடி வருவது, கல்வியறிவு. கல்வி கற்பதென்பது பள்ளிக்கு அப்புறமும், பட்டம் பெற்ற பின்பும் கூட தொடர வேண்டும்.

பண்பு, நல்ல பழக்க வழக்கம், பொருளாதாரத்தில் முன்னேற்றம் எனத் தங்களை உயர்த்திக்கொள்ளும் பெண்களே சமுதாயத்தில் மதிக்கப்படுகின்றனர்.

Monday, 1 July 2013

குமுதம் ஜூன் 13