Saturday, 13 April 2013

சந்தேகங்கள், வலைத்தளங்கள்... நான்

நண்பர்களுடனான நமது உரையாடலின் போது சுவாரஸ்யமான பல விசயங்கள் வெளிப்படுவதை நாம் உணர்ந்திருப்போம்.

" அது என் தலையெழுத்து.." என்பார் சிலர்.
"எதையும் என்னால் மாற்ற முடியாது, அதுதான் என்னுடைய விதி.." என வேறு சிலர் சொல்வர்.

இப்படி இவர்கள் சொல்வதில் ஏதும் உண்மை உண்டாவென பல கேள்விகள், குளத்தில் எறிந்த கல் போல சிற்றலைகளாக சலனத்தை ஏற்படுத்தின.  விடை காண இணையத்தில் மூழ்கினேன் ஒரு நாள்.

மூழ்கும் பொழுதெல்லாம் முத்துக்கள் பல பெற்ற இனிய அனுபவம் எனக்கு இருந்திருக்கின்றது கடந்த ஆண்டுகளில்.
'இன்றைய சந்தேகங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ... என்பதே என் அப்போதைய மன நிலை.

கையில் புத்தகங்களை அணைத்தபடி, அவற்றின் ஸ்பரிஸத்தில்  குளிர்ந்து, புத்தகப்புழுவாக இருந்த   நான் இப்போது வலைத்தளங்களில் எனக்கெழும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நுழைவது, நின்று நிதானமாக நினைத்துப்பார்க்கும் போது என்னுள் புத்தம் புதிய  ராகங்கள்  தாமே  இசையமைக்கின்றது போல் ஒரு இனிமையான நினைவு.

அறிவியல் வளர்ச்சியின் பயனை நானும் பெறுகிறேன் என்பதே  மிகப்பெரிய மகிழ்ச்சியாகும்....

பதினைந்து வருடங்களுக்கு முன் வாழ்க்கையில் மறைந்தவர் யாருக்கும் இந்த முன்னேற்றம் தெரியாமலே போயிருக்கும். அதே போன்று நூறு வருடங்களுக்கு முன்பிருந்தோர் காகிதத்தையும் அச்சு இயந்திரங்களையும் கூட கண்டிருக்க மாட்டார்கள். ஆக இன்றைய உலகில் வாழ்வோர்  நாளைய வளர்ச்சியைக் காண கொடுத்துவைத்தவர்களே.

இந்த விஞ்ஞான வளர்ச்சியில் தகவல் பரிமாற்றத்தின் எல்லையில்லா வளங்களை  அள்ளிப் பருகும் அபரிமிதமான சந்தர்ப்பங்கள் நமக்குக் கிட்டுகின்றன இப்போது. 

இதில் நமக்கெழும் சந்தேகங்களுக்கு மட்டும் விடையில்லாது போகுமா....

ஆயினும், 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' எனும் மனப்பாங்கில்தான் வலைத்தளங்களில் இருப்பனவற்றை நாம் எதிர்கொள்ளவேண்டும். நூறு சதம் நல்லதுமில்லை தீயதுமில்லை.

தலைவலி, தலையெழுத்து என்றோ, ஊழ்வினைப் பயன் என்றோ நாம் சொல்வதன் நிஜங்களை 'நாம் தெரிந்து கொண்டுதான் பேசுகிறோமா அல்லது மற்றவர் சொல்லக்கேட்டு அதை அப்படியே ஒப்பிக்கிறோமா ...' எனும் மிகப்பெரிய கேள்வி பலருக்கும் தோன்றலாம். காரணம் சாதாரணமாக நாம் பேசிக்கொள்ளும் அனைத்தும் சமய நூல்களில் காணக் கிடைக்கும் அரிய கருத்துக்களாகும்.

அன்றைய காலந்தொட்டு இன்றுவரை பலருடனும் இந்த உண்மைகளை  நாம்  பகிர்ந்துகொண்டுதான் வந்திருக்கிறோம்.
அதே நேரம் , வாழ்க்கை நெறிக்கு அப்பாற்பட்ட பலவற்றை நாம் புறக்கணித்திருக்கிறோம்.... புறந்தள்ளியிருக்கிறோம். 

நம் மத நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்கள் சற்றே கரடு முரடாக இருந்தாலும், அவை நம் வாழ்வில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் நம் நலன் கருதி மெல்லமெல்ல ஏற்றுக்கொண்டு அதன்படியே வாழ்ந்து வந்திருக்கிறோம்.

இன்றைய நவீன உலகின் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள் புதிது, பார்க்கும் கோணங்கள் புதிது.
ஆயினும் எங்கிருந்து எப்படிப் பார்த்தாலும்  நம் வாழ்க்கை என்றென்றுமே சமைய அடிப்படை சாராம்சங்களை பிரதிபலிக்கின்ற ஒரே மாதிரியான வழ்க்கையாகவே இருந்து வந்திருக்கின்றது.

பழைய பிரச்சாரங்களை அப்படியே சொன்னால் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பன்மை மக்களிடையே இப்போது இல்லை. காப்புறுதி அட்டை விற்பனையில் பலரை சந்திக்கும் அனுபவத்தில் இருந்து இவற்றைச் சொல்கிறேன். எதையும் இன்றைய தலமுறையினருக்குச் சொல்லப்பட்டதைப்போல் அவர்களை முன்னிலைப்படுத்திச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள பலரும் தயாராக உள்ளார்கள்.

இந்த அரும் பெரும் கடப்பாடு , தன்முனைப்புத்தூண்டல் நிபுணர்களுக்கும், சமூக சமைய நெறிநிலை அறங்காவலர்களுக்கும்  நிறையவே உண்டு. புதுப் புது முறையில் மக்களுக்கு எழுச்சியினை ஏற்படுத்தி சமூக முன்னேற்றத்திற்கு அவர்களை தயார் செய்யும் தகுதியின் அடிப்படையிலான தார்மீகப் பொறுப்பு அவர்களுடையதே.

No comments:

Post a Comment