Friday, 12 April 2013

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2013 . . .

உலக செஸ் சாம்பியன்ஷிப் இவ்வருட நவம்பர் 6ல் துவங்கி 256 வரை சென்னையில் நடைபெறும் என தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது சதுரங்கத்தில் தமிழர்களின் ஆர்வத்தையும் நமது பூர்வாங்க ஆதிக்கத்தையும்  காட்டுகிறது.

2013ம் ஆண்டின் போட்டியாளர்கள்...

ஆண்டு தோறும் நடைபெறும் இவ்விளையாட்டு போட்டியினை முதன் முதலாக தமிழ் நாடு ஏற்று நடத்துகிறது. தமிழக அரசு 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் சட்டமன்றத்தில் அன்மையில் தெரிவித்திருந்தார்...

உண்மையில் கடந்த ஆண்டே தமிழ் நாட்டில் சென்னையில் இது நடத்தப்பட இருந்தது. ஆயினும், ரஷ்யா ஏலத்தில் தமிழ் நாட்டை விட சற்று அதிகமாக கணித்திருந்ததால் அச்சந்தர்ப்பம் அதற்கே கிடைத்தது. 

தமிழ் நாட்டின் நல்லெண்ணத்தை மனதில் கொண்டும், உலகச் சாம்பியன் வி. ஆனந்த் தமிழ் நாட்டைச் சார்ந்தவரானதாலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பதையும் ஏற்று  இவ்வருட அங்கீகாரம் சர்வதேச அளவில் தமிழ் நாட்டை கௌரவ படுத்தும் வகையில் உலக செஸ் கூட்டமைப்பு (எப்.ஐ.டி.இ.,) சென்னைக்கு வழங்கி இருக்கிறது.

ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் 44 வயதுடைய நமது விஸ்வநாதன் ஆனந்த் ஆவார். அவரை எதிர்த்து போட்டியிட இருப்பவர்...
இளம் வயதில் தனது பிரமிக்கத்தக்கத் திறமையினால் உலகினரின் கவனத்தைக் கவர்ந்திருக்கும்  நார்வேயின் 22 வயது மேக்னஸ் கார்ல்சன். 2012-ல் ரஷ்யாவில் நடந்த இத்தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

"விஸ்வநாதன் ஆனந்த் மற்றும்  மேக்னஸ் கார்ல்சன்"

மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிபார்க்கப் படும் இவ்விளையாட்டு உலகமுழுவதும் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் செஸ் விளையாட்டிற்கு பல தரப்பட்ட நிலையில் ஆதரவு இருந்தாலும் அனைத்துலக ரீதியில் அதன் கௌரவத்தை உயர்த்திப்பிடிப்பவர்கள் ஒரு சிலரே...

ஆக இவ்வாண்டு நடைபெறவிருக்கும் இப்போட்டிகளினால் எப்படிப்பட்ட ஊக்கத்தைத்  இந்தியாவின் சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர்களும் அவர்கள் கீழ் பயிற்சிபெறும் இதர விளையாட்டாளர்களும்  அடைவர் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை...

இவ்வாண்டு இறுதி போட்டியில் விளையாடும் ஆனந்த் நிச்சயம் நல்லதொரு விளையாட்டினை வெளிப்படுத்தி தனது சாம்பியன்ஷிப் பட்டத்தினை தற்காத்துக்கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. வழக்கமாக போட்டி விளையாட்டுகளுக்கு முன் கடும் தவம் போல தினமும் செஸ் பயிற்ச்சிகளில் மூழ்கிவிடுவார் என இவரின் பயிற்சியாளர்களும் குடும்பத்தினரும் சொல்வது நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. ஒரு சிறந்த வெற்றியாளர் பல தியாகங்களினாலும், அர்ப்பணிப்புகளினாலும் தான் தோன்றுகிறார் என்பார்கள். மற்றவர் உறங்கும் போது ஆனந்த் விளையாட்டு யுக்திகளை சிந்தித்துக்கொண்டிருப்பார் என அவர் குடும்பத்தினர் பத்திரிக்கை பேட்டிகளில் குறிப்பிட்டது அவரது கடுமையான தவத்திற்கு ஒரு உதாரணம் என நாம் கொள்ளலாம்.

மற்ற விளையாட்டுக்களைப் போல செஸ் பார்வையாளர்கள் போட்டி அன்று. ஆரவாரம் செய்யும் பெண்களும் ( சியர் லீடர்ஸ் )இப்போட்டியில் இல்லை. இருவர் மட்டுமே கலந்து கொள்ளும் விளையாட்டு இது.  ஒரு குறிப்பிட்ட சிலரின் முன்னரே இப்போட்டி விளையாட்டுகள் நடைபெறுகின்றன.  ஆயினும் நேரடியாக உலக முழுவதும் 'டெக்ஸ்ட்' எனப்படும் செஸ் குறியீடுகளில் இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இதனால் உலகமெங்கிலும் உள்ள செஸ் பிரியர்கள் இவ்விளையாட்டுக்களை  ஆர்வமுடன் அலசி கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

லைட்னிங் செஸ் என அதி வேகமாக விளையாடுவதும் இப்போது இவ்விளையாட்டின் முன்னோடிகளால் திட்டமிடப்பட்டு மற்றவர்களின் ஆர்வத்தை ஈர்க்க ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றது. அதோடு, ஒரு கிராண்ட் மாஸ்டர் ஒரே நேரத்தில் பத்து பேருடன் விளையாடுவதும் இவ்விளையாட்டுக்கு சக விளையாட்டாளர்களிடையே ஆர்வத்தை உண்டு பண்ணி இருக்கிறது.

இந்த முன்னேற்றங்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கேரி காஸ்பரோவ் எனும் ரஷ்ய விளையாட்டளரின் முற்போக்குச் சிந்தனையில் உதித்த மாற்றங்களாகும். விஸ்வநாதன் ஆனந்த் வெளி உலகுக்கு தெரியும் முன்னர் ரஷ்யாவின் அரசாங்க ஆதரவில் விளையாடிவந்த கர்போவ் போன்ற விளையாட்டளர்களின் பிடியில் இருந்து இப்போட்டிகளை சுவாரஸ்யமானதாக ஆக்கிய பெருமை மற்றொரு ரஷ்யரான  கஸ்பரோவ்வையே சேரும். இவரது பாணியில் செஸ் விளையாட பழகியோரில் நானும் ஒருவன்.

இப்போது இவ்விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பது மன மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தருகிறது.  கிரிக்கெட் போட்டியில் மயங்கிக் கிடக்கும் இந்தியர்களை இம்முடிவு இனி அறிவுக்கு வித்திடும் சதுரங்கம் பக்கம் திரும்பச் செய்யும். ஒரு காயை நகர்த்திவிட்ட பின் வேறு மாற்றங்களைச் செய்ய இயலாது இவ்விளையாட்டில். இதுவே நம் வாழ்வின் அடித்தளம் ஆகும். நாமெடுக்கும் எந்த முடிவும் மாற்றவியலாத சாதக பாதக பலன்களைத் தந்துவிடும் என்பது இதன் கருத்து. சிந்தித்து செயல் படுவதன் அவசியத்தை இவ்விளையாட்டு நமக்கு உணர்த்துகிறது. மனிதர்களின் புட்தி கூர்மையை அளக்கவல்லது சதுரங்க விளையாட்டு என பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது இவ்விளையாட்டு.  இதில் தங்களின் வலிமையை நிலை நிறுத்துவோர் வாழ்வின் ஏனைய அனைத்திலும் திறம்பட இருப்பார்கள் என்று பலருக்கும் அசைக்க முடியா நம்பிக்கை இருக்கிறது.

அது மட்டுமல்லாமல், "சர்வதேச அளவிலான இது போன்ற போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதன் மூலம் இளைய சமுதாயத்தினர் இடையே சதுரங்க விளையாட்டினை பயில்வதற்கான ஆர்வம் மேலும் அதிகரிப்பதோடு, பல சதுரங்க விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் வழிவகுக்கும்" என்பதனை முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

உலகின் பார்வை சுமார் இருபது நாட்களுக்கு சென்னையின் மேல் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

No comments:

Post a Comment