Wednesday, 11 July 2012

ஓவியங்களும் ஓவியர்களும்...

கோயில்களில் உள்ள சிற்பங்களின் மேல் வர்ணம் தீட்டும் வேலை செய்பவர்கள் இப்போது தங்களை ஓவியர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள். அது ஒன்றும் அப்படி பெரிய தவறாக இல்லாது போனாலும், "ஓவியர்கள்" எனும் பட்டியலின் கீழ் அவர்கள் வரலாமா என்பதில் ஒரு சின்ன நெருடல்.

வலைத்தளங்களில், மாத, வார, நாளிதழ்களில் வெளிவரும் பல தரமான ஓவியங்களை பார்த்துப் பழக்கப்பட்டவன் நான். போட்டிக்கு அனுப்பப்படாவிட்டாலும், அவற்றுள் வெளிவரும் பல சித்திரங்கள் வெற்றிப் படைப்புகளாகவே எனக்குப் படும். அதேபோன்று, கோயிற் சிலைகளும் சிற்பங்களும் போட்டிகளுக்கு அப்பாற்பட்டவை.

நிஜத்தில், நல்ல பல ஓவியர்களின் படைப்புகள் வெளி உலகுக்கு தெரியாமலேயே இன்னும் இருக்கின்றன. 'பப்ளிசிட்டி' செய்து தன் திறமையை பறைசாற்ற பொருளாதார வசதி இல்லாமலிருக்கலாம். அல்லது, பிறர் கட்டுப்பாட்டில் இருப்பதனால், அவர்களின் படைப்புக்களை விளம்பரப் படுத்த முடியாமல் போகலாம். ஆனால், சில நேரங்களில் நம் கண்ணில் படும் அவர்களின் சித்திரங்கள் குடத்திலிட்ட விளக்கினைப் போல் பலருக்கும் தெரியாமல் போவது கண்டு வருந்தச் செய்கிறது.

பள்ளிக்கூட நாட்களில் நாம் படங்களை வரைந்திருந்தாலும், நம்மில் பலர் இப்போதும் காகிதம் கிடைக்கும் போதெல்லாம்  விளையாட்டாக வரைந்து கொண்டிருப்போம். ஆனால், சீரியஸான முயற்சியில் ஒரு நாள் கூட நாம் எதையாவது வரைந்து பத்திரப் படுத்தி வைதிருக்க மட்டோம். ஓவியம் என வரும் போது பொதுவில் நாம் அணைவரும் நல்ல ரசிகர்களாகவே இன்னும் இருக்கிறோம்.

தற்போது இந்த சித்திரக் கலையில் மாறுதல்கள் வந்துவிட்டன. பல்கலைகழங்களில் இதைப் படிப்போர் இதனூடே 'எனிமேஷன்' எனும் தொடர் கல்வியையும் கற்று கை நிறைய பணம் பார்க்கிறார்கள்.

ஓவியங்களை ரசிக்க நுண்ணறிவு தேவை இல்லை என்பது என் வாதம். அது நீதிபதிகளுக்கு இருக்கவேண்டிய ஒன்று. கலைக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சித்திரங்களைவிட அருமையான பல நாம் சாதாரணமாக நேரத்தைப் போக்க படிக்கும் இதழ்களில் வந்து கொண்டிருப்பது சற்று கவனித்துப் பார்த்தால் புரியும்.

அப்படி இருக்க, அசல் ஓவியங்களை படைப்பவர்களை விட அதனை மாற்றியமைப்போரும், அதன் மேல் வர்ணம் பூசுவோரும் சம அந்தஸ்த்து கேட்கும் காலமாக இப்போதிருப்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.






வெப் உலகத்தில் கிடைத்த 'நீர் வர்ணத்தில்' வரையப்பட்ட ஓவியங்கள். என்னைக் கவர்ந்த இவை உங்களையும் கவரும் என்று இங்கே பதிவில் தந்திருக்கிறேன். தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு சிவபாலன் அவர்களின் சித்திரங்கள்.

No comments:

Post a Comment