Showing posts with label உலக செஸ் சாம்பியன் போட்டி. Show all posts
Showing posts with label உலக செஸ் சாம்பியன் போட்டி. Show all posts

Thursday, 7 November 2013

தொடங்கியது 2013ம் ஆண்டின் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி...

தொடக்க விழாவின் போது உரையாற்றும் தமிழ் நாட்டின்  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைக்க 2013ம் ஆண்டின் அனைத்துலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சென்னையில் விழாக் கோலம் பூண்டது.

6ம் நூற்றாண்டு போர்க்கால விளையாட்டாக இந்தியாவின் பூர்வீகமான சதுரங்கம், இன்று உலகலாவிய நிலையில் உயர்ந்ததொரு இலக்கினை எட்டியிருப்பது கண்டு தாம் பெருமைப் படுவதாக முதலமைச்சர் தனது உரையில் சரளமான ஆங்கிலத்தில் குறிப்பிட்டார்.

விஸ்வநாத் ஆனந்த் விளையாட கருப்பு காயையும், கார்ல்சென் விளையாட வெள்ளை காயையும் முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்து கொடுத்தார்.

தமிழ் நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு ஃபிடே சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

செஸ் விளையாட்டுக்கு செல்வி ஜெயலலிதாவின்  மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு  ஃபீடே சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினர் தகுதியை   உலக செஸ் சம்மேளன தலைவர் கிர்ஷன் இலியும்சிநொவ்  வழங்கி சிறப்பித்தார்.


போட்டி நாட்களையும் ஓய்வு நாட்களையும் குறிப்பிடும் செஸ் காலண்டர்

முதல் போட்டி வரும் சனிக்கிழமை நமது மலேசிய நேரப்படி மாலை 5.30க்கு தொடங்கும்.

மொத்தம் 12 சுற்றுகள்.

முதலி 6.5 புள்ளிகளைப் பெருபவர் வெற்றியாளாராக அறிவிக்கப் படுவார்.

அப்படி ஆரம்ப நிலையிலேயே தேவையான 6.5 புள்ளிகளை வெற்றி பெற்றிடும் போது மீதம் உள்ள விளையாட்டுக்கள் நடைபெறாது.

12 சுற்றுக்கள் முடிந்தும் சமன் நிலை கண்டால், 28ம் தேதி அதிவிரைவு சுற்று நடைபெற்று வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்.

மேலே இருக்கும் காலண்டரில் ஓய்வு நாட்களும் இடம்பெற்றுள்ளன. ஆர்வளர்கள்  அதற்கேற்றாற்போல் இவ்வாண்டின் சாம்பியன்ஷிப் போட்டிகளை ரசித்து மகிழலாம்.

அடுத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இதோ...

 போட்டியாளர்கள் இருவரும் கைகுலுக்கிக் கொள்கின்றனர்.

  விஸ்வ நாதன் ஆனந்த் தனது பயிற்றுனர்களின் பெயர்களை அறிவிக்கும்போது, தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் கார்ல்சன்.

ஆனந்தின் உரையின் போது விஷமத்தனமாக புன்னகைக்கும் கார்ல்சன்.

Wednesday, 6 November 2013

நமது கணிப்பு: இம்முறையும் ஆனந்தே சாம்பியன்...

உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டி  நாளை  சென்னையில் திறப்பு விழா காண்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக இந்தப் போட்டி விளையட்டினை தொடங்கி வைக்கிறார்.

அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்து விட்ட நிலையில் உலகின் ஆரூடங்கள் பெருமளவுக்கு ஊடகங்களினூடே உலா வந்தவண்ணம் இருக்கின்றன.

பலவித கருத்துக்கணிப்புக்களும் அதற்கான காரணங்களும் செஸ் விளையாட்டினை உலகின் உச்சத்தில், மக்களின் பார்வையில் கொண்டுவந்துள்ளன. இது இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரும். வெற்றியாளர் இவர்தான் என தெரியும் வரை இந்த அரூடங்கள் மேலும் மேலும் வந்துகொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


கார்ல்சன், தனது மின்னல் வேக வளர்சியின் மூலம் உலகினை தன் கைப்பிடியில்   வைத்துள்ளார். இளம் வயதில் கஸ்பராவ் மற்றும் ஆனந்த் ஆடிய அட்ட வேகம் இவரிடம் இருப்பதை வைத்து, இம்முறை அவரே சாம்பியன் ஆவார் என பலரும் கருதுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் கார்ல்சன் ஜெயிப்பது நிச்சயமான ஒன்று என வெளிப்படையாக பேசுகின்றனர். அவரின் தொடர் தாக்குதலுக்கு ஆனந்த் பதிலளிக்க முடியாது ஆரம்பத்திலேயே படிந்துவிடுவார் என பல புகழ் பெற்ற விளையாட்டாளர்களும், பிரபலங்களும் ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் ஆனந்த் ஐந்து முறை சாம்பியனாகையால், தனது தற்காப்பு ஆட்டத்தினை அதற்கேற்றாற்போல்  தனது அனுபவ முத்திரையுடன் செயல்படுத்துவார் என அவர் மேல் நம்பிக்கை வைத்திருப்போர் கருத்துரைக்கின்றனர்.

உலக அரங்கில், அனேகமாக எல்லா மாநகரங்களிலும் இந்த செஸ் உலக போட்டிகள்தான் இன்றைய முக்கிய நிகழ்வாகவும்,  செய்தியாகவும்  இடம் பெறுகின்றது. 1972ம் ஆண்டுக்கப்புறமாக, செஸ் விளையாட்டாளர்களின், செஸ் அதிகாரிகளின், செஸ் பிரியர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இவ்வாண்டு நடைபெறும் உலக செஸ் போட்டிகள் தான்.  43 வயதான இந்திய வீரர் ஆனந்தை, நார்வேயின் 22 வயது இளம் ஆட்டக்காரர் கார்ல்சன் எதிர்த்து விளையாடுகிறார்.

 நியூ யோர்க்கில் உள்ள வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் கூட செஸ் பற்றிய பேச்சே முதன்மை வகிக்கிறது.

உளக தரவரிசை ஆட்டக்கார்கள், தங்களின் தேர்வாக இந்த இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் வெற்றிபெற எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு செஸ் காய்ச்சல் வந்து பல நாட்கள் ஆகின்றது போலும். திடீரென பல செஸ் வலைப்பதிவுகள் இணையத்தில் தோன்றிவிட்டன.

ஆனந்த் ஜெயித்தால், அது அனுபவம் ஜெயித்ததென்றும், கார்ல்சன் ஜெயித்தால் அது இளம் தலைமுறையினருக்கு கிடைத்த வெற்றி என்றும் ஊடகவியலாளர்கள் தங்களின் கருத்தாக பதிவிட காத்திருக்கிறார்கள்.

'இதில் உங்கள் முடிவு என்ன...?' என ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டுக்கொள்ளும் கேள்வி எல்லா இடங்களிலும் ஒலிக்கக் காண்கிறோம்.

இம்முறை வெல்லப்போவது யாராயிருந்தாலும் சிறந்தவரே வென்றார் என போட்டியின் முடிவில் சொல்வோமானால் அதுவே நமக்கு பெரும் திருப்தி.

ஆயினும், பலரும் வற்புறுத்துவதற்கிணங்க நமது கணிப்பினையும் இங்கே குறிப்பிட வேண்டியதிருக்கிறது.  ஆனந்த் 6.5 க்கு  5.5 எனும் ஆட்ட எண்ணிக்கையில் கார்ல்சனை வீழ்த்துவார் என நான் எதிர்பார்க்கிறேன். ஆனந்த் இன்னும் ஒரு தவணைக்கு சாம்பியனாக இருக்க அனைத்துத் தகுதிகளும் கொண்டவர் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதன் அடிப்படையிலும், முக்கிய போட்டிகளின் போது அவரது சிந்திக்கும் தன்மை அபாரமாக இருக்கும் என பழைய அனுபவத்தை மனதில் கொண்டே இதை நான் குறிப்பிடுகிறேன்.

எனவே, ஆறாம் முறையாக இம்முறையும் ஆனந்தே வெற்றியாளராக வாழ்த்துவோம், வாருங்கள்.

Sunday, 3 November 2013

சென்னையில் செஸ்...

நார்வே  நாட்டின் மெக்னஸ் கார்ல்சன் 2013க்கான  உலக செஸ் சாம்பியன்  தேர்வுச் சுற்றுப் போட்டிகளில் வென்றதன் வழி நடப்புச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தை சந்தித்து போட்டியிடும் தகுதியினைப் பெற்றார்.

22 வயதே ஆன அவர் ஃபீடே சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்று 2862 புள்ளிகளுடன் அனைத்துலக தர வரிசையில் முன்னனி வகிக்கிறார். கடந்த 2009ம் ஆண்டுக்குபின்னர் ஆனந்தையும், காஸ்பராவ்வையும்கூட தர வரிசைப்பட்டியலில் முந்தி சென்றவர் கார்ல்சன் ஆவார்.

2012ம் ஆண்டு மாஸ்கோவில் இடம்பெற்ற ஆட்டத்தின் வழி போரிஸ் கெல்ஃபனை வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்த் தனது உலக சாம்பியன் பட்டத்தை தற்காத்துக்கொண்டார்.

இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கும் இவ்வாண்டின் சாம்பியன்ஷிப் போட்டிகளை  ஃபீடே அனைத்துலக செஸ் சம்மேளனத்தின் ஆதரவுடன் தமிழ் நாடு மாநில அரசு ஏற்று நடத்துகிறது.  இதனால் முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்கள் தனது அனைத்துலக செல்வாக்கினை உயர்த்திக்கொள்கிறார் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.

இந்தப் போட்டிக்கு பல கோணங்களிலிருந்தும், பல திசைகளிலிருந்தும் ஆதரவு பெருகிவரும் அதே நேரம், பல நாடுகளும்  அடுத்தடுத்த போட்டிகளை தங்கள் நாடுகளில் எற்று நடத்த இப்போதே விண்ணப்பிக்க தொடங்கி விட்டன.

உண்மையில், இந்த ஆண்டு ஒரு சில சர்ச்சைகளுக்கிடையே தான் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

கார்ல்சன்,  நடு நிலையான  ஒரு இடத்தை தேர்வு செய்யும் படி அனைத்துலக சம்மேளனத்தைக் கேட்டுக்கொண்டாதாயும், அவர்கள் மறுத்துவிடும் அடிப்படையில்  தனது அதிருப்தியை அதிகாரபூர்வமாக தெரிவித்துக் கொண்டே இம்முறை சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார் என்றொரு தகவலும் இணையத்தளங்களில் காணப்படுகின்றது.

அதே போல, அவருக்குச் சாதகமாக சில முன்னனி செஸ் விளையாட்டாளர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சுமார் 9 மில்லியன் மக்களைக்கொண்டிருக்கும் சென்னை ஆனந்தின் பிறப்பிடமாக இருந்தாலும், அவர் அனைத்துலக ரீதியில் புகழின் உச்சிக்குச் சென்றது மேல் நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் கலந்துகொண்டே என்பதை, இம்முறை போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் இடத்தினைப் பற்றி அதிகம் சர்ச்சையைக் கிளப்புவோர் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே.

ஐந்து முறை சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை, அந்த ஐந்து முறைகளும் சென்னையைத் தவிர்த்த வேற்றூர்களில்தான் வெற்றி வாகை சூடினார் என்பதனை தமிழில் இங்கு பதிவு செய்துகொள்ள விழைகிறேன்.

இவர் மட்டுமல்ல, இவருக்கு முன் இருந்த பல சாம்பியன்கள் தங்களது சொந்த  நாடுகளிலில்லாமல்  வேறு நாடுகளிலேயே வென்று புகழ் பெற்றிருக்கின்றனர்.  ஏனோ, இம்முறை மட்டும் நமது சிங்காரச் சென்னையில் இடம்பெறும் போட்டிகளுக்கு  அப்படி ஒரு சலசலப்பு.

2004ல் தனக்கு 13 முடிந்து 148 நாட்கள் ஆன நிலையில் கார்ல்சன் தனது அனைத்துலக கிராண்ட் மாஸ்டர் தகுதியனைப் பெற்றார். அவரின் தொடர் வெற்றிகளில் கவனம் செலுத்திய பல அனைத்துலகத் தர விளையாட்டளர்கள், அவரின் புயல் வேக வருகையை பார்த்து வியந்தனர்.
18 வது வயதில் சர்வதேச தர வரிசையில் முதல் இடத்தில் இடம் பெற்று சாதனை படைத்தார்.

இம்முறை விஸ்வநாதன் ஆனந்த்தை வெற்றி கொண்டால், கார்ல்சன் தனது 23வது பிறந்த நாளை சாம்பியனாக கொண்டாடி மற்றொரு சாதனை புரியும் சந்தர்ப்பம் கிட்டும். இதன் மூலம் ஆனந்தின் 6 ஆண்டு ஆதிக்கம் நிறுத்தப்படலாம். இவை இரண்டும் செஸ் ஆதரவாளர்களின் ஆருடங்களே. போட்டிகள் முடிவடந்த பின்னர்தான் 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது' என நம்மாலும் சொல்ல முடியும். அதற்கிடையே எத்திசைகளில் இருந்து, எத்தகைய கணிப்புக்கள்  வந்தாலும் அவை அனைத்தும் வெறும் ஆருடங்களாகத்தான் இருக்க முடியும்.

At the 2013 Candidates Tournament

போட்டிகளின் தொடக்க விழா வரும் 7ம் நாள் சென்னையில் பிரமாத மான அளவில் நடைபெற ஏற்பாடாகிவருகிறது. முதல் விளையாட்ட்டு 9ம் தேதி  நம் நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும்.

Friday, 1 November 2013

சதுரங்கம், நமது பூர்வீகம்...

மறைந்து வரும் நமது பழங்கால பாரம்பரிய  விளையாட்டுக்களில் நொன்டி ஆடுவது, பல்லாங்குழி போன்றவை தற்போது  மற்றவர்களால் தூசி தட்டி புதுப்பிக்கப்படுகின்றன.  அவை தங்களது என அவர்கள் உரிமை கொண்டாடும் நாள் வர வெகு தூரமில்லை.  இதுப்போன்ற விளையாட்டுக்களில் தப்பித்தது கபடி மட்டுமே... மற்ற விளையாட்டுக்களைப்போன்ற பரிதாப  நிலைதான் சதுரங்கத்துக்கும் ஆகும், நாம் விழிப்படைந்து அதன் உரிமையினை தற்காத்துக்கொள்ளாவிடில்.

அதெப்படி...?

கால்பந்து, பூப்பந்து, திடல் தடப் போட்டிகள் போன்றே, சதுரங்கத்துக்கும் முக்கியத் துவம் கொடுப்போம்.  குறைந்தது நம் வீட்டிலாவது அதனை விளையாடுவதை வழக்கத்தில் கொள்வோம்.

 நாம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சிந்தனைச் சிற்பியாக்கும் காரணிகள் சதுரங்கத்தில் உண்டு.

அடுத்த தலைமுறையினருக்கு சதுரங்கம் நமது பூர்வீகம் என்பதனை விட்டுச்செல்வோம்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்...

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், 
எஞ்சி இருப்பது ஆறு நாட்கள் மட்டுமே...




ஆனத்த், இளம் வயதில்..


போரிஸ் பெக்கர் கால்செனின் காய்களை போர்டில் அடுக்க உதவுகிறார்...

Sunday, 27 October 2013

சுசன் பொல்கார்...

ஹங்கேரி நாட்டவரான சுசன் பொல்கார் ஆப்ரல் 19, 1969ல் பிறந்தவர்.


சுசன் பொல்கார்... 

செஸ் எழுத்தாளரும், பெண்கள் பிரிவில் செஸ் சாம்பியனும், சுசன் பொல்கார் இன்ஸ்டிடுடெ ஃபோர் செஸ் எக்ஸலென்ட் என்கிற பிரிவின் தலைமை நிர்வாகியாக  டெக்ஸஸ் யூனிவர்சிட்டியில் பணிபுரியும் இவர் தனது 15வது வயதில் 1984ல் இருந்து சுமார் 23 ஆண்டுகள் உலக தரத்தில் முதல் மூன்று நிலைகளில் இருந்து சாதனை படைத்தவர்.

1996 முதல் 1999 வரைக்குமான பெண்கள் பிரிவின் உலக சாம்பியனான சுசன் பொல்கார், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும் ஆவார். தனது 4வது வயதில் புடாபெஸ்ட் நகரில் நடந்த 11வயதுக்கும் குறைந்தவர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு வென்றவர் இவர் என்பது மற்றுமொரு ஆச்சரியமான தகவல்.

ஃபைட் சம்மேளனத்தின் பெண்கள் பிரிவிற்கான பொறுப்புக்களுடன் நீண்ட காலம் செஸ் பற்றிய விழிப்புணர்வை பெண் குழந்தைகளுக்கு அமெரிக்காவில் தனது அமைப்பொன்றின் வழி சேவையாற்றி வருகிறார்.

 போரிஸ் ஸ்பாஸ்கியுடன்...

  ஆனந்துடன்...

அனட்டொலி கர்பாவ்வுடன்...

ஆண்களுக்கு நிகராக அனைத்துலக அரங்கில் செஸ் ஏற்பாட்டாளராகவும், சம்மேளனத் தூதராகவும் பவனி வரும் சுசன் பொல்கார் தன்னால் இயன்றவரை,  செஸ் மக்களைச் சென்றடைய தொடர்ந்து அனைத்தும் செய்வதாக சொல்கிறார்.

ஆண்களின் ஆதிக்கத்தில் செஸ் அமைப்பில் இப்படி ஒரு பெண் இருப்பது படிக்க சுவாரஸ்யமான ஒன்றாக எனக்குப் பட்டது. செஸ் பிரியர்களுக்காக அதை இங்கே பதிவிடுகிறேன்.

 சுசன் பொல்கார், மேலும் சில படங்கள்...





இவரைப் போன்று,  சதுரங்கம் மற்றவர்களையும் சென்றடைய சேவையாற்றும் தமிழ்ப் பெண்கள்  பற்றிய தகவல் தெரிந்தால் தந்துதவலாமே...

மெக்னஸ் கார்ல்சன்...

 நவம்பர் மாத தொடக்கத்தில் இடம் பெறவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் ஆனந்தை எதிர்த்து ஆட இருக்கின்ற கார்ல்சன் இவரே....





வெள்ளை  டீ- சட்டையில்மெக்னஸ் கார்ல்சன்... 

செஸ் நாவல்...

சதுரங்கம் விளையாட்டுக்களில் மட்டுமல்ல, பல மொழிகளின் இலக்கியத்திலும், கதை கவிதைகளில் கையாளப்பட்டிருக்கின்றது. பலரும் அதை சுவை குன்றாது கையாண்டிருக்கின்றனர்.

வால்ட்டெர் புளிட்ஸெர் என்பவர் இரு நாவல்களை தந்திருக்கின்றார், சதுரங்கத்தை மையப்பொருளாக.... அவரின்  இரண்டு நாவல்களில் ஒன்று, செஸ் ஹார்மொனீஸ், மற்றது தட் டுவல் எட் த சாட்டோ மர்சனெக்.


இரண்டாவது நாவல் எலினோர் மார்சனெக் என்னும் மங்கை ஒருத்தியை இரு வாலிபர்கள் விரும்புகின்றனர், பிளெக்ஸ் என்னும் சீமானும், பெர்டினன்ட் வோன்ஸ்டைன் எனும் மற்றொருவனும். இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய சூழ் நிலையில் ஒரு சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெறுபவரே எலினோரை அடையத் தகுதி வாய்ந்தவர் என முடிவெடுக்கப்படுகிறது.


இரண்டாம் படத்தில் வோன்ஸ்டைனுக்கு எலினோர் காப்பி தருகிறார் ஆட்டத்தின் நடுவில்.



மூன்றாம் படம் முடிவைச் சொல்கிறது.

க்ளீவ்லெண்ட் பொது புத்தகச் சாலையில் இருந்து பெறப்பட்டு ஒரு வலைப்பதிவாளர் போட்டுக்கொள்ள, அங்கிருந்து நமது தமிழ் செஸ் பிரியர்களுக்காக நாமும் சுட்டு இங்கே பதிவிட்டுவிட்டோம்.
 ( அவருக்கும் அவர்களுக்கும் நமது நன்றிகள் ).

செஸ் சாம்பியன்கள் - 3

1995ம் ஆண்டு அன்றைய சாம்பியனான காஸ்பராவின் பட்டம் பறிக்கப்பட்டது.  அனைத்துலக செஸ் சம்மேளனத்திற்கு எதிராக ஷாட் எனும் விளையாட்டாளருடன் அங்கீகரிக்கப் படாத விளையாட்டொன்றில் கஸ்பராவ்  கலந்து கொண்டதால் அவர் தண்டிக்கப்பட்டார்.

ஆயினும் 'த புரோஃfபெஷனல் செஸ் அஸ்சோசியேஷன்' எனும் காஸ்பராவின் தலைமையிலான அமைப்பு, அவரை எதிர்த்து விளையாடக்கூடிய தகுதி வாய்ந்த போட்டியாளர்களை அடையாளம் காணும் பணியில் தமிழ் நாட்டு விளையாட்டளரான ஆனந்து விஸ்வநாதனே காஸ்பராவை எதிர்கொள்ளும் தகுதியானவர் என அறிவித்தது. ஆனந்தின் அதிசயக்கத்தக்க வளர்ச்சியை உலகம் கவனித்து வந்ததும் இதற்கொரு காரணம்.

உலக வாணிப மையத்தின் 107வது மாடியில் இவர்களுக்கிடையேயான ஆட்டங்கள் நடைபெற்றன.  வழக்கமான 24 ஆட்டங்களாக இல்லாமல், 20 ஆட்டங்கள் மட்டுமே போதுமானதாக முடிவு செய்யப்பட்டது. முதல் 2 மணிகளில் 40 நகர்த்துதல்கள், அடுத்த ஒரு மணி நேரத்தில் 20 நகர்த்துதல்கள் மற்றும் தொடரும் 30 நிமிடங்களில் போட்டியினை முடித்திடும் சட்ட திட்டங்கள் உறுதிசெய்யப்பட்டன.

18 ஆட்டங்களுக்குப்பின் கஸ்பராவ் வெற்றிபெற்றார்.


இலியம்ஷீனொவ் தலைமைத்துவத்தின் கீழ், 1997ம் ஆண்டு, ஃபைட் வழக்கமான அனைத்துலக தேர்வுப் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டு, முற்றிலும் புதுமையான தேர்வாட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தியது.

100 விளையாட்டாளர்களைக் கொண்ட நொக் அவுட் முறையிலான போட்டியின் வழி, சமநிலையின் போது பிலிட்ஸ் எனும் விறு விறு ஆட்ட வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையில் தேர்வுப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் வெற்றி பெறுபவர், மூன்று நாள் ஓய்வுக்குப்பின், ஃபைட் சாம்பியனான அனட்டொலி கர்பாவை எதிர்த்து ஆட முடிவு செய்யப்பட்டது.

1995ம் ஆண்டு பி.சி.எ அமைப்பின் கஸ்பராவை சந்தித்து தோல்விகண்ட ஆனந்த், நிக்கோலிக், கலிஃமன்,அல்மாசி, ஷிரோவ், கெல்பன் மற்றும் அடாம் ஆகியோரை தோற்கடித்து அனட்டொலி கர்பாவ்வை சந்தித்து ஃபைட் உலக சாம்பியன் பட்டத்துக்கு போட்டியிடும்  தகுதி பெற்றார்.

ஆனந்து விஸ்வநாதன் எனும் பெயர் உலகெங்கும் மேலும் வேகமாக பரவத்தொடங்கியது.

2770 புள்ளிகளில் சாம்பியன் கர்பாவ்வை விட 35 புள்ளிகள் அதிகம் பெற்று விறு விறு செஸ் உலகின் அசைக்க முடியாத விளையாட்டாளராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

உலக சாம்பியன் பட்டதுக்கு வேண்டிய அனைத்து தகுதிகளையும் கொண்டவர் இவர் என பல இடங்களிலிருந்தும் புகழ் மாலைகள் வந்த வண்ணம் இருந்தன. இருப்பினும், பார்வையாளர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கவே செய்தது.

எந்தவித ஆட்டக்களைப்புமின்றி, ஃபிரெஷாக  ஆனந்தை எதிர் பார்த்திருக்கும் கர்பாவ் ஒரு புறமும், பல கடுமையான ஆட்டங்களையும், திறமையானவர்களையும் போட்டியிட்டு வெறும் மூன்று நாட்கள் இடைவெளியில்  உலக சாம்பியன் பட்டத்துக்கு போட்டியிடும்  ஆனந்த் மறுபுறமும் இருக்க, இறுதி ஆட்டங்களின் நிலை எப்படி இருக்குமோ என யூகிக்க சிரமம் ஏற்பட்டது. 1998ம் ஆண்டில், அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி மியூசியம் அரங்கில் ரஷியாவின் அனட்டொலி கர்பாவ்வை எதிர்த்து இந்தியாவின் ஆனந்த் களம் இறங்கினார்.

போட்டி  கடுமையாக இருந்தது. முதல் மூன்று ஆட்டங்களில் 3-3 என இருவரும் சம் நிலையில் இருக்க தொடர்ந்து இரண்டு விறு விறு ஆட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் கர்பாவ் இரண்டிலும் வென்று ஃபைட் சம்மேளனத்தின் சாம்பியனானார்.

கஸ்பராவ், கர்பாவ் ஆகிய இருவருடனான போட்டிகளில் தோல்வி கண்டாலும் ஆனந்த் உலகச் சாம்பியனாகும்  காலமும் பின்பு வந்தது.


அனட்டொலி கர்பாவ் மற்றும் கஸ்பராவ்வுடன் சுசன் பொல்கார்...

2000ம் ஆண்டில், ஃபைட் சம்மேளனம் 1997ம் ஆண்டு போலவே அனைத்துலக சாம்பியன் போட்டிகளில் மீண்டும் ஒரு மாற்றத்தை புகுத்தியது.

அதில் வழக்கமான முறையில் தேர்வு பெற்று வருவோரை சந்திக்காமல், நடப்புச் சாம்பியனும் நொக் அவுட் முறையிலான  பூர்வாங்கப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த புது மாற்றம்.

ஆனந்தை வீழ்த்தியதின் வழி சாம்பியனான அனட்டொலி கர்பாவ் இந்த புது விதிமுறையினை எதிர்த்து கோர்ட்டுக்குச் சென்றார்.

2000ம் ஆண்டுக்கான உலகச் சாம்பியனாக  தேர்ந்தெடுக்கும் போட்டிகள், நவம்பர் 26 முதல் டிசம்பர் 28 வரை  இந்தியாவிலும், இறுதி ஆட்டம் ஈரானிலும் நடைபெற்றது.

ஏற்கனவே போலோகன், லிப்பிடியன், மாசியா, சாலிஃப்மன், ஆடம்ஸ் போன்றோரை வெற்றி கண்டு இறுதி ஆட்டத்திற்கு இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் தகுதி பெற்றிருந்தார்.

அவரைப்போன்றே, அலெக்ஸி ஷிரோவ் தகுதி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.



இறுதிச் சுற்று டெஹ்ரான் நகரில் 2000ம் ஆண்டு நடைபெற்றது.  நான்கே ஆட்டங்களில், அசைக்க முடியா பெரும்பான்மையில் ஆனந்த் வெற்றியாளரானார்.

உலக விளையட்டரங்கில் இந்தியாவையும், தமிழ் நாட்டையும்...ஏன், நம் தமிழ்ச் சமூகத்தையும் பரவச் செய்ததில் ஆனந்துக்கு பெரும் பங்குண்டு.

1987ல் அனைத்துலக நிலையில் கால் பதித்து நடக்கத்தொடங்கிய ஆனந்த், 13 வருடங்களிலேயே உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். கர்பாவ், கஸ்பராவ் போலவே தனது தனித்துவமான வேகமிகு ஆட்டத்தில் உலகையே ஆச்சரியப் பட வைத்தார்.

வழக்கமான பாணியிலிருந்து புதுமைகளைப்புகுத்திய கஸ்பராவ் போலவே இவரும் வித்தியாசமான பாணியில் மற்றவர்களைவிட சற்று விறுவிறுவென வேகமாக ஆடும் கலையை வளர்த்துக்கொண்டார். எதிரிகளை அதிகம் தடுமாறச்செய்தது இவரின் பல ஆட்ட நகர்த்துதல்கள்.

செஸ் உலகின் மன்னனாக ஆனந்த் உலா வரத்தொடங்கினார்.


Thursday, 24 October 2013

“பிலிட்ஸ் செஸ்”...

செஸ் என்பது இருவர் மட்டுமே ஆடக்கூடிய விளையாட்டு. இதனால், இதற்கு மற்ற விளையாட்டுக்களைப் போல விளையாட்டு அரங்கில்  பார்வையாளர்கள் அதிகம் இருப்பதில்லை.  அருகில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய அறிவிப்புப் பலகையில் இருவரின் ஆட்ட நகர்த்துதல்களும் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். இதனைக் கண்டே தூரத்தில் இருந்தவாறு விளையாட்டளர்களின் முடிவுகளை பார்வையாளர்கள் தெரிந்துகொள்கின்றனர்.

அதுமட்டுமல்லாது இவ்விளையாட்டுக்கு அதிக அமைதியும், நிசப்தமும் தேவைப்படுவதால், பார்வையாளர்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு தூரத்திலேயே அமர்த்தப்படுகின்றனர்.

அரங்கில் மட்டுமே பார்வையாளர்கள் குறைவாக இருப்பார்கள் என்றேனே தவிர, நேரடியான ஒளிபரப்புக்கள் மூலமாக கவனித்துக் கொண்டிருப்போர் எண்ணிக்கை உண்மையில் மிக அதிகம் என்றால் அது பொய்யாகாது.

முன்னேறிய நாடுகள் மட்டுமல்லாது  மூலை முடுக்கெல்லாம் செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருப்போர்  இருக்கின்றனர். இது ஒரு அறிவுக்கு அங்கீகாரம் தரும் போட்டி என்பதால், பலரும் செஸ் விளையாடுவதை பெரிய போட்டிகளில் கலந்து கொள்ளும்  அளவுக்கு இல்லாவிட்டாலும், சுமாராக விளையாட தெரிந்து வைத்துள்ளனர்.

ஒவ்வொரு விளையாட்டாளருக்கும் தரப்படும் வழக்கமான  ஆட்ட நேரம், 60 முதல் 180 நிமிடங்களாகும். இதனால்,  பார்வையாளர்கள் சிலருக்கு இது 'போர்' அடிக்கவும் கூடும். பார்ப்போர் சற்று அசௌகரியப்படலாம்.

இந்த பிரச்சினையினைக் கலைவதற்கு  அனைத்துலக செஸ் சம்மேளனமான, எஃப்.ஐ.டி.ஈ (ஃபைட்), 1987ம் ஆண்டு வழக்கமான போட்டி விளையாட்டுகளினைத் தவிர்த்து மற்றும் ஒரு “பிலிட்ஸ் செஸ்” அதாவது 'ஸ்பீட் செஸ்' எனும் ஐந்து நிமிட போட்டி, 'லைட்னிங் செஸ்' எனும் இரண்டு நிமிட போட்டி மற்றும் 'புல்லெட் செஸ்' என்றழைக்கப்படும்  ஒரு நிமிட போட்டி என்னும் விருவிருப்பான ஆட்டமுறைகளினை  அறிமுகம் செய்து வைத்தது. ( ஆனாலும் 1950களிலேயே விறுவிறு ஆட்டமென இருந்த தகவல்களும் உண்டு. அவை அதிகாரப்பூர்வ நிலையை எட்டவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது).

இப்படி அறிமுகப்படுத்தப்பட்ட புது முறைகைளின்படி,  விளையாட்டாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக தங்களின் நகர்த்துதல்களை செய்ய வேண்டும். இதனால், பார்வையாளர்களுக்கு  போரடிக்காது. இந்த அறிமுகத்துக்குப் பின்னால் அதிக ஆர்வம் தரும் போட்டியாக செஸ் விளையாட்டு உருமாற்றம் கண்டது.  பல நாடுகளிலும் இதற்கு பெருமளவு வரவேற்பும் கிடைத்தது.
  
விளையாட்டாளர்களின் நேரத்தை 'கண்ட்ரோல்' செய்யும் கடிகாரங்கள் விளையாட்டின் சட்ட திட்டங்களுக்கேற்ப சரி செய்யப்பட்டன.  இதனால், ஒவ்வொரு விளையாட்டளரும் கொடுக்கப்பட்டுள்ள 5, 2, 1 அல்லது சில நேரங்களில் 10 நிமிடங்களுக்குள் தங்களின்  நகர்த்துதல்களை முடித்துக்கொள்ள வேண்டும். மார்ச் 2013ல், இவ்வித விறுவிறு ஆட்டங்களுக்கான  தரவரிசையும் உறுவாக்கப்பட்டது.

இதுபோன்ற ஆட்டங்களின் மாறுதல்கள் பார்வையாளர்களின் ஆர்வத்தினை அதிகம் வளர்த்தது. பலரும் இதுபோன்ற ஒரு நாள் விளையாட்டுக்களில் கலந்து கொண்டு இவ்விளையாட்டினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர், அதிகாரப்பூர்வமான அனைத்துலக போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலமாக.

இதற்கிடையே மூகிய விளையாட்டாளர்கள் சிலரின் எதிர்மறை கருத்துக்கள் உலக கவத்தை ஈர்க்கவே செய்தது:-  
   -லாடிமிர் கிரம்னிக், "இதுப்போன்ற குறைந்த நேர விளையாட்டுக்கள், முழுக்கவனத்தையும் செலுத்தி ஆடும் ஒருவரின் ஆற்றலைக் கட்டுப்படுத்துகிறது" என்றார்.
   -   "நாய்கள் ஒன்றை ஒன்று சந்திக்கும் வேளையில் முகர்ந்து பார்த்துவிட்டு நகர்வது போல இம்மாதிரியான ஸ்பீட் செஸ் போட்டிகள் அமைவதாக" ரஷிய வீரர் அனடொலி கர்பொவ் கூறினார்.
    -   "ஆமாம் , நானும் இதுபோன்றதொரு அதிவிரைவு போட்டியினை விளையாடி இருக்கிறேன், 1929ல் ஒரு ரயில் பயணத்தின் போது" என்றார்  மிக்கையில் போட்வின்னிக்.
   -   "பிலிட்ஸ் உங்களின் ஐடியாக்களை கொன்றுவிடுகிறது" என போப்பி ஃfபிஷெர் கருத்துரைத்தார்.

இப்படி கருத்து சொல்வோர் மத்தியில் பலரும் பங்கு கொள்ளும் விதம் இந்த பிலிட்ஸ் செஸ் வளர்ந்துகொண்டிருக்கிறது.




Wednesday, 23 October 2013

சதுரங்கத்தில் உலக நாயகன்... ஆனந்த்


உலகம் தயாராகி வருகிறது. சென்னையில் நடக்கவிருக்கும் அனைத்துலக செஸ் விளையாட்டினைக் காண அனைவரும் ஆசையோடு காத்திருக்கும் தருணம் இது....

அந்த அறிவுக்கும், திறனுக்கும், யுக்திகளுக்கும் இடையே நடக்கும் அந்த போரில் நாம் விடுபட்டுவிடாமல் இருக்க செஸ் எனும் சதுரங்கம் பற்றிய நமது உணர்வை தட்டி எழுப்பி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நம் தமிழ் மகன் ஆனந்தின் அபாரமான சதுரங்க ஆற்றலை இன்னும் ரசிக்க ஏதுவாக இருக்கும்.

மற்றவர்கள்  நம்மிடம் வந்து, 'என்ன நடக்கிறது, ஆனந்தின் நிலை என்ன'   எனச்  சொல்வது  நமக்கு அழகல்ல. ஆட்டக்களத்தில் இருப்பது நமது ஆனந்த் எனும் உணர்வு மேலிட செஸ் பற்றிய பொது அறிவை வளர்த்துக்கொள்வோம்.

இதுவரை அவரின் சாதனைகள் பற்றி அவ்வளவாக  தெரிந்திரா விட்டாலும், இனியாவது நம் சமூகத்திற்கு சேவை செய்யும்,   நம் சமூகத்தின் பிரதிநிதியாக அனைத்துலக அரங்கில் வீர நடை போடும் சதுரங்க உலக நாயகன், செஸ் சாம்பியன்  ஆனந்த் அவர்களை வரவேற்போம்...வாருங்கள்...





Tuesday, 22 October 2013

செஸ் சாம்பியன்கள் - 2


ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்துக்கு பரிசுத்தொகையையும்,  பாராட்டுக்களையும் வழங்கினார்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்.


சதுரங்க விளையாட்டினை முதன் முதலாக  நான் கற்றுக்கொள்ளும் போது எனக்குள் அப்படியொரு ஆனந்தம். அதனை விளையாடும்போது மட்டுமல்ல, அதன் சரித்திரத்தை தெரிந்து கொள்ளும் போது எனக்குள் ஏற்பட்ட வியப்புக்கள் தாம் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

எத்தனையெத்தனை பேர் இவ்விளையாட்டை உலகுக்குக்கு நவீனமாக்கித் தந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆரம்பித்ததென்றாலும் சரித்திரக் குறிப்புகள் வெளி நாட்டினர் பற்றியே அதிகம் இருப்பது சற்றுச் சோர்வடையச் செய்கிறது.

 இருப்பினும், அள்ள அள்ளக்  குறையாத ஊற்றினைப்போல் செஸ் பற்றிய தகவல்கள் பல மொழிகளிலும் கணினியின் வரவால் பரவலாகக் காணப்படுகின்றன.


 செஸ் சாம்பியன்கள் தொடர்ச்சி...

கெப்பபிளன்காவைப் போலில்லாது 1927 முதல் 1935 வரையிலும், பின்னர் 1937ல் இருந்து 1946ம் ஆண்டு வரையிலும் அலெக்ஸான்டர் அலெக்கைன் வெற்றியாளராக திகழ்ந்தார். கடினமான பயிற்சிகளும், விடா முயற்சியும்  இவரின் வெற்றிக்கு வழி வகுத்தன. எந்த முறையில் ஆடினாலும், முடிவில் எல்லா ஆட்டங்களிலும் இவர் வெற்றி பெற்று எதிர்த்து ஆடிய போட்டியாளர்களை மிரளச்செய்தார்.


கெப்பபிளன்கா

1935ல் தன்னுடைய குடி பழக்கத்தின் காரணமாக சாம்பியன் பட்டத்தை இழக்க நேர்ந்தது. எனினும், தன்னை தோற்கடித்த டாக்டர் மாக்ஸ் யூவி என்பவரை வென்று மீண்டும் சாம்பியனானார்.




யூவி ஒரு கணக்காய்வாளர். இவர் மட்டும்தான் தொழில் ரீதியாக அல்லாத அமச்சூர்  சாம்பியன் என்பது பலருக்கு தெரிந்திருக்காது.  அலெக்கைன் இறந்த பின் வெர்ல்ட் செஸ் ஃபெடெரேஷன் என்னும் அனைத்துலக செஸ் அமைப்பு இப்போட்டியில் சில மாறுதல்களைச் செய்தது.

பல சிறந்த விலையாட்டளர்களைக்கொண்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெருபவர் உலக சாம்பியனாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

1948ல் இப்போட்டி நடைபெற்றது. அதில் மிக்கைல் போட்வின்னிக் வென்றார். போட்வின்னிக் 1948 முதல் 1957 வரை,  1958 முதல் 1960 வரை ரஷியாவின் ஆதிக்கத்தை துவக்கி வைத்தார்.


மிக்கைல் போட்வின்னிக்

இவருக்கு உதவியது வெறும் பயிற்சிகள் மட்டுமல்ல. அரிவியல் பூர்வமான நுணுக்கங்களைக் கொண்டு போட்டி விளையாட்டுக்களில் வெற்றி பெற்றார். செஸ் ஆட்டத்தின் எல்லா நுணுக்கங்களும் போட்வின்னிக்குக்கு அத்துப்படி. அதனால் இழந்த சாம்பியன் பட்டத்தை மீண்டும் இருமுறை வென்று காட்டினார்.


 வாசிலி மிஸ்லோவ்

முதலாவதாக வாசிலி மிஸ்லோவிடமிருந்தும் பின்னர் மிக்கைல் தால் என்பவரிடமிருந்தும் பட்டத்தை வென்றார். மிஸ்லோவ் 1957ல்  இருந்து 1958 வரை தனது புதுமையான துவக்க ஆட்டங்களினால் மக்களைக் கவர்தவராக இருந்தார்.

மிக்கைல் தால் 

மிக்கைல் தால்  1960லிருந்து 1961வரைக்குமான சாம்பியன். இவரின் ஆட்டங்களில் கற்பனை வளமும், காய்களை வெட்டுக்குத் தரும் பாணியும் இருந்தது. வெட்டப்படும் காய்களுக்குப் பின்னனியில் இருந்த ஆட்ட நிலையை பலரும் உணரத்தொடங்கினர். ஆயினும் இவரை வெற்றி கொள்ள சிரமப்பட்டனர்.


திக்ரன் பெட்ரோசியன்

திக்ரன் பெட்ரோசியன் 1961லிருந்து எட்டு ஆண்டுகள் உலகச் சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினார். ஆபத்தை முன்கூட்டியே அறிந்து அவற்றைத் தவிர்த்துவிடும் தற்காப்புத் திறன் இவருக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தது.  குறிப்பாக 1962ம் ஆண்டு, பெட்ரோசியன் ஆடிய விளையாட்டுக்கள் எதிலுமே அவர் தோல்வியடையவில்லை என்பது பலருக்கும் வியப்பளிக்கலாம்.  போரிஸ்  ஸ்பாஸ்கி எனும் விளையாட்டளரிடம் இவர் 1969ல் தனது   பட்டத்தை இழந்தார்.


போரிஸ் ஸ்பாஸ்கி

1972 வரைக்குமான கால கட்டத்தில் உலக செஸ் சாம்பியனாக இருந்து புகழை அடைந்தவர் போரிஸ் ஸ்பாஸ்கி. இவரும் பல வழிகளிலும், பல வித்தியாசமான ஆட்ட முறைகளையும் தன்னகத்தே கொண்டவர். 
1972ல் ஒரு அமெரிக்கர் இவரிடம் இருந்து பட்டத்தை வெற்றிகொண்டார். 


போப்பி ஃபிஷர்

போப்பி ஃபிஷர்... அது வரையில் ரஷ்யர்கள் ஆட்சி புரிந்து வந்த செஸ் உலகை ஆட்டிக் காட்டியவர் போப்பி ஃபிஷர் ஆவார். பந்தா பேர்வழி என சிலரால் சொல்லப்பட்டாலும், அமெரிக்கர்கள் பலர் செஸ் விளையாட இவரின் வெற்றியே துணை செய்தது. 

போப்பி ஃபிஷர், ஒரு சிறந்த, அதே நேரம் ஒரு ஆவேசமான விளையாட்டளர். 1972ல் இருந்து 1975 வரை இவர் ஆடிய ஆட்டங்களில் இவர் வெற்றியை இலக்காகக் கொண்டே விளையாடியது தெரிந்தது. போர் அடிக்கும் சம நிலை ஆட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அது போல வெற்றியோ தோல்வியோ, இரண்டில் ஒன்று இருக்க வேண்டும் என்றவர்.


அனட்டொலி கர்பொவ்

அனால், 1975ல் அனட்டொலி கர்பாவ் எனும் ரஷியரை எதிர்த்து தன் பட்டத்தை தற்காத்துக்கொள்ள விளையாடதால், இவரின் உலக சாம்பியன் பட்டம்
பறிக்கப்பட்டு அனடொலி கர்பாவ்விற்கு வழங்கப் பட்டது.

கர்பாவ், கெப்பபிளன்காவின் விசிறி. அவரின் ஆட்டச் சாயல் கர்பாவின் ஆட்டங்களில் காணப்படும். சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் 22 வயதான கேரி கஸ்பரோவிடம் பட்டத்தை விட்டுச்சென்றார்.


கேரி கஸ்பரோ

இதுவரைக்கும் செஸ் உலகம் பார்த்த விளையாட்டாளர்கள் போலில்லை இந்தப் புது சாம்பியன். மிக இளம் வயதுச் சாம்பியன் இவர்தான். ஆனால் அவர் சாதிக்கத்தொடங்கிய பல, ரஷிய அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது. 


இன்னும் வரும்...

செஸ் சாம்பியன்கள் - 1

உலக அரங்கில் செஸ் எனும் சதுரங்கத்திற்கு பெரிய அளவிலான மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. மற்ற விளையாட்டுக்களைப்போல இல்லாமல், மூளையும் மூளையும் மோதிக்கொள்வதால் இதற்கான வரவேற்பு பெருமளவு உலக நாடுகளிடயே நிலவுகிறது. இது யாரும்  மறுக்க முடியாத உண்மை. உடலை வறுத்தி போட்டியிடுவோரிடம் இருந்து விலகி, புத்திக்கூர்மையினை பரிசோதித்துக்கொள்ளும்  தனி நபர்களின் விளையாட்டு  செஸ்.    கல்வியா, செல்வமா, வீரமா எனும் கேள்வியில் கல்வி எனும் பிரிவில் அறிவும் அறிவும் மோதிக்கொள்ளும்  நிகழ்வே இந்த சதுரங்கப் போட்டிகளாகும்.

வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று தேனீர் தருவதைப் போல ரஷ்ய நாட்டில் இவ்விளையாட்டு ஒரு சம்பிரதாய நிகழ்வாக கருதப்படுகின்றது. இல்லங்களில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் அதிகமாக பலரும்  விளையாடுகின்றனர்.


இன்னும் பல நாடுகளில் இதனை சாதுரியத்தையும், தந்திரங்களையும் இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் ஒரு செயல் திட்டமாக பயன் படுத்துகின்றனர்.

இதற்கிடையே, இவ்வாண்டின் அனைத்துலக செஸ் ஆட்டங்கள் தமிழ் நாட்டில் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற விருக்கின்றது. அடுத்த இரு வாரங்களும் உலகம் சென்னையை நோக்கி தன் கவனத்தை செலுத்தவிருக்கிறது. பல இடங்களிலும் செஸ் விளையாட்டுக்கள் அதி வேகமாக தீவிரமடைந்த வண்ணம் இருக்கின்றன. அனைத்துலக போட்டியினை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர் என்பதையே இது காட்டுகிறது..

அதனை நினைவில் கொண்டு, 1987ம் ஆண்டு சிலாங்கூர் டிரெட்ஜிங் செஸ் போட்டிகளின் போது நான் சமர்ப்பித்த ஒரு கட்டுரையின் சுருக்கத்தினை இங்கே பதிவிட விரும்புகிறேன்.


தற்போதைய  அனைத்துலக  செஸ் சாம்பியன் -  ஆனந்த்

முந்தைய சாம்பியன்கள்...

உலக செஸ் போட்டிகள் முதன் முதலில் 1886ல் அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் நடைபெற்றது.  கடந்த 1986ம் ஆண்டோடு நூறாண்டுகள் பூர்த்தியானதைத் தொடர்ந்து கோலாகலமான நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

மே 12 முதல் 18 வரை அனைத்துலக செஸ் சாம்பியன்ஷிப் சென்டினியல் எனும் மையக் கருப்பொருளுடன் பல இடங்களிலும் செஸ் விளையாட்டுக்கள் திருவிழாக் கோலம் போல நடைபெற்று முடிந்தன. ஏற்பாட்டாளர்கள் அதிக பொருட்செலவில் இவ்விளையாட்டுக்கு தனியொரு அங்கீகாரத்தினை வழங்கி கௌரவமான ஓர் உயர்ந்த இடத்திற்கு சதுரங்கத்தினை கொண்டுசென்றுவிட்டனர் எனலாம்.

அமெரிக்காவின் ஆடம்பரச் செயல்களினால் செஸ் விளையாடுவோர் எண்ணிக்கை மேலும் ஐம்பது விழுக்காடு அதிகமாகிவிட்டதென பல பத்திரிக்கைகளும் புகழ்ந்தன. இதன் விளம்பரங்களினால் பலரும் இவ்விளையாட்டினை தேர்ந்தெடுத்து ஆடத்தொடங்குவர் எனவும் ஆரூடங்கள் சொல்லப்பட்டது. 

இங்கே நமது சிலாங்கூர் டிரெட்ஜிங்கில் இவ்விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியதும் இந்த செஸ் திருவிழாவினை தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளில் படித்ததினாலும் தான். அதன் ஆர்வமே  இங்கிருக்கும் பல விளையாட்டாளர்களின் வருகைக்கும் காரணம். லீக் முறையில் ஒரு மாத காலம் விளையாடி முடிக்கவிருக்கும் நமது செஸ் போட்டிகளுக்கு முன்னால் செஸ் விளையாட்டின் கடந்த நூறாண்டுகளாக இருந்த சாம்பியன்கள் பற்றியும் ஓரிரு வரிகள் தெரிந்துகொள்வோம்.


வில்ஹம் ஸ்டெய்னிட்ஸ் 

இதுவரையில் மொத்தம் 13 பேர் உலகச் சாம்பியன்களாக இருந்திருக்கின்றனர்.  1886 முதல் 1894 வரை வில்ஹம் ஸ்டெய்னிட்ஸ் அதிகாரபூர்வ செஸ் அமைப்பின் முதல் சாம்பியனானார். இவருடைய பிடிவாத குணத்தினால் இவர் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட சாம்பியனாக தமது ஐம்பத்தெட்டாவது வயதுவரை இருந்தார். மிக வயதான உலகச் சாம்பியன் இவர்தான்.

இவரைத்தோற்கடித்ததின் வழி இமானுவேல் லாஸ்கர் இரண்டாவது சாம்பியானாக 1894 முதல் 1921 வரை புகழ் பெற்றார். ஜெயிக்க முடியாத இறுக்கமான நிலைகளில் இருந்தும் போட்டிகளை வெல்வது இவரின் தனித்திறமையாக இருந்தது.


இமானுவேல் லாஸ்கர்

இமானுவேல் லாஸ்கரின் பல வெற்றிகளுக்கு அவர் கையாண்ட மனோத்தத்துவமும் ஒரு காரணமென கருதப்பட்டது அன்று. எதிர்பார்க்க முடியாத நிலைகளில் ஆடி, வென்று 25 ஆண்டுகள் சாம்பியனாக வீர நடை போட்டவரி இவர்.  வேறொருவரால் இவரின் நீண்ட கால சாதனையினை முறியடிக்க முடியுமா என்பது இப்போது ஒரு பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது.

ஜோசே ராவுல் கெப்பபிளான்கா என்பவர் 1921ம் ஆண்டு தனது அபாரத்திறமையினால் பலரையும் கவர்ந்த விளையாட்டாளர்.  அந்த  ஆண்டு இமானுவேல் லாஸ்கரை வீழ்த்தியதன் வழி உலக சாம்பியன் பட்டத்துடன் வலம் வந்தார். ஆயினும் இந்த இருவருடனான போட்டிகளில் ஒரு சில வித்தியாசங்கள் இருந்தன.


ஜோசே ராவுல் கெப்பபிளான்கா 

30 ஆட்டங்கள் ஆடியிருக்க வேண்டிய போட்டி, 14 ஆட்டங்களோடு முடிவடைந்தது. 4 ஆட்டங்களில் வென்று, 10 ஆட்டங்களில் சம நிலை காணும் போது இமானுவேல் நோய்வாய்ப்படவே அடுத்த சாம்பியனாக ஜோசே ராவுல் கெப்பபிளான்கா அறிவிக்கப்பட்டார்.

இந்த வகையில் இவர் சாம்பியானானதில் சிலர் சந்தேகப்பட்டாலும், கூடிய விரைவிலேயே இவர் மாபெரும் திறமைசாலி என உலகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. பல செஸ் விளையட்டுப் போட்டிகளில் எவ்விதச் சிரமுமின்றி  மிகச் சாதாரணமாக எதிர் ஆட்டக்காரர்களை வெற்றி கொண்டதனால், " செஸ் விளையாடுவது மிக எளிதான ஒன்றோ?" எனும் எண்ணத்தை  பார்ப்போர் மனதில் தோற்றுவித்தவர் இந்த ஜோசே ராவுல் கெப்பபிளான்கா ஆவார்.

ஒரு செஸ் விளையாட்டளருக்கான எல்லாத் திறமைகளும், தகுதிகளும்  இவரிடம் இருந்தது.  அதன் காரணமாக, ஏனைய விளையாட்டாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக பல வருடங்கள் இருந்தவர் இவராகும்.

இருப்பினும் தனது ஆட்டத்தினை காலத்திற்கேற்ற மாறுதல்களின்றி தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்ததால், அதிக காலம் இவரால் சாம்பியனாக உலா வர முடியாமல் போயிற்று.


அடுத்த பதிவில் தொடர்கிறது...