Thursday, 28 February 2013

உன்னை அறிந்தால் - நீ

 நமக்குப் பயன் தரும் அனைத்தும் புத்தக வடிவில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களும் ஞானிகளும் அடுத்தடுத்த தலைமுறையினருக்குத் தேவையான வழிகாட்டும் குறிப்புகளை எழுத்து வடிவில் நமக்கு சீதனமாக தந்திருக்கின்றனர்.
இது நமக்காகவும் நம்மைத் தொடர்ந்து வருகின்ற இளைய சமுதாயத்திற்கும் பெரியோர்களால் அருளப்பட்ட பொக்கிஷங்களாகும். இவற்றை சிறுகச் சிறுக படித்து வாழ்வின் நற்பண்புகளை இயன்றவரை நாமே கற்றுத்தீர வேண்டும்.
அடுத்தவர் சொல்லித் தெரிந்து கொள்வதென்பது தப்பான ஒன்றல்ல. ஆயினும் நாம் வாசித்து அதில் பொதிந்திருக்கும் நல்லவற்றை பிறருக்கும் தெளிவு படுத்துவது இன்னும் சிறப்பானதாக கருதப்படும். அதுமட்டுமல்ல, மற்றவர் தவறானவற்றை உண்மை போல் உரைப்பதும், அதை கேட்கும் நாம் அதன் பாவத்தில் விழாமல் நம்மை தற்காத்துக் கொள்வதும் இதனால் சாத்தியமாகிறது.
உதாரணத்திற்கு, "உன்னையே நீ அறி. உலகம் தெளிவுற புலப்படும்" என்றார்கள் சான்றோர். இது, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு சுலபமான ஒன்று.  படிக்க அவர்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களை இதற்குத் தகுந்தாற்போல் தன்னை அறிய உதவும் தவ நூல்களின் பக்கம் திருப்பினாலே போதும்.

வாசிப்பை மூச்சாய் கொண்டோர் தெரிந்து தவறிழைக்க மாட்டார். அரிய நூல்கள் அவர்களுக்கு அறிவை போதிக்கும் குருமார்களுக்கு ஈடாகின்றன. தனி நபர்களைப் போல் தப்புகளும் தவறுகளும் ஊடுருவி, அறிவுக்கப்பாற்பட்ட கருத்துக்களை நம்முள் திணிக்கும் செயல் அறவே இருக்காது.

கையில் எடுக்கின்ற தலைப்புகளுக்கு ஏற்றாற்போல் அத்துறையினைச் சார்ந்த பல மகான்களினால் இயற்றப்பட்ட புத்தகங்கள் எவ்வித சிரமும் இன்றி இப்போது கிடைக்கின்றன.  இதன் மூலம்,  நமக்குக் கிடைக்கும் வழிகளை நாம் பயன் படுத்தி நம் அறிவின் அடிப்படையை உருவாக்கிக் கொண்டு, அதற்கும் மேல் நாம் தேட வேண்டியது ஏதுமிருப்பின் அவற்றைத் தான் நாம் மற்றவர் மூலம் பெறவேண்டுமே தவிர, எடுத்தவுடனே 'அ தொடங்கி அக்கன்னா வரை' எல்லாவற்றிற்கும் பிறரை தேடிச் செல்வது நம்முடைய கையாலாகத, நாம் தகுதி குறைந்தவர்கள் எனும் குண நலன்களையே  காட்டும்.
தனிமனிதன் தவறு செய்வான், சிந்தனைச் செல்வங்களாகிய அற நூல்கள் தவறு செய்யாது. இதை உணர்ந்து இன்றிலிருந்து தினமும் நல்லனவற்றை வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வோம்.

MGR. . .

Flowers...



Wednesday, 27 February 2013

நம் வீட்டு தேவதை...

பொதுவாக நாம் விஞ்ஞானத்தின் சாயல் உள்ளவற்றை மட்டுமே நம்புகிறோம். உறுதியாக சொல்ல முடியாத, புரியாதவற்றை சிலரின் தனிப்பட்ட நம்பிக்கை என முத்திரை குத்திவிடுகிறோம்.  புராணத்தில் இருக்கும் குறிப்புகளையும், சான்றுகளையும் அலசி ஆராய்ந்து அவற்றில் உள்ள உண்மை நிலைதனை நிரூபிக்கவோ, மறுக்கவோ முனைவதில்லை. அது நமது வேலை இல்லை. வேறொரு குறிப்பிட்ட சிலரின் வேலை என நாம் ஒதுங்கிக் கொள்ள முடிவெடுக்கிறோம். முழு நம்பிக்கை வைத்து செயல் படும் ஒன்றில் தான் பூரணத்துவம் இருக்கின்றது என்பார் சான்றோர். அப்படி ஒன்றை இங்கே பார்ப்போம்.

நாம் குடியிருக்கும் வீட்டை கழுவி துடைத்தெடுத்து சுத்தமாக வைத்துக்கொள்வோம். நமது பெண்மணிகள் கடமை தவறாது இதை பின்பற்றி வருகிறார்கள்.  இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். ஒன்று நமக்கெல்லாம் தெரிந்ததுதான். சுத்தம் சுகம் தரும் என்பது.

ஆனால் பலருக்கும் தெரியாத இன்னொரு காரணமும் உண்டு. 
எங்கள் ஊர் குருக்கள் சொல்லியே எனக்கும் இது தெரிய வந்தது. ஒவ்வொரு வீட்டிலும் 'கிரஹ தேவதை' அந்தந்த வீட்டின் நலன் காக்க இருக்குமாம். அதுக்கு தெரிந்த ஒரே ஒரு வாக்கியம் "அப்படியே ஆகட்டும்...."

அதனால், வீட்டில் எல்லாமும் சுத்தமாகவும், பேசுகின்ற வார்த்தைகள் நல்லதாகவும் இருக்க வேண்டுமாம்.  மங்கலகரமான வார்த்தைகளை நாம் பேசும் போது அந்த தேவதை " அப்படியே ஆகட்டும் " எனுமாம்.  ஆனால், தப்பான வார்த்தைகளை..உதாரணத்திற்கு "இல்லை, முடியாது, மாட்டேன்" எனும் அபசகுன வார்த்தைகளை வீட்டில் யாராவது சொல்லினால் தேவதையும் "அப்படியே ஆகட்டும்" எனுமாம்.

அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதற்கேற்றாற்போல் நல்லவற்றை மட்டுமே பேசப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் வீட்டில் வசிக்கும் தேவதையும் "அப்படியே ஆகட்டும்" என சொல்லி ஆசிர்வதிக்கும் என்கிறார்கள்.

அப்படியானால் "இல்லை, முடிந்துவிட்டது " என்பது போன்ற உண்மைகளை சொல்லக்கூடாதா எனக் கேட்கலாம்.  "நிறைய இருந்தது, மீண்டும் வாங்கி வர வேண்டும்"  என்பதே சரியான பதிலாம். அப்போதுதான் தேவதையும் " அப்படியே ஆகட்டும் " என சொல்லுமாம்.

 நமது பூஜை அறையில் காலையிலும் மாலையிலும் உடலை சுத்தம் செய்து குளித்த பின் தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும்.   தீபத்தை ஏற்ற ஆறு மணி என்பது காலையிலும் மாலையிலும் சரியான நேரமாகும்.

ஞாயமான  நமது குறைகளை இறைவனிடம் சொல்லலாம்.  தப்பில்லை. இந்த குறைகளை நம் வீட்டில் வசிக்கும் தேவதை வீதியில் ஊர்வலம் வரும் அம்மனிடம் தெரிவித்து அந்த குறைகள் நிவர்த்திக்கப்பட ஆவன செய்யுமாம்.

அதே நேரம், வீட்டிலிருந்து வெளியே எங்காவது போவதற்கு முன்னர் பிராதான வாசலைப் பார்த்து  வணங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும். அப்போதுதான் 'வீடும் நாம் திரும்பி வரும் வரை பத்திரமாக இருக்கும், நாமும் பத்திரமாக திரும்பி வருவோம்' என சொல்கிறார்கள்.

Tuesday, 26 February 2013

குமுதம் வார இதழ்கள்...பிப்ரவரி 2013




நமக்கு வழங்கப் படுபவைகளை அலட்சியப் படுத்தலாகாது...

ஒருவர் நமக்கு ஆசையோடு விரும்பி வழங்கும் பரிசுகளையோ வாழ்த்துக்களையோ ஒரு காலமும் உதாசீனப் படுத்தக்கூடாது.  அப்படி செய்தால் கொடுத்தவர் வருத்தமடைவார். நம்மேல்  அக்கறையுடனும், நல்ல அபிப்பிராயத்துடனும் இருக்கும் அவர்கள் மனம் வருந்தினால் அது நமக்கு நல்லதல்ல. இராமாயணத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது.

திருமகளை வணங்கி அவர் அணிந்திருந்த மலர்  மாலையை
   பெற்ற,  மூவுலகுக்கும் சென்று இசைபாடும் கன்னி ஒருத்தி அதை துருவாச முனிவரிடம் கொடுத்தாள்.    அதன் மகிமையை நன்கு அறிந்திருந்த துருவாச முனிவர் மனமகிழ்ச்சியில் அதை தன் கழுத்தில் அணிந்துகொண்டு தேவலோகம் வந்தார்.

தேவலோகம் ஒளிக்கதிர்கள் வீச, பிரமாண்ட அழகுடன் காட்சியளித்தது.  பெருஞ்சிறப்போடு பரவசமாக யானை மேல் ஊர்வலமாக வரும் இந்திரனைக் கண்ட துருவாச முனிவர் தான் அணிந்திருந்த,  திருமகளிடம் இருந்து கிடைக்கப் பெற்ற அந்த மலர் மாலையை இந்திரன் மேல் பற்று கொண்டு அவனுக்கு கொடுக்க எடுத்து நீட்டினார்.

அதை பணிவன்புடன் வாங்கிக் கொள்ளாமல், தான் அமர்ந்து வரும் யானையின் அங்குசத்தால் வாங்கி யானை மேல் வைக்க, அது கீழே விழுந்து யானையின் கால்களில் மிதிபட்டது.துருவாச முனிவருக்கு இதைக் கண்டதும் பயங்கரக் கோபம்.  இந்திரன் தன்னை அவமதித்து விட்டான் என அவர் மனம்  வெம்பியது. 

இந்திரனை நோக்கி,
" திமிர் பிடித்தவனே, இந்த மலர் மாலை திருமாலின் மார்பில் குடியிருக்கும் திருமகளினுடையது.  இதை உனக்குக் கொடுக்க எண்ணினேன். உன் செருக்கால், அந்த பாக்கியத்தை நீ இழந்துவிட்டாய்.  ஆகையால் உனது அனைத்து செல்வங்களும், வளங்களும் உன்னை விட்டு கடலில் போய் சேரட்டும்.."
எனச் சாபமிட்டார்.

அத்தருணமே,  தேவ மங்கையர், கற்பக மரம், காமதேனு மற்றும் இந்திரனின் அனைத்துச் செல்வங்களும் அவனை விட்டு மறைந்து போயின.

"சாப மிட்டதும் சங்கமும் பதுமமும் பரியும்
சோப மிக்கவ ரம்பையர் சுரதரு களிரும்
மாப யன் தரு மற்றுள பொருள்களும் வளமும்
கோப மோடலை கடலிடைப் புக்கொழித் தனவே..."


அன்பும், ஆசியும் மற்றும் நமக்கு மன மகிழ்வோடு வழங்கப்படும் எதுவும் முக்கியமானதாக கருதி போற்றப்படவேண்டும்.



Sunday, 24 February 2013

நண்பர்களுக்குள் பகை நீங்கினால்....

ஈஸ்வரா வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா..
(ஈஸ்வரா..)

கிளியின் சிறகு கடன் கேட்கலாம்.. தப்பில்லே
க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்.. தப்பில்லே
நீல வானத்தை துவைக்கலாம்.. தப்பில்லே
நிலவை பூமிக்குள் இழுக்கலாம்.. தப்பில்லே
கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா
(ஈஸ்வரா..)

காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்.. தப்பில்லே
காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்.. தப்பில்லே
பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்.. தப்பில்லே
மாடர்ன் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும் என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா..
(ஈஸ்வரா..)

படம்: கண்ணெதிரே தோன்றினாள்
இசை: தேவா
பாடியவர்: உதித் நாராயணன்

Friday, 22 February 2013

பறவைகள் பலவிதம்...


 


தியானப் பயிற்சிகள். . .

மனதை ஒரு நிலைப்படுத்துவதே தியானம் என்கிறார்கள்.  தெளிவான சிந்தனைகளை பெறுவதற்கு தியானம் ஒரு தெய்வீக கலையாக போற்றப்படுகிறது. 

எண்ணங்களை ஒரு முகப் படுத்த முடியாதோருக்கு உதவியாக தியானப் பயிற்சி வகுப்புக்களும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. ஆயினும், இலவசமாக நடைபெறும் இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள நம் நாட்டில் குறிப்பிட்ட சிலரே ஆர்வம் காட்டுகின்றனர்.

( யோகா கற்றுக்கொள்ள புகழ்பெற்ற பலரும் ஆர்வம் காட்டுகின்றனர் வெளி நாடுகளில். இந்தியா தவிர்த்து பல மேலை நாடுகளில் இக்கலையினை சொல்லித்தரும் திறமையான குருக்களின் பற்றாக்குறை இருந்து வருகிறது. )

ராஜ யோகா, சகஜ யோகா என சில பெயர்களில் அழைக்கப்பட்டாலும், பலருக்கும் தெரியும் யோகா, பிராண சக்தியை மையமாகக் கொண்டு ஆசனங்கள் செய்யப் பழக்கும் யோகா மட்டுமே.       உடலுக்கும் உள்ளத்துக்கும் மறுமலர்ச்சி தேவை என நினைப்போர் உடற்பயிற்சிக்கென நடத்தப் படும் இது போன்ற யோகா வகுப்புக்களில் கலந்து கொள்கின்றனர். உடல் நலமானால் உள்ளம் நற்சிந்தனைகளைக் கொண்டிருக்கும் என்கிறார்கள்.

சமயச் சார்புடைய மையங்களில் " உன் உடலை நேசி, இந்த உடலில் தான் ஆன்மா வசிக்கிறது" என ஆன்மீகமும் மெல்ல அறிமுகப்படுத்தப் படுகின்றது.  உண்மையில் உடல், மனம், அறிவு, ஆன்மா எனும் இந்த நான்கையும் ஒருங்கிணைக்கும்   ஒன்றே யோகா எனும் சொல்லின் அடக்கமாக இருக்கிறது.

அனைத்துலக நிலையில் இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட யோகாவில் திளைக்கும் பலரும் அதன் சக்தியையும் அதனால் அடையும் மாற்றங்களையும் நன்கு அறிவார்கள். தமிழர்கள் மட்டுமன்றி பல மொழி பேசுவோரும், பல நாட்டினரும் இக்கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். யோகா கற்றுக்கொள்பவர்கள் யோகிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். உண்மையில் யோகி என்பது சிவனை குறிக்கும் ஒரு சொல்லாக இலக்கியங்களில் படித்திருப்போம்.  மகேந்திர மலையில் சிவபெருமான் ஞானதட்சிணாமூர்த்தியாகவும், யோக தட்சிணாமூர்த்தியாகவும் காட்சி அளித்துள்ளார் என தேவாரத்திலும் திருவாசகத்திலும் குறிப்பு இருக்கின்றது.

சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் முனிவர்களும் யோகாசனங்களைப் பற்றிய மேன்மையினை நிறையவே சொல்லியிருக்கின்றனர்.

முதன் முதலில் யோகக் கலையை தொகுத்து வழங்கிய பதஞ்சலி முனிவரின் பெயரால் இன்று உலகெங்கிலும் பதஞ்சலி யோக ஆரய்ச்சி மையங்கள் என பல இருக்கின்றன. இங்கே பக்தி யோகம், ஞான யோகம், கிருத யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் என 108 பிரிவுகளாக  விளக்கமாக பயிற்றுவிக்கப் படுகிறது.

தியானத்தினால் உடலின் பல வகை உபாதைகள் தீர்கின்றன அல்லது குறைகின்றன. மன அழுத்தம், நிம்மதியற்ற நிலை, விரக்தி என சஞ்சலப்படுவோருக்கு அவற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வாழ்வை சீராக வைத்துக்கொள்ள தியானம்  சிறந்த ஒரு மாற்று வழியாக செயல் படுகிறது.

நம் நாட்டில், மெய்ஞானம் வளர்க்கும் நோக்கத்தில் பல குருமார்களும், சமய ஒருங்கிணைப்பு ஆர்வளர்களும் இச்சேவையை ஆங்காங்கே வழங்கி வருகின்றனர். இருப்பினும், பலருக்கும் நன்கு அறிமுகமான தியான மையங்களும் ஒன்றிரண்டு  இங்கு  இருக்கவே செய்கின்றன.

அவற்றுள், ஜோகூர் மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு தியானப் பயிற்சி தரும் ஆர். பி. டி. மையமும் ஒன்று.  பங்குகொள்ளும் தலா ஒருவருக்கு எழுநூற்று முப்பது ரிங்கிட் அடிப்படை பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

இதன் தலைமை போதகர் டத்தோ டாக்டர். பாலகிருஷ்ணன் அவர்கள், மூன்று கட்டங்களாக கடை நிலை, இடை நிலை மற்றும் உயர் நிலை என பயிற்சிகளின் தரம் பிரித்து பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு பயிற்சியளிக்கிறார்.

'எஸ்ட்ரோவில்' ஞாயிற்றுக்கிழமைகளில் இவர் வழங்கும் தொலைகாட்சி தொடரில், தியான நிலைகளில் தேர்வோர் அடையும் சித்திகளைப் பற்றியும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் தற்போது.  சித்தி என்பது ஒரு வகை ஞானம். ஒருவரைப் பார்த்ததும் அவரின் முன், இப்போதைய, எதிர்கால நிலைகளை தெளிவாக இந்த சித்தியினை அடையும் ஒருவர் சொல்லிவிட முடியும் என்கிறார்.

மற்றொரு தியான நிலைகளை விவரிக்கும் மையம், பல கிளைகளைக் தன்னகத்தே கொண்டுள்ள கோலாலம்பூர் பங்சாரில் அமைந்திருக்கும் ராஜயோக பிரம்ம குமாரிகளின் தியான மையம்.

மேல் சொல்லப்பட்ட ராஜ யோக சித்தர் குருஜியின் அமைப்புக்கும் இதற்கும் வேறுபாடு மலையளவு எனலாம். ஆர்பிடி மையம் பிரமாண்டத்தின் பிம்பம் என்றால், பிரம்மகுமாரிகள் ராஜ யோக அமைப்பு நேர் எதிரான எளிமையை மையப்படுத்துகிறது. ஆன்மீகத்துக்கு ஆடம்பரம் தேவை இல்லை என்பது இவர்களின் வாதம்.  

நல்லொழுக்கத்துடன் வாழும் வழிகள் சொல்லித் தரப்படுகின்றன இங்கு.  ஆன்மா நேரிடையாக கடவுளுடன் தொடர்பு கொள்கின்றது என்கின்றனர். ஐம்புலன்களையும் அடக்கி, விகாரங்கள் அற்ற வாழ்வே அதற்கு துணைபுரியும் என்கின்றனர். ஆக, விகாரங்களை அகற்றி விசாலமான வாழ்வினை அமைத்துக் கொள்ளும் வழிமுறைகள் இங்கு கற்றுத் தரப்படுகின்றன.

ஏழு நாள் பயிற்சி என பிரம்ம குமாரிகள் மையம் தரும் அறிமுக பயிற்சிகளில் கலந்து கொள்வோருக்கு அவர்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் ஏனைய விசயங்கள்  முன்னோட்டமாக சொல்லித் தரப்படுகின்றன. இவர்களின் "பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக் கழகம்"  சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒன்றாக கருதப்படுகின்றது.

எது எப்படியோ, உளவியல் ரீதியிலோ, சமயச் சார்பிலோ தியானத்தை கற்றுத் தேர்வோர் பொது வாழ்வில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்களா?  பயிற்சிகளை பல வருட காலம் மேற்கொண்டும் அதே மேம்பாடடையா பழைய நிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறார்களா?
என்பது போன்ற பல விசயங்களை புதிய அங்கத்தினராக சேர ஆர்வம் கொண்டிருக்கும் பலர் கேட்கின்றனர்.

தியானத்தில் ஆரம்பித்து யோகப் பயிற்சியில் முடிந்தாலும், யோகப் பயிற்சியில் தொடங்கி தியான முறைகளை கற்றுத் தந்தாலும், முக்கிய அம்சமாக நாம் கவனிக்க வேண்டியது ஒழுக்கமான மனக் கட்டுப்பாடுகளையும், மனதை ஒருமுகப் படுத்தும் யுக்திகளையும் மட்டுமே.  மனதளவிலும், உடலளவிலும் நாம் கற்றுக் கொள்ளும்  ஒழுக்கங்கள் நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்திற்கும், சமுதாயத்துக்கும் நிச்சயம் பெரிய பயனைத் தரும்.


Thursday, 21 February 2013

அன்பினால் அன்பினை...

முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் , வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும் என பள்ளிப்பாடத்தின் போது படித்திருப்போம்.  இவை முள்ளுக்கும், வைரத்துக்கும் சொல்லப்பட்டவையே. மனிதர்களுக்கு அல்ல என நாம் நினைக்கும் நேரத்தில் உணவுப் பிரியர்களுக்காக சொல்லப்பட்டதோ என அருகில் இருக்கும் நண்பர் சந்தேகத்தைக் கிளப்புகிறார். நன்றாக சாப்பிட்டு உடல் பருத்து பெரிய வயிற்றோடு உலாவரும் ஆண்களும் பெண்களும் மீண்டும் உணவுக் கட்டுப்பாட்டினாலேயே  கொழுப்பு கரைந்து  உடல் இளைப்பதற்காக உவமையான சொற்றொடர்தான் இது என அவர் கருதுகிறார். 

கண்ணில் பட்ட மற்ற நண்பர்களிடம் வினவினேன். நயவஞ்சக நண்பர்களை அவர்களைப்போலவே நாடகமாடி கெடுப்பது என்றார் ஒருவர். அடேயப்பா... பெரிய வில்லங்கமான ஆளாய் இருப்பார் போலிருக்கிறதே என மனதிலே தோன்றியது.

இருக்கும் நண்பர்கள் பட்டியலில் இருந்து அதுபோன்றவர்களை களைவதை விடுத்து, அவர்களைப்போலவே நாமும் செய்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும். அதுமட்டுமல்ல, அப்படி செய்வது கொசுவை அடிக்க பீரங்கி கொண்டு வருவது போல அல்லவா ஆகும். தீயவர்கள் அவர்கள் துறையில் பட்டம் வாங்கியது போல நடந்து கொள்ளும் போது அவர்களிடம் சாதாரண நாம் மோதுவது சரியாகுமா...?
அதே போல, அன்பை அன்பால் வெல்லலாம். வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது.  பகைமையும் அப்படித்தான். பகைமை காட்டும் பலர் பாசத்திற்கு கட்டுப்படுகின்றனர். 

குறிப்பிடும் அளவுக்கு ஒரு சிலரே பகைமையை தங்களின் மரணப் படுக்கை வரை கொண்டு சென்றிருக்கின்றனர். அவர்கள் கடந்து வந்த அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். பொதுவாக நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களே பலரால் இறுதிவரை ஒதுக்கப்பட்டு, சபிக்கப்படுகின்றனர்.

ஆனால்,  நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? முடியாது என நாம் சொன்னாலும், 'அது இடத்தைப் பொருத்தது' என்கின்றனர் தீயணைப்புப் படையில் வேலை செய்வோர். 

காடுகளில் அதிக வெப்பம் தாளாது  சூரிய கதிர்கள் பட்டு தானே பிடித்தெரியும் நெருப்பை அணைக்க அப்படி எரியும் இடத்தினைச் சுற்றி வளையம் போன்று நெருப்பிடுகின்றனர். பாய்ந்து வரும் நெருப்பு பொதுவாக அந்த வளையத்துடன் நின்றுவிடுகிறது, தொடர்ந்து எரிவதற்கு ஒன்றுமில்லாததனால். 

Wednesday, 20 February 2013

டபிள்யூ டபிள்யூ ஈ சுப்பர்ஸ்டார்ஸ். . .

பிழைப்புக்காக  வில்லத்தனம் காட்டும் நடிகர்கள்...

வீடியோ டேப்புகள் வந்த நாள் முதல் மல்யுத்தத்தை தொடர்ந்து பார்த்து வருவோரில் நானும் ஒருவன்.  தொலைகாட்சியில் மிகவும் விறு விறுப்பாக போகும் நிகழ்ச்சிகளில் இந்த மல்யுத்தமும் ஒன்று எனலாம். 

குஸ்தி வீரர்கள் பார்பதற்கு முரடர்களைப் போல் தெரிந்தாலும், அவர்கள் சொன்னதைச் செய்யும் நடிகர்களாகவே எனக்குப் படுகிறார்கள்.
வெகு சிலரே சொல்லப்பட்ட வசனத்தை விடுத்து தங்களின் ஆர்ப்பாட்டத்தாலும், அடி தடி உதையாலும், டென்ஷன் படுத்தி விடுகின்றனர். ஆனால், அதுவும் பார்க்க நன்றாகவே இருக்கிறது. சினிமாவில் வரும் வில்லன்களைப் போல இவர்கள் இருப்பதால்
குஸ்தி சூடு பிடிக்கிறது.

ஹல்க் ஹோகன், ஆன்ட்ரே தெ ஜயன், மாச்சோ மேன், அல்டிமேட் வாரியெர் என ஆரம்பத்தில் இருந்தோர் முடிந்து தற்போது இரண்டாம் தலைமுறை குஸ்தி விளையாட்டாளர்கள் களத்தில் புகழ் பெற்று வருகின்றனர். எனக்குப் பிடித்த மல்யுத்த வீரர் ஜோன் சீனா.
மற்றெந்த தொலைகாட்சி நிகழ்ச்சிக்கும் இல்லாத அபாரமான வரவேற்பு இந்த குஸ்தி நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் உண்டு. பல மில்லியன் ரசிகர்களை கவரும் ஒரே நிகழ்ச்சி இதுவாகும். இதில் நிலைத்து நின்று பெயரெடுத்தவர்கள் ஹொலிவுட் சினிமா கதா நாயகர்களாகவும் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்கின்றனர். அப்படிப்பட்டோரில் தி ரோக், ஜோன் சீனா, ஸ்டீவ் ஆஸ்டின் போன்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.




கொடூரம்...





 நன்றி : மெயில் ஒன் லைன்

திட்டமிடல் அவசியம். . .

முன்னோக்கிப் பார்க்கும் 'எனலிட்டிக்கல் எபிலிட்டி' அதாவது பகுத்து ஆராயும் திறன் ஒவ்வொரு தனிப்பட்டவருக்கும், நிறுவனங்களுக்கும், அமைப்புக்கும், அரசாங்கத்துக்கும் மிக அவசியமானதாகும். இதையே திட்டமிடல் என் கிறோம்.கொள்கைகளையும் குறிக்கோள்களையும் உருவாக்கிக்கொண்டு அதன்படி செயல்படத் தொடங்குவதே திட்டமிடல் என வகைப்படுத்தி இருக்கின்றனர் பெரியோர். இப்போது என்ன செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எதிர்காலம் நமக்கு வலுவுள்ள ஓரிடத்தை கொண்டிருக்குமா என அப்போது எழும் சந்தேகத்தை இப்போது தீர்த்து வைப்பதே திட்டமிடல் என்பதாகும்.

சில சமயம் சின்ன விசயம்கூட நம்மை சிதறடித்து விடும். சின்னதோ பெரியதோ, எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கையாக நல்ல விதம் திட்டமிடுவது நம் வாழ்வை நாம் சீராக கொண்டு செல்ல மிகவும் உதவும்.

தொலைநோக்குப் பார்வையுடன் எதையும் ஆழமாக எண்ணி செயலில் இறங்குவது, ஆரம்பத்தில் கடினமாக பட்டாலும் போகப் போக அதுவே நமது வெற்றிப் படிகளில் ஒன்றாக மாறிவிடும். திட்டமிடுவதானது செயல்களுடன் இடைவிடாத தொடர்புடையது. எந்த நேரத்திலும் முடிவு செய்யப்பட்ட திட்டங்களை நோக்கியே நமது கவனம் இருக்கவேண்டும்.

அரசியல் தலைவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை திட்டமிடுதலுக்கான தேவை இருக்கவே செய்கிறது.

ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் அதன் அறிவியல் கண்டுபிடிப்பிகளிலும், அறிவியல் வளர்ச்சியிலும் அடங்கியுள்ளது என்பார்கள். ஆயினும் அதனோடு அரசாங்காம் இடும்  சமூக, பொருளாதார  நிலை திட்டங்களே அந்தந்த நாட்டின் வெற்றியினை நிலை நிறுத்துகிறது. நிர்வாகத் திறன் கொண்ட அதிகாரிகளால், கொள்கை வகுப்பாளர்களால்  வகுப்படும் திட்டங்கள் நல்ல அரசியல்வாதிகள் மூலம் நாட்டுக்கு நன்மைகள் தருகின்றன.

மாணவர்கள் தங்கள் நேரத்தினை பல பிரிவுகளாக பிரித்து தங்களுக்கான பாடத்திட்டத்தினை அங்குலம் அங்குலமாக அலசி அதன்படி படிக்கத்தொடங்கினால் தேர்வில் சிறப்பான இடத்தை அடைவது பெரிய ஒன்றாகப் படாது. அவ்வப்போது தங்களது பயிற்சிகளை மதிப்பீடு செய்வதும் உதவும்.

இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அமைப்புக்களை, அதன் வழி செய்ய நினைக்கும் பொது நலச் செயல்களை பலமுறை எண்ணிப்பார்க்க வேண்டும். அவசரத்தில், மனது சொல்வதைக்கேட்காமல், மதி சொல்வதைக் கேட்டு அதன்படி செயல் படத் தொடங்குவது தரமான அவர்களின் திட்டமிடும் ஆற்றலைக் காட்டும். அதில், வயோதிகத்துக்கு உகந்ததென நினைக்கும் அனைத்தையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதே ஏற்பாடு செய்துகொள்வதும் அடங்கும். மனை, மனைவி, மக்கள், மாதாந்திர கணிசமான வருமானம் என்பவைகள் அவற்றில் சில. தற்போது கையிருப்பிலுள்ள அனைத்து சக்தியையும், யுக்தியையும், பொருட்களையும், பொருளாதாரத்தையும்கூட எதிர்கால நலனுக்காக உபயோகப் படுத்திக்கொள்வது நல்லது.

இப்படியே புத்திக்கூர்மையிலும், நாவன்மையிலும் உயர்ந்தவர்களின் கண்ணோட்டமும். அது அவர்களின் எதிர்காலத்தை முன் நிறுத்தியே அமைந்திருக்கும்.

லாப நோக்கினை அடிப்படையாய்க் கொண்டே நிறுவனங்கள் தங்களின்  வல்லுநர்களைக்கொண்டு திட்டங்களை வகுக்கின்றன. வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர வரவு செலவுகளின் பட்ஜெட் நிலவரங்கள் சீர்தூக்கிப் பார்க்கப்படுகின்றன. அதன்படியே அவர்களின் தொழிலும் தொடர்கின்றது. சரியான திட்டத்தில் செயல் படாத நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்குப் பின் இழுத்து மூடப்படுகின்றன.

குடும்பத் தலைவர்கள், தங்கள் குடும்பத்தின் எதிர்கால தேவை அறிந்து அதன்படி குடும்பத்தை நடத்திச் செல்கிறார். மழைத்துளி போல சிறுகச் சிறுக சேமிப்பதன் வழி குடும்பத் தேவைகள் அனைத்தும் கவனத்தில் கொண்டு செயல் படுத்தப்படுகின்றன. அனாவசிய செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை பாதுகாப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் என்றென்றும் நிலைத்திட திட்டமிடுகிறார். அவருக்கு சக குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பும் கிடைக்கிறது.

பெண்கள் இல்லத்தரசிகளாக பிராகாசிக்கிறார்கள். வேறிடத்தில் பிறந்து புகுந்த வீட்டில் திருமணம் முடிந்த ஒரு சில வருடங்களிலேயே தங்களது ஆளுமைத்திறனை காட்டத் தொடங்கி விடுகிறார்கள். கணவனோடு இணைந்து குடும்பத்தை சிறந்த வழியில் பயணிக்கச் செய்ய இவர்களின் பங்களிப்பும் முக்கிய ஒன்றாகும்.


எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி.....

ஆண்டுகள் எத்தனையானாலும் மக்கள் மனங்களில் நிறைந்திருப்பவர், மன்னாதி மன்னன் மக்கள் திலகமே.
வெறும் நடிப்பில் மட்டும் ஏடுபட்டு பொருள் சேர்க்காமல், மக்களின் நல்வாழ்விலும் ஆர்வம் கொண்டு அவர்களுக்கு நல்லதை செய்ததன் வழி தலைவராகவும் ஆனார்.

புரட்சித் தலைவர் என அன்பாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் பல அரிய செயல்கள் மூலம் மக்களின் அபிமானதைப் பெற்று அவர்களின் இதய தெய்வமானார். மக்களுக்காக வாழ்ந்த மக்கள் தலைவர் அவர்.

தன்னைத் தேடி வந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், தேவை ஏற்படும் இடங்களுக்கெல்லாம் தானே சென்று வாரி வழங்கிய வள்ளல் அவர்.

மறைந்து 25 வருடங்கள் ஆகியும் இவ்வுலகில் இன்னும் பல லட்சம் பேர் அவர் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் மற்றவர்பால் பகைமை காட்டாதவர்.

கர்ணனாக நடிக்கத் தெரியாதவர். ஆனால் நிஜக் கர்ணனாக வாழ்ந்து மறைந்தவர். "ஈந்து ஈந்து கரம் சிவந்தவர்" என ஒட்டு மொத்த மக்களாலும் பூஜிக்கப்படுபவர்.

உடல் ஊனமுற்றோருக்கு அவர் உயிலில் எழுதி வைத்த ஏற்பாடுகளைப் படித்தும் அவர்மேல் கலங்கம் கற்பிக்க யாராலும் இயலாது.  அப்படி ஒருவர் இருப்பாரானால், அவர் அரக்க மனம் படைத்தவராகத்தான் இருக்க முடியும்.  மனிதப் பண்புகளின்றிப் பிறந்தவராகத்தான் இருக்க முடியும்.

சிவாஜி மையம் எனும் பெயரில் ஓரிருவர் அப்படி செயல் படுவது இணையத்தில் தெரிய வருகிறது.  மதிப்புக்குறிய காலம் சென்ற நடிகர் திலகம் பெயருக்கு மாசு கற்பிக்கப் பிறந்த குலமோ குணமோ அற்றவர்கள் அவர்கள்.அவர்களை கண்டிக்கும் கடமை சிவாஜி குடும்பத்தினருக்கே உண்டு.

எங்கள் எம்.ஜி.ஆர் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்...

எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி.....

திரைப்படத் தலைப்பில் மட்டுமல்ல, நிஜத்திலும்!!!

Saturday, 16 February 2013

வாசிக்கும் பழக்கம்...

புத்தகங்கள் வாசிப்பதற்கு ஓரளவு ஆர்வமும், 'வாசிப்பதனால் நன்மையே தவிர தீமை இல்லை' என்னும் எண்ணமும், நமக்குள் மேலிட வேண்டும். நேரத்தை வீனடிக்கும் செயல் என வாசிக்கும் பழக்கத்தினை நினைத்தால், அதன் பின் புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம், அது எவ்வளவு நல்ல புத்தகமாயிருந்தாலும் அதைத் தொட மனம்  வராது.

புத்தகங்கள் நமக்கு நல் அறிவினைத் தரும் ஆசிரியர்களாகவும், சந்தோசம் தரும் நண்பர்களாகவும் கருதப்படுபவை. கத்தியினை தீட்டுவது போல் புத்தியினை தீட்ட புத்தகங்கள் பேருதவியாக இருக்கின்றன. புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு புத்திக்கூர்மை உச்சத்தில் இருக்குமென அரிஞர்கள் குறிப்பிடுவதை நாம் படித்திருப்போம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலருக்கு வாசிக்கும் பழக்கம் இன்றியமையாத ஒன்றாக இருந்திருக்கிறது.   படிப்பதும், எழுதுவதும் மட்டுமே வெற்றியாளர் சிலருக்கு தங்களின் வாழ்வில் எல்லாமுமாக இருந்திருக்கின்றது. வயிற்றுப் பசியோடு இருப்பவர்களுக்கு அறுசுவை உணவு எப்படியோ அதுபோல அறிவுப்பசியோடு இருப்போருக்கு புத்தகங்கள் அமைகின்றன.

வாசிக்கும் பழக்கம் என்பதில் பல வகை உண்டு. சிலருக்கு  தினமும் நாளிதழை படித்தே ஆகவேண்டும். இல்லையேல் அந்த நாள் திருப்தியாக முற்றுப்பெறாது அவர்களுக்கு. வேறு சிலர், இணையத்தளங்களில்  கவனத்தை செலுத்துவர். வெளியூர் 'ஈசின்' இதழ்களையும், நாளிதழ்களையும் இணையத்தளங்களிலேயே படித்து தங்கள் ஆர்வத்தை தீர்த்துக்கொள்கின்றனர். புத்தகங்களை வாங்கும் பொருட்செலவும், அவற்றை சேமித்து வைக்கும் இடமும் குறைவு என்பவை இவர்கள் சொல்லும் காரணங்கள். உண்மையில் இவை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஞாயமானவையே. இணையத்தளங்களில் இனாமாக படிக்க எண்ணற்ற தலைப்புக்களில் கணக்கிலடங்கா பல   நூல்கள் இருக்கின்றன.

ஆயினும், என்னைக்கேட்டால், ஒரு புத்தகத்தை நம் கைகளில் ஏந்தி, அதன் பக்கங்களை ஒவ்வொன்றாக திருப்பி வாசிப்பதில் கிடைக்கும் மன அமைதி, இரண்டடி தொலைவில், கணினி திரையில் படிப்பதில் இல்லை என்பேன். இது என் கருத்து மட்டுமே. இதுவே சரி என என்னால் சொல்ல இயலவில்லை. காரணம், பத்தாண்டுகளுக்கு முன்னிருந்து கணினியின் வரவு, புத்தகம் வாசிக்கும் பலரை மாற்றிவிட்டதை நான் தினமும் பார்த்து வருகிறேன். நல்ல முன்னேற்றம் என்றே எனக்கும் படுகிறது.

வாசிப்பது அவசியம். வாசிக்க எடுத்துக்கொள்ளும் வழிமுறைகள் அவரவருக்கு ஏற்றாற்போல் இருப்பதில் கருத்து வேறுபாடு எதுவுமில்லை.

இலக்கியம், சமூகம், ஆன்மீகம் என பல துறைகளில் திறம்பட எழுதியோரும், இன்னும் எழுதி வருவோரும் நம்மிடையே நிறைய பேர் உண்டு.  கல்கி, அகிலன், ஜெயகாந்தன், மு.வ., நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், சுஜாதா போன்றோரின் படைப்புகள் இலக்கிய தரத்தில் புகழ் பெற்றவைகளாக இருந்திருந்தாலும், சமூக நாவல் எழுதுவோரும் வாசகர்கள் மத்தியில் புகழ் பெறவே செய்கின்றனர். அவர்களில் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரமணிசந்திரன், தி.ஜானகிராமன் போன்றோர் என்னைக் கவர்ந்தவர்கள்.

தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் அதிக அளவில் இருக்கும்  அதே நேரம் நம் மலேசிய நாட்டிலும் நட்சத்திர எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். நடப்புச் சூழ்நிலைகளுக்கேற்ப அவர்கள் அந்தந்த காலத்தில் எழுதிய புத்தகங்கள் நம் மலைநாட்டு மகிமையையும், நம் இனப் பெருமையையும் என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஒரு காலத்தில் பரிசாக மற்றவர்களுக்கு கொடுக்க நான் தேர்ந்தெடுத்தது நல்ல புத்தகங்களையே. ஆயினும் இன்று அப்பழக்கம் என்னிடம் இல்லை. காரணம் புத்தகத்தினை பரிசாக பெற விரும்புவோர் குறைந்துவிட்டார்கள். பரிசாக வழங்கப் பட்ட புத்தகத்தை என்னிடமே திருப்பித் தந்து "அன்கிள் நான் இதைப் படிக்க மாட்டேன். ஒன்லைனில் தான் படிப்பேன்" எனச் சொன்ன குழந்தைகளும் உண்டு. இப்போது பரிசு கொடுக்க வேண்டி நேர்ந்தால், ஒரு 'ஐபேட்' அல்லது 'டாப்' எனும் அட்டைக் கணினிதான் சிறந்த பரிசாக பிள்ளைகளுக்கு கொடுக்க முடியும். அதையே அவர்களும் விரும்புவார்கள்.

உண்மையில், ஒரு சாதாரண 'ஐபேட்'டில் பல நூல்களை தரவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்பு நேரம் கிடைக்கும்போது சாவகாசமாக படிக்க 'ஐபேட்' அல்லது 'டாப்'  எனும் அட்டைக் கணினி பெரிதும் உதவியாக இருக்கிறது. என்னுடைய 'ஐபேட்'டில் சுமார் நூறு புத்தகங்கள் சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு மினி நூல் நிலையமாக அது எனக்கு பயன்படுகிறது. யாருக்காகவாவது அல்லது எதற்காகவாவது காத்திருக்கும் தருணங்களில் இந்த 'ஐபேட்' உதவி கொண்டு அந்த நேரத்தை சுவாரஸ்யமானதாக மாற்றி பயனுள்ள வகையில் செலவிடுகிறேன்.

மற்றபடி நான் அதிகம் விரும்புவது புத்தகத்தினை கையில் ஏந்தியவாறு ஒவ்வொரு பக்கத்திலும் பார்வையை செலுத்தி, அந்தப் பக்கத்தின் வாசனையை நுகர்ந்து படிப்பதனையே. புதுப்புத்தகத்தில் இருக்கும் 'புதுமையும்' பிடிக்கும், அதன் 'புது' மையும் பிடிக்கும். அதைப் போல, பழைய புத்தகத்தின் வாசனையும் அதனோடு வரும் கடந்த கால நினைவுகளும் பிடிக்கும்.

ஆக, புத்தகங்கள்...அதிலும் நல்ல புத்தகங்கள் ஏராளம் இருக்க, அவற்றை ஆர்வமோடு படிப்போர் எண்ணிக்கையும் பெருகவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

ஒரே நாளில் இரண்டு விண்கற்கள் அதிசயம். . .

விண்கற்கள், எரிகற்கள், எரி நட்சத்திரங்கள் போன்றவை தினமும் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி படித்திருப்போம்.

நெருப்புப் பந்துகள் போல தோன்றும் அவை நம் பூமியை வந்தடைவதற்குள் எரிந்து காணாமல் போகின்றன.

ஆயினும் மிகப் பெரிய அளவில் இருக்கும் விண்கற்கள் எப்போதாவது ஒருமுறை பூமியில் வந்து விழுந்து பல சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

அப்படி பூமியில் விழாவிட்டாலும் பூமியின் நிலப்பரப்பின் மிக அருகில் ஒரு விண்கல் பறந்து செல்லும் போது சில சேதங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.  வெள்ளி  அதிகாலையில் ரஷ்ய யூரல் மலைப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது இச்சம்பவம். 

இந்த எரிகல் வெடித்து சிதறியதில் அவ்விடத்தில் இருந்த கட்டிடங்களின்  ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து அதன்  சிதறல்கள் பட்டு பலர் படுகாயம் அடைந்தனர். உடனடி எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது.  நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது இப்படி இருக்க, இன்னொரு அதிசயக்கச் சம்பவமும் நடந்துள்ளது.  சில மணி நேர இடைவெளியில் ஆஸ்ட்ராய்ட் 2012 டிஏ14 என்ற விண்கல் அதாவது சுமார் ஒரு  கால்பந்து மைதான அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் கூறினர்.

பெரிய மலை போன்ற விண்கல், பூமிக்கு மேலே 17 ஆயிரம் மைல் தொலைவில் கடந்து சென்றதாகவும்  விண்ணில் சுற்றிவரும் சாட்டிலைட்டுகளுக்கு மிக அருகாமையில் இந்த விண்கல் கடந்துள்ளதாகவும் விஞ்ஜானிகள் கூறினர்.

ரஷ்யாவில் எரிகல் வெடித்து சிதறிய சில மணி நேரம் கழித்து இந்த விண்கல் பூமியை கடந்து சென்றதாகவும், அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

ரஷ்யாவில் விழுந்த எரிகல் 49 அடி இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Friday, 15 February 2013

மலேசிய நாட்டின் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள். . .



இயலாதது ஒன்றுமில்லை. . .

எதிர்பார்த்த ஒன்று நடக்காத அல்லது கிடைக்காத போது இடிந்து போய் உட்கார்ந்து விடுகின்றனர் சிலர். பிறகு மனச்சோர்விலிருந்து இருதய நோய்கள் வரை பல வித பாதிப்புக்குள்ளாகின்றனர்.


பிளன் "ஏ" ஃபெயில் ஆகும் போது பிளன் "பி" எவ்வித தாமதமுமின்றி  இயல்பாகவே செயல்பாட்டிற்கு வந்துவிடவேண்டும்.  இதுவே வாழ்வின் எழுதாத கோட்பாடு. நாம் இறக்கும் வரை இயலாதது ஒன்றுமில்லை என நம்புவோருக்கு மட்டுமே இது சாத்தியம். இந்த நம்பிக்கை வருவதற்கு மனத்துணிவு அவசியம்.


அதனால்தான், திட்டமிடுதலில் அனுபவமிக்கவர்கள், எந்த ஒரு காரியத்திலும் இறங்கும் முன் எல்லா கோணங்களிலும் சிந்தித்து முன்கூட்டியே என்ன, எப்படி நடக்கும் என சீர் தூக்கிப் பார்த்து அதன் பின்னரே அதை செயல் படுத்துகின்றனர். இவர்களே ஒரு வழி அடைபடும் போது சற்றும் அசராமல் அடுத்த வழியினைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
எண்ணியது ஈடேறாத போது துவண்டு போய் "எல்லாம் முடிந்து விட்டதாக"  நினைப்பது கோழையின் செயல்.

ஓடி விளையாடு பாப்பா...

தலைமுறை வேறுபாடு காரணமாக இன்றைய குழந்தைகளின் வாழ்க்கைத் தரமும் மாறுபட்டிருக்கிறது. பொதுவாக அறிவியல் சீர்திருத்தங்களால் வாழ்வியலும் முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும், குழந்தைகளின் வளர்ச்சி என்னவோ அவ்வளவு சிறப்பானதாக சொல்ல இயலவில்லை. 

குழந்தைகளின் உடலுக்குத் தேவையான வலிமையைப் பெற அவர்களை வெளிப்புற விளையாட்டிற்குத் தூண்ட வேண்டும். எப்போதும்  கணினிகளைக் கட்டிக்கொண்டு நேரத்தை ஒரு நான்கு சுவருக்குள் வீனடிக்கும்  குழந்தைகள் இப்படி உடல் வியர்க்க ஓடி ஆடி விளையாடுவது அவர்களின் அங்கங்களை ஆரோக்கியமாக வளரச்செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரித்து உடலின் சுரப்பிகளையும் நன்கு இயங்க வழி செய்கிறது வெளிப்புற விளையாட்டு. அதே நேரம், மூளைக்குச் செல்லும் அதிகப் படியான இரத்தத்தில் 'நோர்பைன்பிரின்' மற்றும் 'எண்டோர்பைன்ஸ்' அளவு அதிகரித்து மூளை சுறுசுறுப்படைகிறது.

சுறு சுறுப்பான பிள்ளைகள் கல்வியிலும் சிறந்து விளங்குவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இளம்வயதில் வாழ்வை இனிமையாக ஆடிப்பாடி அனுபவிப்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. வெளியில் போய் விளையாடும் போது ஆடைகள் அழுக்காகிவிடும் என சில பெற்றோர் அனுமதிக்க மறுக்கிறார்கள். இது தவறு. மற்ற குழந்தைகளோடு வெளியில் விளையாடும் போது பல விசயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.

அதிலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருக்கும் குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், சித்தி சித்தப்பா, அத்தை மாமா, பெரியப்பா பெரியம்மா, தாத்தா பாட்டி என உறவுகளின்றி தனித்து வளரும் குழந்தைகளுக்கு  வெளியே விளையாட போய்வருவது பல நன்மைகளைச் செய்கிறது.

மனம். . .

நம் ஐம்புலன்கள் பெரும் உணர்வுகளை மூளை சிந்தனையாக மாற்றுகின்றது.  இதையே நாம் 'மனம்' என்கிறோம்.  நல்ல மனம் என பொதுவில் சொல்ல நாம் கேள்விப்படுவது நல்லெண்ணங்களின் உதயத்தையே. இதுவே நம் வாழ்வின் முக்கிய அம்சமும் கூட.  நல்லவற்றுக்கும் தீயவற்றுக்கும் அதுதான் காரணம்.

அறிவினைத் தந்து ஒருவனை ஆக்குவதும் அதுவே,
அறிவிஅனையகற்றி அவனை வீழ்த்துவதும் அதுவே.

துணிச்சலோடு நாம் வலம் வரவும்,
கோழையாய்  ஓடி ஒளிவதற்கும் மனமே காரணமாகின்றது.

 நல்லேண்ணங்களை விதைக்கும் அதுவே மற்றவரை அழிக்கும் தீய சக்தியாகவும் நம்முள் இருந்து நம்மை மாற்றுகின்றது.

சிந்தனையும், உணர்வும் சேர்ந்து அறிவினை படைத்து அதனுடன் நம் உடலையும் உள்ளத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறது.

உள்ளத்தில் ஏற்படும் உள்ளச்சிதைவே நமக்கு தோன்றும் பலவித நோய்களுக்கும் காரணமாகின்றது. ஆத்திரம் ஆவேசம் என ஒரு நிமிடமும், அன்பு, அமைதி என மறு நிமிடமும் மனிதன் மாறக்காரணம் மனம் அவனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாததே. அதற்கு நல்ல பயிற்சிகள் அவசியம். 

மனம் என்பதை நமது இல்லமாக கருதினால், அதில் எழும் எண்ணங்கள் நம் வீட்டுக்கு வரும் அழையாத விருந்தாளிகள் போலவாகும். வீட்டின் உரிமையாளரகிய  நாம் வந்திருப்போரை உபசரித்து அனுப்பி வைக்கவேண்டுமே தவிர, அவர்கள் தரும் உத்தரவுகளை நாம் கேட்டு அதன்படி நடக்க முடியுமா....? ஆளுக்கொரு உத்தரவு பிரப்பிக்கும்போது அவற்றை நாம் நடைமுறைக்கு ஒப்பானதாக ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா?

மனத்தில் எழும் தீய எண்ணங்களும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் போன்றவையே. ஏற்று நடக்க இயலாத அவற்றை நாம் உடனுக்குடன் அப்புறப் படுத்திவிட வேண்டும். அப்போதுதான் அங்கே நல்லவர்கள் வர விரும்புவர். நல்லெண்ணங்கள் உதயமாகி நம் மனம் நம்மை நல்வழிக்கு இட்டுச் செல்லும்.

மனம் இட்டபடி சென்றேன், மாட்டிக்கொண்டேன் எனச் சிலர் சொல்வார்கள். இதுவும் உண்மையே. உறுதியில்லா மனதில் அப்படி மாறுபட்ட எண்ணங்களே தோன்றும்.

என்னதான் தூய்மை, எளிமை, நேர்மை போன்ற நற்குணங்களைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும்,  தரையில் படுப்பதைவிட மெத்தையில் படுப்பதையே மனம் விரும்புகிறது. சைவ உணவு வகைகளை விடுத்து, கொன்று சமைக்கப்படும் மிருக உணவையே மனம் ஆசைப்படுகிறது. நேர் பாதையில் சென்றால் தோல்வி நிச்சயம் என குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்கிறது மனது. ஆக, மனதை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மிக மிகக் கஷ்டம்.

ஆனால், உயர் நிலை வாழ்வை தேர்ந்தெடுப்போர், இது போன்ற கஷ்டங்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. தியானம் மூலமும் முறையான உடற்பயிற்சி, உள்ளப் பயிற்சியின் மூலமாகவும் மனதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுகின்றனர். கண்ணியமான சிந்தனைகளைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு தோன்றுவதில்லை.

இந்த நவீன உலகில் ஒவ்வொரு நாளும் இப்படி நேர்மையாக, மனதினை தங்கள் வசப்படுத்தி வாழ்வோர் எண்ணிக்கை பன்மடங்காகிறது என்பதை பார்க்கும் போதும், படிக்கும் போதும் ஆச்சரியம் எழுகிறது.

நல்ல சிந்தனைகள் மேலெழும்போது, சாந்தம் நம்மைத் தேடி வருகிறது, மனது மகிழ்ச்சியடைகிறது. 

மனது மகிழும் போது  நமது  மூளையில் 'என்டார்வின்', 'மெலட்டோனின்', 'செரட்டோனின்' போன்ற என்ஸைம்களின் சுரக்கும் அளவு கூடுகின்றது.  இதனால், நம் இரத்தம் சீரடைகிறது... நோய்கள் எட்டிப்போகின்றன.

Tuesday, 12 February 2013

வீடுவரை உறவு. . .

" அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மிவிம்மியிரு
கைத்தல மேல்வைத்து அழும்மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!"
- பட்டினத்தார்

Monday, 11 February 2013

பத்துமலை 2013. . .


1892ல் பத்துமலையில் முதன் முதலில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. 1920ல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன.

ஒற்றையடிப் பாதையில் ஏறிச்சென்று மலைக் குகையில் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் போய் இன்று மூன்று வழிப்பாதையாக இந்த படிக்கட்டுகள் அமைகின்றன. போவதற்கும் வருவதற்கும் என இரண்டும், விழாக்காலங்களில் காவடிகள் போய்வர  நடுவில் ஒன்றும் என இந்த 272 இப்படிகளே பத்துமலையின் வளர்ச்சியினைக் காட்டுகிறது.



அடிவாரத்தில் இருந்து இந்த மலைக்குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. உடல் உபாதைக்குள்ளாகும் பலர் மேலே குகைக்கோயிலுக்கு வர சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வரமுடியாமல் ஏங்குவோரும் நிறையவே உள்ளனர். இருதய நோயால் தாக்கப்பட்ட  நான், சில வருடங்களுக்கு முன்னால் படியேறி மலைமேலே சென்று முருகனை வணங்க முடியா நிலை எனக்கும் ஏற்பட்டதுண்டு.  ஆனால் இம்முறை எவ்வித சிரமுமின்றி 272 படிகளை கடந்துவிட்ட மகிழ்சியில் எடுத்துக்கொண்ட படம் இது.


272 படிகளைத்தாண்டி மேலேறி வரும் பக்தர்களுக்கு கண்குளிரும் விதமாக ஸ்ரீ சுப்ரமணியர் சிலை ஒன்று காட்சிதருகிறது.



இந்துக்களின் புனித தலமாக இருந்தாலும், மலேசிய அரசாங்காத்தால் அங்கிகரிக்கப்பட்ட சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் வெளி நாட்டு  சுற்றுப்பிரயாணிகள் எப்போதும் வந்து இதன் அழகை ரசித்த வண்ணம் உள்ளனர். 

தமிழ் நாட்டில் இருப்பது போல புகைப்படம் எடுக்கக்கூடாதென கட்டுப்பாடு இங்கில்லை  என்பதால் பலரும் மகிழ்ச்சியாக இங்கே வந்து இறைவனை தரிசித்து நிழல் படங்களை எடுத்துச் செல்கின்றனர். தங்கள் நாடுகளில் உள்ள தம் நண்பர்களுக்கு அவற்றை காட்டி அவர்களும் இங்கு வர வழி செய்கின்றனர். நம் பத்துமலை அகில உலக புகழ் பெற்ற காரணங்களில் இதுவும் ஒன்று. அதிலும் விழாக் காலங்களில் அவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.


பத்துமலையின்  உச்சகட்டமாக அமைவது, இங்குள்ள மலை மேலிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலில் இடம்பெறும் பிரார்த்தனைகள்தான்.  எப்போதும் பக்தி மணம் கமழும் பாடல்கள் ஒலியேற்றப்பட்டு காலந்தவறாமல் பூஜைகள் செய்யப்படுகின்றன. அர்ச்சனைகளுக்கு 5.00 வெள்ளி வசூலிக்கப்பட்டாலும், சாதாரணமாக முருகப்பெருமானை வழிபட எந்தத் தடையும் இல்லை. 



ஆக உயரத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை முருகன் கோயில் ஒன்றும் இருக்கிறது. இதனைச் சுற்றி சுண்ணாம்புக்குகையின் இயற்கை வளர்சியை தடை செய்யாமல் அப்படியே விட்டிருக்கின்றனர். உதிரிப்பகுதிகளாக மேலிருந்து தொங்கும் சிறு சிறு மலைக் கட்டிகளின் முன் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர் இங்கு சுற்றிப்பார்க்க வருவோர். அதுமட்டுமல்ல, இந்த இடத்தில் இருந்து மேல் நோக்கினால், திறந்த வெளியில் வானத்தைப் பார்க்கலாம். இதன் வழியாகத்தான் தூய காற்றும் வெளிச்சமும் இங்குள்ள மலைக்கோயில்களுக்கு கிடைக்கின்றன.



பத்துமலையின் இடப்பக்கம் இருக்கும் இடத்தில் 50 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர், நின்ற கோலத்தில் தன் மார்பைப் பிளந்து அங்கு வீற்றிருக்கும்  ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியார் திருவுருவங்களை வெளிக்காட்டி அவர்கள்பால் தமக்கிருக்கும் பக்தியை புலப்படுத்துகிறார்.

 அனுமாரை குலதெய்வமாக வழிபடுவோருக்காக அங்கே ஒரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது.  இந்தக் கோயில் நவம்பர் 2001ல் திறப்புவிழா கண்டது.



இந்தியாவின் திருப்பதிக்குச் செல்ல இயலாதோருக்காக இங்கேயும்   ஸ்ரீ வெங்கடாச்சலபதி ஸ்வாமி அருள் பாலிக்கும் சன்னிதானமும் இருக்கிறது. 

 நமது 'பாவ்ஸ் டபுள்ஸ்' வலைப்பதிவுக்காக இப்படி ஒரு படம். 

வெளிநாட்டினரைக் கவரும் இன்னொரு அம்சமாக அமைவது படிகளின் இருபக்கமும் இருக்கும் 'மக்காவ்' வகை குரங்குகளே.  'ஆஞ்ச நேயா', 'ஹனுமானே'  என செல்லமாக அவற்றுடன் பழகினாலும், அவ்வப்போது அவை தங்களது மூர்க்கத்தனத்தையும் காட்டாமலில்லை. அவற்றைவிட கீழே அடிவாரத்தில் இருக்கும் ஆபத்தில்லாத புறாக்களே மேல் எனப் போவோரும் உண்டு. கும்பலாக தீனியை ருசிக்கும் அவற்றை திடீரென விரட்டிவிட்டு அவை ஒரே நேரத்தில் மேலெழுந்து பறப்பதை புகைப்படங்களாக எடுத்து ரசிக்கின்றனர்.

ஆக, பத்துமலை என்று சொன்னால், அடிவாரத்திலும், மலைமேலும் உள்ள தெய்வத்திருவுருவங்களை பக்தி உணர்வுடன் வழிபட்டு, மற்ற கலை அம்சங்களையும் ஒன்று சேர கண்டு களித்துச் செல்வதில் பலரும் மனச் சாந்தியடைகிறார்கள்.

கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கொம்மியூட்டர் சேவையும் பத்து மலை வரை இருக்கிறது.




தமிழில் சஸ்பென்ஸ் படங்கள். . . 1

எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் புதுப் படங்களுக்கு மத்தியில் பழைய படங்களை மீண்டும் ஒரு முறை பார்த்து வைக்கும் ரசிகர்களும் நம்மிடையே உண்டு. அன்மையில் ஒரு நண்பர் பழையவற்றுள் 'சஸ்பென்ஸ்' படங்கள் பற்றி வினவினார். பல படங்கள் அப்படி உண்டு. அதில் பேய் படங்கள் தவிர, கொலைப் படங்களாகவும் பல வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன.

கொலை செய்து தப்பிப்பதும், தப்பிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டு விழிப்பதும் என பலவித உணர்ச்சிக்குவியல்களாக தமிழ்ப் படங்கள் தந்திருக்கின்றன. இல்லாததை இருப்பதென்றும், இருப்பதை இல்லையென்றும் அடித்துச் சொல்லும் கதாபாத்திரங்களையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். 

எனக்குப் பிடித்த சில திகில் படங்களை இங்கே தருகிறேன், உங்களுக்கும் பிடித்திருக்கும் என்கிற நம்பிக்கையில். பார்க்காதவையாக இருப்பின் குறுந்தட்டுகளில் கிடைக்கும் அவற்றை பார்த்து ரசிக்க இந்தச் சீனப் புத்தாண்டில் இதுவே நல்ல நேரம்.

"புதிய பறவை" - சிவாஜி, சரோஜா தேவி மற்றும் பலரின் இயற்கையான நடிப்பில் வெளிவந்த படம். பணமிருந்தும் நிம்மதி இன்றி ஒரு வித ஏக்கத்தில் சுற்றி வரும் சிவாஜி தான் விரும்பும் சரோஜாதேவியிடம் தனக்கு ஏற்கெனவே மணமானதை சொல்லி அவரின் முதல் மனைவி இறந்துவிட்டதாக முடிக்கிறார். மகிழ்ச்சியாக போகும் சில நாட்களில், இறந்ததாக அவர் சொன்ன அவரின் முதல் மனைவி மீண்டும் வந்து கண்முன்னே நிற்க, அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு அதிர்ச்சி.
புதிதாக பார்ப்போருக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.


இடம் பெற்ற பாடல்கள்:
1   சிட்டுக்குறுவி முத்தம் கொடுத்து

2   உன்னை ஒன்று கேட்பேன்

3   பார்த்த ஞாபகம் இல்லையோ

4   ஆஹா மெல்ல நட மெல்ல நட

5   எங்கே நிம்மதி எங்கே நிம்மதி



"அதே கண்கள்" - ஒரு குடும்பத்தில் தொடர்ச்சியாக கொலைகள் நடக்க, கொலையாளி யாரென இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமல் சிறப்பாக இருந்தது இப்படம். கொலைகாரன் விட்டுச்செல்லும் துண்டு சுருட்டும், அவன் அங்கிருப்போர்களில் ஒருவன் என தெரிய வந்து ஒருவருக்கொருவர் சந்தேகத்தில் பார்த்துக்கொள்வதும் நன்றாகவே இருந்தது. கொலைகாரனை படத்தின் நாயகன் ரவிச்சந்திரன் பிடிக்க முயலும்போது அவன் கண்களை மட்டும் பார்த்துவிடுவதும் பின்பு அங்குள்ளோர் அனைவரையும் ஒவ்வொருவராக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதும்  நம்மை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் காட்சிகள். நாகேஷின் நகைச்சுவையில் அவ்வப்போது சிரிக்கவும் இடமளிக்கும் விதம் காட்சி அமைப்புகள் இருந்தன.

 நல்ல பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இசை டி ஆர் பாப்பா.
1   பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி

2   சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்

3   என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் 
     சொல்ல வார்த்தை இல்லையே...

4   ஒஹ் ஒஹ் எத்தனை அழகு இருபது வயதினிலே

5   பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
     பூதத்தைப் பார்த்து பயந்தாளாம்

6   வா அருகில் வாரா தா உயிரைத் தா....



"யார் நீ?" - ஜெய்சங்கர், ஜெயலலிதா, ஆனந்தன் நடிப்பில் வந்த படம். வெள்ளை ஆடையில் ஜெயலலிதாவின் நடிப்பு, அவர் நடந்து போகையில் கேட்டின் கதவு தானே திறந்து கொள்வது, கார் கண்ணாடியில் தண்ணீர் துடைக்கும் வைப்பர் தானே வேலை செய்வது, முதலில் பார்த்த இடம் மீண்டும் வந்து பார்க்கையில் வேறு விதமாக தோன்றுவது என திகிலை பல வழிகளில் கூட்டியிருந்தனர் படமெடுத்தோர். ஜெய்சங்கர் ஒரு மருத்துவராக இளமை மிடுக்காக படம் முழுக்க வருவார்.

 "நானே வருவேன்..அங்கும் இங்கும்..." என ஆவி பாடுவதாக அருமையான ஒரு பாடலை சேர்த்திருந்தனர் இதில். மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இப்பாடல் படத்தின் சிறப்பம்சம் என்பேன்.

1  என் வேதனையில்
    உன் கண்ணிரண்டும் என்னோடு
    அழுவதேன் கண்ணா...

2  முள்ளில் ரோஜா..துள்ளுதே ராஜா

3  பார்வை ஒன்றே போதுமே...
    பல்லாயிரம் சொல் வேண்டுமா...


"இதயக்கமலம்" - இறந்துவிடும் மனைவியை எரித்து முடித்து கவலையில் சோர்ந்திருக்கும்  ரவிச்சந்திரனிடம் " நான் தான் உங்கள் மனைவி " என கே. ஆர். விஜயா வந்து சொல்ல, படத்தின் சஸ்பென்ஸ் தொடங்குகிறது. அருமையான வாக்குவாதங்கள். பார்ப்போரை எது உண்மை என தெரிந்து கொள்ளும் ஆவலை தூண்டிய படமிது.

இதிலும் பல பாடல்கள் இனிமையாக ஒலித்தன:
1   மேலத்தெ மெல்லத் தட்டு மாமா...

2   நீ போகுமிடமெல்ல்லாம் நானும் வருவேன்
    போ போ போ...

3   மலர்கள் நனைந்தன பனியாலே...

4   என்னதான் ரகசியமோ இதயத்திலே...

5   தோள் கண்டேன் தோளே கண்டேன்...

6   உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...


மேலும் சில படங்களை 2ம் பகுதியில் பார்ப்போம்...

Sunday, 10 February 2013

கான மயிலாட. . .

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி. . .

Saturday, 9 February 2013

சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள் . . .




சீனப் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் "எண்ணங்கள் ஆயிரம்" வலைப்பதிவின் வாழ்த்துக்கள்.

Friday, 8 February 2013

பழமை என்றும் இனிமை...



1984ல் சிலாங்கூர் டிரெட்ஜிங் பெர்ஹாட் எனுமிடத்தில் பணியில் இருந்தபோது எடுத்த படங்கள் இவை...

வாழ்வின் பல பரிமாணங்களைக் கடந்து வந்துவிட்ட இந்நேரத்தில் அவற்றை மீண்டும் எண்ணுகையில் இதழோடு இளமுறுவல் இன்னிசை பாடுகிறது.

வாழ்க்கைக் கணக்கு. . .

Thursday, 7 February 2013

பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி. . .

இரு தினங்களுக்கு முன் என் பிறந்த நாளின் போது வாழ்த்துக்களை நேரிடையாகவும், தொலைபேசியிலும், கைபேசியிலும், மெஸ்ஸேஜிலும் தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
" யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம்... "

குடும்பத்தினரிடம் இருந்து பிறந்த நாள் பரிசாக பெற்ற 'சாம்சுங் எஸ்3' என்ட்ரோய்ட் கைபேசி, கையில் ஒரு கணினியாக. . .

இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!!!

டாக்டர் அருள் . . .


மேலும் கீழும்... மருத்துவ சந்தேகங்களை தீர்த்து வைக்கும் டாக்டர் அருள் அவர்களுடனான நேர் காணலின் போது எடுத்த படங்கள்.


மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல, அது ஒரு சேவை.  காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து தீர்த்து வைக்கும் அதே நேரம், ஒரு நல்ல மருத்துவர் மனித நேயத்தையும் வளர்க்கிறார், நோய் தாக்கும் முன் தேவையான தற்காப்பு பற்றியும் விளக்குகிறார்.

டாக்டர் அருள், வருமுன் காப்பதே சிறந்தது என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர். வந்தபின் வருந்துவதை விட அதுவே சிறந்த மருத்துவம் என்கிறார்.

பல வித நோய்களின் அறிகுறிகளை விளங்கிக்கொள்வதன் மூலம் அறிவியலை ஒருவர் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடலாம் என அடிக்கடி சொல்பவர்.

Visit to Dragon fruit Farm in Keluang, Johore




Monday, 4 February 2013

படித்ததில் பிடித்தது...

ஐயம் தெளிக எனும் தொடரில் சித்தாந்தச் செல்வர் முனைவர் நாகப்பன் அறுமுகம் அவர்களின் "எல்லாம் இறைவன் செயலா ?" என்ற தலைப்பின் கீழ்,  மக்கள் ஓசையில் வெளிவரும் தொடரில் 133ம் பாகம்.


மா. சுந்தரபாண்டியன், பினாங்கு
ஐயம் : எல்லாம் இறைவன் செயல் என்றால் உலகத்தில் ஏன் தீமைகளும் துயரங்களும் இருக்கின்றன?


தெளிவு :  எல்லாம் மனிதல் செயல் என்றால் உலகத்தில் தீமைகளையும் துயங்களையும் மனிதன் ஏன் உண்டாக்கிக் கொண்டான்?  நல்லதெல்லாம் அவன் செயல் என்றால் தீயதெல்லாம் கடவுள் செயல் என்று கூறுவது நியாயமாகாது அல்லவா?  நல்லது கெட்டது இரண்டுக்கும் மனிதன் பொறுப்பேற்றுக் கொண்டால் கெட்டதை அவன் தெரிந்தே உருவாக்குகிறான் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

எவ்வளவு நல்லவனுக்கும் எவ்வளவு அறிவாளிக்கும் துன்பம் வருகிறது. இதனை அவர்களே உண்டாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

எந்த மனிதனும் இன்பத்தை அனுபவிக்கவே விரும்புவான். துன்பத்தை விரும்ப மாட்டான். அப்படியானால் துன்பத்தை அவனே உண்டாக்கிக் கொண்டான் என்று சொல்ல முடியாது. துன்பத்தை அவன் உண்டாக்கிக் கொள்ள மாட்டான் என்றால் இன்பத்தையும் அவன் உண்டாக்கி கொள்ள மாட்டான் என்றுதான் முடிவாகும்.

மனிதன் தன் அறிவாலும் முயற்சியாலும் இன்பத்தை உண்டாக்கிக் கொள்ள வல்லவன் என்றால் தனக்கு வரும் துன்பத்தையும் இன்பமாக மாற்றிக் கொள்வதற்கு அதே அறிவையும் முயற்சியையும் அவன் பயன்படுத்திக்கொள்ள முடியும். போதுமான அறிவு இல்லை, போதுமான முயற்சி செய்யவில்லை, அதனால் முடியவில்லை என்றால் ஏன் இல்லை?

அறிவு, முயற்சி, தன்னம்பிக்கை, என்றெல்லாம் பேசுவோரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தங்களின் அறிவு, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு அப்பால் வேறு ஏதோ ஓர் ஆற்றால் தங்களை கட்டுப்படுத்துவதாக எண்ண வேண்டியுள்ளது.

இந்த ஆற்றலைத்தான் சமயங்கள் வினை அல்லது கர்மம் என்று கூகின்றன. கர்மம், வினை என்பதெல்லாம் பொய் என்று சொல்ல முடியவில்லை. இறந்த காலத்தில் செய்த முயற்சிக்கு நிகழ்காலத்தில் பயன் அனுபவிக்கிறோம் என்பதைக் கடவுள் மறுப்பாளரும் கூறுகின்றனர். செய்த முயற்சியை வினை என்றும் பெற்ற பயனை வினையின் பயன் என்றும் கடவுள் ஏற்பாளர் கூறுகின்றனர்.

இதுதான் வினைக் கொள்கையின் சுருக்க விளக்கம்.  இறந்த காலம் என்பது இந்த பிறப்பு தொடங்கும் போது தொடங்கியது என்று கூற முடியாது. அப்படிக்கூறினால் பிறக்கும்போதே ஏழையாய், பணக்காரனாய், ஊனமாய் பிறப்பது எதன் பயனால் வந்தது என்பதைக் கடவுள் மறுப்பாளர் விளக்க முடியாது. அது கடவுளின் விருப்பம் என சமயவாதிகள் கூறுவதும் சரியல்ல.

கடவுள் தன் விருப்பம் போல சிலரை ஏழைகளாகவும் சிலரைப் பணக்காரர்களாகவும் சிலரை நோயாளிகளாகவும் ஊனமாகவும் படைப்பார் என்றால் அவர் நீதிமானாகவும் அறவோனாயும் இருக்க முடியாது.

இந்தத் குழப்பங்களை சரி செய்வதே சித்தாந்த சைவம் சொல்லும் வினை கொள்கை.  இறந்த காலம் என்பது இந்தப் பிறவிக்கும் முன்னால் பிறந்த பிறவிகளையும் உள்ளடக்கியதே ஆகும் . நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பயன் வருகிறது என்பதால் இந்தப் பிறவியில் செய்த செயலுக்கு மட்டுமல்ல இதற்கு முன் பிறவிகளில் செய்த செயல்களுக்கும் பயன் வரும் என்பதை பகுத்தறிவால் ஒப்புக் கொள்ளவே வேண்டும்.

ஒருபிறப்பில் உயிர் உடம்பை விட்டு நீங்கும்போது அப்பிறப்பில் செய்த வினைகள் உயிரையும் உடலையும் விட்டு நீங்கிவிடும். ஒரு பிறப்பில் செயத வினகளுக்கு உரிய பயனை அப்பிறப்பிலேயே உயிர்கள் அனுபவிப்பதில்லை.

இப்பிறப்பில் கொடுமைகள் பல செய்த ஒருவன் நோய் நொடியின்றி ஆனந்தமாக வாழ்ந்து இறப்பதைக் காணுகின்றோம். எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்தவன் படாத பாடு பட்டு இறப்பதையும் காண்கிறோம். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்?  இறந்த காலம் பிறவிகளைக் கடந்து போகிறது என்றாலும் ஏதேனும் ஒரு பிறவியில் செய்த செயல் அல்லது வினயின் பயனை பின்னர் வரும் ஏதேனும் ஒரு பிறவியில் அனுபவித்தே ஆக வேண்டும்.

பல பிறவிகளில் செய்த வினைகளின் தொகுப்பைச் சஞ்சிதம் என்றும் இப்பிறவிக்கு அனுபவிக்க வேண்டிய வினையை பிரார்த்தம் எல்லது ஊழ்வினை என்றும் ஊழ்வினையை அனுபவிக்கும்போது உயிர்கள் செயல்படுவதால் வரும் புதிய வினை ஆகாமியம் அல்லது ஏறுவினை என்றும் சொல்லப்படும்.

இனி, மற்றோர் உண்மையையும் புரிந்து கொள்ளவேன்டும். பொருள்களில் அறிவுப்பொருள்கள் அறிவற்ற பொருள்கள் என இரு வகை உண்டு.வினை அறிவற்ற பொருள். அதாவது சடப் பொருள். சடப்பொருளாகிய வினைதானே  சென்று அதனை செய்த உயிரைப் பொருந்தாது. ஊழ் வினை உயிரின் சென்று பொருந்தும் வரை உயிருக்கு ச் செயல் ஏதும் இருக்காது என்பதால் உயிர் தானே சென்று தான் செய்த வினையில் பொருந்தாது. வினை சடம். அது தானே செயல் படாது. ஊழ்வினை இல்லாமல் உயிர் செயல்படாது என்றால் உயிருக்கு ஊழ்வினையக் கொண்டு சேர்ப்பது யார்?  இறைவனே உயிர்களுக்கு வினையைக் கொண்டு சேர்க்கிறான்.

அவனுக்கென்ன வந்தது இதைச் செய்ய?

 உயிர்கள் செயல்பட வேண்டும். செயல்பட்டால் தான் பொய்ப்பொருள்களை மெய்ப்பொறுள் என்று கருதி வாழும் உயிர்கள் பொய்ப்பொருள்களை பொய்ப்பொருள் என்று உணர்ந்து அவற்றை விட்டு நீங்கி மெய்ப்பொருளை அறிந்து அதில் சாரும். உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் உலகியல் சிற்றின்பங்களும் பொய்ப்பொருள்களின் சார்பினால் வருவன. அவற்றை விட்டு நீங்கினால் மட்டுமே மெய்ப்பொருளின் சார்பு உயிருக்குக் கிட்டும். இந்தப் பக்குவத்தை உயிர்கள் அடையும் பொருட்டு இறைவன் உலகை படத்து உயிர்களுக்கு உடம்புகளைப் படைத்து உலகில் அனுபவிக்கத் தக்க போகங்களைப் படைத்து உயிர்களுக்கு வினைகளையும் கூட்டிச் செயல் படுத்துகிறான்.  உயிர்களின் பொருட்டு இறைவன் என்னென்ன செய்தான்,  செய்கிறான் என்பதையெல்லாம் தொகுத்துப் பாருங்கள். இறைவன் நடத்தும் பள்ளியில், உயிர்கள் பாடம் படிக்கின்ற மாணவர்களாய் இருப்பதை உணரலாம். உயிரின் செயல்கள் யாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லாம் இறைவனின் செயல்களோடு தொடர்புடையவையாய் இருப்பதால்தான் எல்லாம் இறைவன் செயல் என்று அவனை உணர்ந்த ஞானியர் கூறினர்.


 நன்றி : மக்கள் ஓசை