Sunday, 3 November 2013

சென்னையில் செஸ்...

நார்வே  நாட்டின் மெக்னஸ் கார்ல்சன் 2013க்கான  உலக செஸ் சாம்பியன்  தேர்வுச் சுற்றுப் போட்டிகளில் வென்றதன் வழி நடப்புச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தை சந்தித்து போட்டியிடும் தகுதியினைப் பெற்றார்.

22 வயதே ஆன அவர் ஃபீடே சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்று 2862 புள்ளிகளுடன் அனைத்துலக தர வரிசையில் முன்னனி வகிக்கிறார். கடந்த 2009ம் ஆண்டுக்குபின்னர் ஆனந்தையும், காஸ்பராவ்வையும்கூட தர வரிசைப்பட்டியலில் முந்தி சென்றவர் கார்ல்சன் ஆவார்.

2012ம் ஆண்டு மாஸ்கோவில் இடம்பெற்ற ஆட்டத்தின் வழி போரிஸ் கெல்ஃபனை வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்த் தனது உலக சாம்பியன் பட்டத்தை தற்காத்துக்கொண்டார்.

இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கும் இவ்வாண்டின் சாம்பியன்ஷிப் போட்டிகளை  ஃபீடே அனைத்துலக செஸ் சம்மேளனத்தின் ஆதரவுடன் தமிழ் நாடு மாநில அரசு ஏற்று நடத்துகிறது.  இதனால் முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்கள் தனது அனைத்துலக செல்வாக்கினை உயர்த்திக்கொள்கிறார் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.

இந்தப் போட்டிக்கு பல கோணங்களிலிருந்தும், பல திசைகளிலிருந்தும் ஆதரவு பெருகிவரும் அதே நேரம், பல நாடுகளும்  அடுத்தடுத்த போட்டிகளை தங்கள் நாடுகளில் எற்று நடத்த இப்போதே விண்ணப்பிக்க தொடங்கி விட்டன.

உண்மையில், இந்த ஆண்டு ஒரு சில சர்ச்சைகளுக்கிடையே தான் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

கார்ல்சன்,  நடு நிலையான  ஒரு இடத்தை தேர்வு செய்யும் படி அனைத்துலக சம்மேளனத்தைக் கேட்டுக்கொண்டாதாயும், அவர்கள் மறுத்துவிடும் அடிப்படையில்  தனது அதிருப்தியை அதிகாரபூர்வமாக தெரிவித்துக் கொண்டே இம்முறை சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார் என்றொரு தகவலும் இணையத்தளங்களில் காணப்படுகின்றது.

அதே போல, அவருக்குச் சாதகமாக சில முன்னனி செஸ் விளையாட்டாளர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சுமார் 9 மில்லியன் மக்களைக்கொண்டிருக்கும் சென்னை ஆனந்தின் பிறப்பிடமாக இருந்தாலும், அவர் அனைத்துலக ரீதியில் புகழின் உச்சிக்குச் சென்றது மேல் நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் கலந்துகொண்டே என்பதை, இம்முறை போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் இடத்தினைப் பற்றி அதிகம் சர்ச்சையைக் கிளப்புவோர் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே.

ஐந்து முறை சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை, அந்த ஐந்து முறைகளும் சென்னையைத் தவிர்த்த வேற்றூர்களில்தான் வெற்றி வாகை சூடினார் என்பதனை தமிழில் இங்கு பதிவு செய்துகொள்ள விழைகிறேன்.

இவர் மட்டுமல்ல, இவருக்கு முன் இருந்த பல சாம்பியன்கள் தங்களது சொந்த  நாடுகளிலில்லாமல்  வேறு நாடுகளிலேயே வென்று புகழ் பெற்றிருக்கின்றனர்.  ஏனோ, இம்முறை மட்டும் நமது சிங்காரச் சென்னையில் இடம்பெறும் போட்டிகளுக்கு  அப்படி ஒரு சலசலப்பு.

2004ல் தனக்கு 13 முடிந்து 148 நாட்கள் ஆன நிலையில் கார்ல்சன் தனது அனைத்துலக கிராண்ட் மாஸ்டர் தகுதியனைப் பெற்றார். அவரின் தொடர் வெற்றிகளில் கவனம் செலுத்திய பல அனைத்துலகத் தர விளையாட்டளர்கள், அவரின் புயல் வேக வருகையை பார்த்து வியந்தனர்.
18 வது வயதில் சர்வதேச தர வரிசையில் முதல் இடத்தில் இடம் பெற்று சாதனை படைத்தார்.

இம்முறை விஸ்வநாதன் ஆனந்த்தை வெற்றி கொண்டால், கார்ல்சன் தனது 23வது பிறந்த நாளை சாம்பியனாக கொண்டாடி மற்றொரு சாதனை புரியும் சந்தர்ப்பம் கிட்டும். இதன் மூலம் ஆனந்தின் 6 ஆண்டு ஆதிக்கம் நிறுத்தப்படலாம். இவை இரண்டும் செஸ் ஆதரவாளர்களின் ஆருடங்களே. போட்டிகள் முடிவடந்த பின்னர்தான் 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது' என நம்மாலும் சொல்ல முடியும். அதற்கிடையே எத்திசைகளில் இருந்து, எத்தகைய கணிப்புக்கள்  வந்தாலும் அவை அனைத்தும் வெறும் ஆருடங்களாகத்தான் இருக்க முடியும்.

At the 2013 Candidates Tournament

போட்டிகளின் தொடக்க விழா வரும் 7ம் நாள் சென்னையில் பிரமாத மான அளவில் நடைபெற ஏற்பாடாகிவருகிறது. முதல் விளையாட்ட்டு 9ம் தேதி  நம் நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும்.

No comments:

Post a Comment