Showing posts with label பாவ்ஸ் டபுள்ஸ். Show all posts
Showing posts with label பாவ்ஸ் டபுள்ஸ். Show all posts

Friday, 7 December 2012

சினேகன் ஸ்பெஷல். . .

குறு குறுவென குழந்தைகள் கொஞ்சி விளையாடுவது பார்க்க மனதுக்கு இதமான ஒரு காட்சி.

எதிர்வீட்டு ஒன்றரை வயது ஹீரோ "தாத்தா ....................." என அங்கிருந்தபடியே அதட்டலுடன் கூப்பிடுவது சுற்றியிருப்போரின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்தாலும், அடுத்த கணம் வீட்டினில் எங்கிருந்தாலும் உடனே வெளியே ஓடி வந்து. " உள்ளேன் ஐயா.." என அந்த பிஞ்சு குரலுக்கு 'எட்டென்டன்ஸ்'  போடுவது இப்போதெல்லாம்  எனக்கு ஒரு பெரிய கடமையாகிவிட்டது.

" குழல் இனிது யாழ் இனிது என்பர்
தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்"
என்றார் வள்ளுவர்.  ஆஹா..எவ்வளவு உண்மை. இந்த இளந்தளிர் பேசும் தமிழ், இலக்கியத்தின் முக்கிய ஒரு அங்கம் என்பேன்.

தீபாவளிப் பலகாரங்களை ருசிக்கும்போது...

பெற்றோருக்கு தங்களின் மழலைகளே ஒரு மகிழ்ச்சியான பொழுது போக்கு... அதிலும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கலையை கற்றவர் 'சினேகன்'. மேலுள்ள படத்தைப் பார்த்தாலே அது உண்மையெனத் தெரிந்துவிடும்.

'ஆ....................", ம்மா...............", "ப்பா............." ஆட்டீ..............." என்று நீண்ட இலக்கணத்தில் பேசும் இவர் "தாத்தா.............." என்பதை   சற்று அழுத்தமுடனேயே  அழைக்கிறார் , எதிர் வீட்டில், சற்று தொலைவில்  நான் இருப்பதனால்.   

Saturday, 1 December 2012

இருதய நோய் . . .

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நான் இருதய நோயால் பாதிக்கப் பட்டு, "பை பாஸ்" அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அன்றிலிருந்து பலவகையான அனுபவங்கள் எனக்கு. என்னைத் தெரிந்த பலரும் என்னுடைய பதிவுகளைப் படித்துவிட்டு கேட்கும் கேள்வி, " நான் ஏன் இன்னும் இருதய நோய் பற்றி எழுதவில்லை" என்பது. "உங்களின் அனுபவங்களை மற்றவரின் நலனுக்காக சொல்லலாமே... என்கின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நான் இந்நோய் பற்றி பலருக்கும் சொல்லியபடி தான் இருக்கிறேன். ஏனோ இன்றுதான் எழுதத் தோன்றியது. 

ஆயினும் இருதய நோயின் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதனால், அறிகுறிகள் தோன்றிய உடனேயே ஒரு மருத்துவரைச் சந்தித்து இந்நோய் பற்றி எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும்.


நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது :
- சரியான உணவுப் பழக்கம்
- சீரான உடற்பயிற்சி
- சீரான இரத்த அழுத்தம்
- அளவுக்கதிகம் போகாத கொழுப்புச் சத்து
- சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்வது
- இடுப்பளவு : ஆண்களுக்கு 35 அங்குலமும், பெண்களுக்கு 31 அங்குலமும் இருக்கவேண்டும்

நாம் தவிர்க்க வேண்டியது :
- புகை பிடித்தல்
- மது அருந்துதல்
- அதிக அளவில் இறைச்சியை உட்கொள்ளல்
- எண்ணெய் பலகாரங்கள்
- மன அழுத்தம்
- சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வது

கவனிக்க வேண்டிய அறிகுறிகள் :
- மூச்சுத் திணறல்
- தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி
- நடக்கும்போதும், ஓடும் போதும், உயரமானப் பகுதிகளில் ஏறும்போதும்
தோன்றும்   மார்பு வலி
- தொடர்ந்து சில நிமிடங்களுக்கு மார்பில் படபடப்பு.
- கேஸ்ட்ரிக் எனப்படும் வாய்வுத்தொல்லை போல சில நேரங்களில் தோன்றும்.

இந்தியர்களுக்கு மற்ற இனத்தவரைக் காட்டிலும் பத்து சத விகிதம் அதிகமாகவே இந்த இருத நோய் தாக்குகிறது என்பதை கவனத்தில் நிறுத்துவது நல்லது. 


அறிகுறிகளை முறையான மருத்துவ சிகிச்சையில்   கண்டறிந்து  தீர்க்கப்படாவிடில், அவை கீழுள்ள நிலைகளுக்கு இட்டுச்செல்லும்:
 - இருதயத் தசை அதீத வளர்ச்சி ( LVH )
 - இருதயக் குழாயில் கால்சியம் சேர்தல் ( CORONARY CALCIFICATION  )
 - கழுத்து இரத்தக்குழாயில் அடைப்பு ( CAROTID STENOSIS  )
 - இரத்தக் குழாயில் வீக்கம் மற்றும் செல் செயல் இழந்து போவது.

மேல் சொல்லப்பட்ட நிலை நீடிக்கும் போது அதன் தொடர் விளைவுகள் இப்படி இருக்கும் :
- பக்கவாதம்
- கால் இரத்தக்குழாய் அடைப்பு
- நெஞ்சுவலி ( ANGINA )  -> மாரடைப்பு ( MI )
- திடீர் மரணம் (  SUDDEN DEATH )
- இருதய தசை வளர்ச்சி நிலை ( HEART FAILURE  )


வருமுன் காக்கும் திட்டம் எவ்வளவு நல்லதோ அதே போல ஆபத்து அவசரத்துக்கென ஒரு திட்டம் இருப்பதும் அவசியம் :
-   வீட்டில் உள்ளோர் மாரடைப்புக்கான அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
-   முதல் உதவி செய்ய பழகியிருக்க வேண்டும்
-   யாரை அவசரத்துக்கு அழைப்பது, அவர்களின் தொலைபேசி, கைபேசி எண்கள் யாவை என தெரிந்து வைத்திருக்க வேண்டும்
-   பக்கத்தில் இருக்கும் மருத்துவமனை எண்கள் கைவசம் இருத்தல் நலம்
-   நோயாளியின் விவரங்கள், மருந்துகள், அலர்ஜிகள் கொண்ட ஃபைல் அவசரத்தின் போது நோயாளியைக் கவனிக்கும் மருத்துவரின் உடனடி சிகிச்சை முறைகளுக்கு உதவும்
-   மெடிக்கல் இன்ஸுரன்ஸ் விவரங்கள் இருந்தால் நல்லது அல்லது இது போன்ற அவசரத்துக்கென வேண்டிய சேமிப்பு திடீர் நிதிச் சுமையை குறைக்கும்
-   பக்கத்து வீட்டினருடன் நட்பாக இருப்பது இதுபோன்ற சவாலான நேரங்களில் பேருதவியாக இருக்கும்

Wednesday, 7 November 2012

தீபாவளி நல்வாழ்த்துகள். . .


தீபாவளி வந்துவிட்டது... இன்னும் சில தினங்களில் நாம் அனைவரும், ஒரு வருடம் காத்திருந்த அந்த பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட இருக்கிறோம். ஆடம்பரமாக இல்லாமல், செலவுகள் அதிகம் செய்யாமல், நம் தகுதிக்கேற்றாற்போல் சிக்கனமாக, அடக்கமாக ஆனால் அதே நேரம் குதூகலமாக கொண்டாடிட  இவ்வேளையில் முடிவெடுப்பது மிகவும் சிறந்தது.

ஒரு நாள் வரும் பெருநாளுக்கு கடன் வாங்கி வருடம் முழுவதும் வாங்கிய கடனை அடைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. 'உயர்ந்த உள்ளம்' கமல ஹாசனைப்' போல தடபுடலான விருந்துகளில் வீண் விரயம் செய்வதை தவிர்ப்போம்.  உலகில் சத்து உணவு கிடைக்காத மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தை என்பது அதிர்ச்சியான உண்மை. சில நாட்களுக்கு முன்னர் தான் இதைப் படித்த ஞாபகம். எனவே, விருந்துபசரிப்புகளில் வீணடிக்கப்படும் உணவை பற்றிய விழிப்புணர்வை நாம் நினைவில் கொள்வோம். மதுபானங்கள் உடல் நலத்துக்கு தீங்கு செய்வன. அவையும் வேண்டாம்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், இதய நோயினால் துண்பப்படுகிறவர்களும் இந்த தீபாவளி வேலையில் சாப்பிடும் உணவுப்பண்டங்களில் அதிக கவனம் செழுத்த வேண்டும்.
  -  சர்க்கரை வேண்டாம்
  -  எண்ணெயில் பொரிக்கப்படும் பதார்த்தங்களையும் பட்சணங்களையும்       உட்கொள்வது அளவோடு இருக்கட்டும்.
  -  இறைச்சி, முட்டை மற்றும் துரித உணவு ( ஃபாஸ்ட் புட் ) போன்றவற்றை தவிர்ப்போம்.

பெரியோர் சொன்னபடி, தீபாவளி நாளில் இயன்றவரை அசைவத்தை தவிர்த்துவிடுங்கள். பின்பொரு நாளில் வாய்க்கு ருசிப்பவற்றை சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.

 இந்த தீபாவளியின் போது நமது உணவு கட்டுப்பாடுகளை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஒரு பொழுதும்  வேண்டாம்.  ஒரு நாள் ருசிக்கு வாழ் நாள் ஆரோக்கியத்தை பணையம் வைப்பது அறிவுடைமை ஆகாது என்பது நமக்குத் தெரிந்தது தான் .

அண்டை அயலாருடனும், உற்றார் உறவினர்களுடனும் மற்றும் நண்பர்களுடனும் இனியவைகளைப் பேசி இன்பமாய் கொண்டாடி மகிழும் இந்தத் தீபத் திருநாளில், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது எனும் விழிப்பு நிலையில் எண்ணிப்பார்த்து ஏற்புடையதைச் செய்வோம்....

' விரலுக்கேற்ற  வீக்கம் ' என்பதே  காலத்துக்கு ஏற்ற உண்மை நிலை.  அதன்படி மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுவோம்....

'ஹெப்பி டீபாவளி.....'

Wednesday, 11 July 2012

ஓவியங்களும் ஓவியர்களும்...

கோயில்களில் உள்ள சிற்பங்களின் மேல் வர்ணம் தீட்டும் வேலை செய்பவர்கள் இப்போது தங்களை ஓவியர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள். அது ஒன்றும் அப்படி பெரிய தவறாக இல்லாது போனாலும், "ஓவியர்கள்" எனும் பட்டியலின் கீழ் அவர்கள் வரலாமா என்பதில் ஒரு சின்ன நெருடல்.

வலைத்தளங்களில், மாத, வார, நாளிதழ்களில் வெளிவரும் பல தரமான ஓவியங்களை பார்த்துப் பழக்கப்பட்டவன் நான். போட்டிக்கு அனுப்பப்படாவிட்டாலும், அவற்றுள் வெளிவரும் பல சித்திரங்கள் வெற்றிப் படைப்புகளாகவே எனக்குப் படும். அதேபோன்று, கோயிற் சிலைகளும் சிற்பங்களும் போட்டிகளுக்கு அப்பாற்பட்டவை.

நிஜத்தில், நல்ல பல ஓவியர்களின் படைப்புகள் வெளி உலகுக்கு தெரியாமலேயே இன்னும் இருக்கின்றன. 'பப்ளிசிட்டி' செய்து தன் திறமையை பறைசாற்ற பொருளாதார வசதி இல்லாமலிருக்கலாம். அல்லது, பிறர் கட்டுப்பாட்டில் இருப்பதனால், அவர்களின் படைப்புக்களை விளம்பரப் படுத்த முடியாமல் போகலாம். ஆனால், சில நேரங்களில் நம் கண்ணில் படும் அவர்களின் சித்திரங்கள் குடத்திலிட்ட விளக்கினைப் போல் பலருக்கும் தெரியாமல் போவது கண்டு வருந்தச் செய்கிறது.

பள்ளிக்கூட நாட்களில் நாம் படங்களை வரைந்திருந்தாலும், நம்மில் பலர் இப்போதும் காகிதம் கிடைக்கும் போதெல்லாம்  விளையாட்டாக வரைந்து கொண்டிருப்போம். ஆனால், சீரியஸான முயற்சியில் ஒரு நாள் கூட நாம் எதையாவது வரைந்து பத்திரப் படுத்தி வைதிருக்க மட்டோம். ஓவியம் என வரும் போது பொதுவில் நாம் அணைவரும் நல்ல ரசிகர்களாகவே இன்னும் இருக்கிறோம்.

தற்போது இந்த சித்திரக் கலையில் மாறுதல்கள் வந்துவிட்டன. பல்கலைகழங்களில் இதைப் படிப்போர் இதனூடே 'எனிமேஷன்' எனும் தொடர் கல்வியையும் கற்று கை நிறைய பணம் பார்க்கிறார்கள்.

ஓவியங்களை ரசிக்க நுண்ணறிவு தேவை இல்லை என்பது என் வாதம். அது நீதிபதிகளுக்கு இருக்கவேண்டிய ஒன்று. கலைக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சித்திரங்களைவிட அருமையான பல நாம் சாதாரணமாக நேரத்தைப் போக்க படிக்கும் இதழ்களில் வந்து கொண்டிருப்பது சற்று கவனித்துப் பார்த்தால் புரியும்.

அப்படி இருக்க, அசல் ஓவியங்களை படைப்பவர்களை விட அதனை மாற்றியமைப்போரும், அதன் மேல் வர்ணம் பூசுவோரும் சம அந்தஸ்த்து கேட்கும் காலமாக இப்போதிருப்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.






வெப் உலகத்தில் கிடைத்த 'நீர் வர்ணத்தில்' வரையப்பட்ட ஓவியங்கள். என்னைக் கவர்ந்த இவை உங்களையும் கவரும் என்று இங்கே பதிவில் தந்திருக்கிறேன். தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு சிவபாலன் அவர்களின் சித்திரங்கள்.

Sunday, 24 June 2012

செல்லப் பிராணிகள் பலவிதம்...


வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் பல உண்டு. நாய், பூணை, ஆடு, மாடு, மான், கோழி, மீன் என பலவும் நாம் விரும்பி வளர்க்கிறோம். அல்லது அவற்றை மற்றவர்கள் வளர்ப்பதைப் பார்த்திருக்கிறோம்.

எங்கள் பக்கத்து வீட்டு பெண் நண்பர் ஒருவர் இந்த படத்தில் இருக்கும் 'பச்சோந்தி' வகையில் ஒன்றை வளர்க்கிறார். பச்சை இலைகளினூடே இதை கண்டுபிடிப்பது அரிதான ஒன்று.

சில வருடங்களுக்கு முன்னர் இதை ஒரு கடையில் இருந்து வாங்கும் போது இதன் விலை அறு நூற்று ஐம்பது மலேசிய வெள்ளியாம். ஒரு நாய்க்குட்டிபோல வீட்டில் உள்ளோரோடு விளையாடும் பயிற்சி பெற்றதாம் இது.

அமெரிக்கர்கள் இதை அதிக அளவில் வீட்டில் வளர்க்கிறார்கள் என்று படித்திருக்கிறேன். சில படங்களிலும் பார்த்ததுண்டு. ஆனால் பார்க்க அருவருப்பான, பயங்கர முதலை, உடும்பு, ஓணான் போன்ற மிருகங்கள் வகை பிராணியான இதை, பக்கத்து வீட்டினர் செல்லமாக எடுத்து கொஞ்சி விளையாடுவது சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது  எங்களுக்கு...

Thursday, 21 June 2012

mgr...

அவசர உலகில் பெண்கள்...

இன்றைய அவசர சூழ் நிலையில் நம் சமூகப் பெண்மணிகள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கின்றன.

பிரச்சினைகளுக்கு சரியான தீர்வெடுக்கும் திறன் உள்ளதா என்பது பெரிய கேள்வியாக பலருக்கும் படுகின்ற அதே நேரத்தில், தகுந்த முடிவெடுக்க முடியாமல் திணறுவோர் பல பாதிப்புகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.

அவசரத்தில் முடிவெடுத்து கணவனை பிரியும் இளம் மனைவிகள் பின்பு தங்களின் குழந்தைகளோடு மனம் வெந்து வாழ்க்கையில் கஷ்டப் கிறார்கள். பாதிப்புகள் பல வர நாமே காரணமாகிவிடக்கூடாது.

ஆச்சரியம் மேலிடும் உண்மை எது தெரியுமா?

பார்க்கும் பத்து இளம் மனைவிகளுள் இருவர் சாதாரணப் பிரச்சினைகளினால் கணவனைப் பிரிந்து பிள்ளைகளோடு சிறமப் படுபவர்களே.

பெண்கள் பேசவேண்டிய நேரத்தில் பேசுவதும் பேசத் தேவையில்லா நேரத்தில் அமைதியை கடைபிடிப்பதுமே அவர்கள் வாழ்வினை உயர்த்தும். உணர்ச்சிவயப்பட்டு கொட்டித் தீர்த்திடும் வார்த்தைகள் அவர்களுக்கே பல பாதிப்புகளைக் கொண்டுவந்திடும் என்பதை அவர்கள் மறந்துவிடுவதால் ஒருவித அசாத்திய துணிச்சலில் எடுத்தெறிந்து பேசிவிட்டு பின்பு அல்லல் படுகிறார்கள்.

அன்மையில் நடந்த ஒரு ஆய்வில் கிடைத்த தகவல்கள் இவை:-
இப்படி தனித்து விடப்படும் பலர் சில காலம் தங்களின் தனிமையை ரசிக்கிறார்கள்.
புதிய ஆண் துணைகளுடன் கைபேசியில் காலத்தை செலவிடுகிறார்கள். அனேகமாக எல்லா பெண்களுக்கும் வேலையில் இருப்பதால், பொருளாதார சிக்கல் அவர்களுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
ஆயினும், தங்களுக்கு வயதாகும் நிலையை உணரும்போது, தங்களுக்கு கைபேசி, சாட், டெலிபோன் நண்பர்கள் உற்றவர்களாகவும், உறவினர்களாகவும் ஆகிட முடியாதென படும் போது, தங்களின் கணவனுடனான பிரச்சினையை வெறு விதமாக கையாண்டிருக்கலாமோ என எண்ணுகிறார்கள்.

அதனால்தான் சொல்கிறோம், ஆத்திரத்தில் முடிவெடுத்து அமைதியாக வருத்தப் படுவது பெண்களுக்கு இழுக்கு என. இதை பெண்கள் உணரும் காலம் என்றோ...?