Tuesday, 22 October 2013

செஸ் சாம்பியன்கள் - 2


ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்துக்கு பரிசுத்தொகையையும்,  பாராட்டுக்களையும் வழங்கினார்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்.


சதுரங்க விளையாட்டினை முதன் முதலாக  நான் கற்றுக்கொள்ளும் போது எனக்குள் அப்படியொரு ஆனந்தம். அதனை விளையாடும்போது மட்டுமல்ல, அதன் சரித்திரத்தை தெரிந்து கொள்ளும் போது எனக்குள் ஏற்பட்ட வியப்புக்கள் தாம் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

எத்தனையெத்தனை பேர் இவ்விளையாட்டை உலகுக்குக்கு நவீனமாக்கித் தந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆரம்பித்ததென்றாலும் சரித்திரக் குறிப்புகள் வெளி நாட்டினர் பற்றியே அதிகம் இருப்பது சற்றுச் சோர்வடையச் செய்கிறது.

 இருப்பினும், அள்ள அள்ளக்  குறையாத ஊற்றினைப்போல் செஸ் பற்றிய தகவல்கள் பல மொழிகளிலும் கணினியின் வரவால் பரவலாகக் காணப்படுகின்றன.


 செஸ் சாம்பியன்கள் தொடர்ச்சி...

கெப்பபிளன்காவைப் போலில்லாது 1927 முதல் 1935 வரையிலும், பின்னர் 1937ல் இருந்து 1946ம் ஆண்டு வரையிலும் அலெக்ஸான்டர் அலெக்கைன் வெற்றியாளராக திகழ்ந்தார். கடினமான பயிற்சிகளும், விடா முயற்சியும்  இவரின் வெற்றிக்கு வழி வகுத்தன. எந்த முறையில் ஆடினாலும், முடிவில் எல்லா ஆட்டங்களிலும் இவர் வெற்றி பெற்று எதிர்த்து ஆடிய போட்டியாளர்களை மிரளச்செய்தார்.


கெப்பபிளன்கா

1935ல் தன்னுடைய குடி பழக்கத்தின் காரணமாக சாம்பியன் பட்டத்தை இழக்க நேர்ந்தது. எனினும், தன்னை தோற்கடித்த டாக்டர் மாக்ஸ் யூவி என்பவரை வென்று மீண்டும் சாம்பியனானார்.




யூவி ஒரு கணக்காய்வாளர். இவர் மட்டும்தான் தொழில் ரீதியாக அல்லாத அமச்சூர்  சாம்பியன் என்பது பலருக்கு தெரிந்திருக்காது.  அலெக்கைன் இறந்த பின் வெர்ல்ட் செஸ் ஃபெடெரேஷன் என்னும் அனைத்துலக செஸ் அமைப்பு இப்போட்டியில் சில மாறுதல்களைச் செய்தது.

பல சிறந்த விலையாட்டளர்களைக்கொண்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெருபவர் உலக சாம்பியனாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

1948ல் இப்போட்டி நடைபெற்றது. அதில் மிக்கைல் போட்வின்னிக் வென்றார். போட்வின்னிக் 1948 முதல் 1957 வரை,  1958 முதல் 1960 வரை ரஷியாவின் ஆதிக்கத்தை துவக்கி வைத்தார்.


மிக்கைல் போட்வின்னிக்

இவருக்கு உதவியது வெறும் பயிற்சிகள் மட்டுமல்ல. அரிவியல் பூர்வமான நுணுக்கங்களைக் கொண்டு போட்டி விளையாட்டுக்களில் வெற்றி பெற்றார். செஸ் ஆட்டத்தின் எல்லா நுணுக்கங்களும் போட்வின்னிக்குக்கு அத்துப்படி. அதனால் இழந்த சாம்பியன் பட்டத்தை மீண்டும் இருமுறை வென்று காட்டினார்.


 வாசிலி மிஸ்லோவ்

முதலாவதாக வாசிலி மிஸ்லோவிடமிருந்தும் பின்னர் மிக்கைல் தால் என்பவரிடமிருந்தும் பட்டத்தை வென்றார். மிஸ்லோவ் 1957ல்  இருந்து 1958 வரை தனது புதுமையான துவக்க ஆட்டங்களினால் மக்களைக் கவர்தவராக இருந்தார்.

மிக்கைல் தால் 

மிக்கைல் தால்  1960லிருந்து 1961வரைக்குமான சாம்பியன். இவரின் ஆட்டங்களில் கற்பனை வளமும், காய்களை வெட்டுக்குத் தரும் பாணியும் இருந்தது. வெட்டப்படும் காய்களுக்குப் பின்னனியில் இருந்த ஆட்ட நிலையை பலரும் உணரத்தொடங்கினர். ஆயினும் இவரை வெற்றி கொள்ள சிரமப்பட்டனர்.


திக்ரன் பெட்ரோசியன்

திக்ரன் பெட்ரோசியன் 1961லிருந்து எட்டு ஆண்டுகள் உலகச் சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினார். ஆபத்தை முன்கூட்டியே அறிந்து அவற்றைத் தவிர்த்துவிடும் தற்காப்புத் திறன் இவருக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தது.  குறிப்பாக 1962ம் ஆண்டு, பெட்ரோசியன் ஆடிய விளையாட்டுக்கள் எதிலுமே அவர் தோல்வியடையவில்லை என்பது பலருக்கும் வியப்பளிக்கலாம்.  போரிஸ்  ஸ்பாஸ்கி எனும் விளையாட்டளரிடம் இவர் 1969ல் தனது   பட்டத்தை இழந்தார்.


போரிஸ் ஸ்பாஸ்கி

1972 வரைக்குமான கால கட்டத்தில் உலக செஸ் சாம்பியனாக இருந்து புகழை அடைந்தவர் போரிஸ் ஸ்பாஸ்கி. இவரும் பல வழிகளிலும், பல வித்தியாசமான ஆட்ட முறைகளையும் தன்னகத்தே கொண்டவர். 
1972ல் ஒரு அமெரிக்கர் இவரிடம் இருந்து பட்டத்தை வெற்றிகொண்டார். 


போப்பி ஃபிஷர்

போப்பி ஃபிஷர்... அது வரையில் ரஷ்யர்கள் ஆட்சி புரிந்து வந்த செஸ் உலகை ஆட்டிக் காட்டியவர் போப்பி ஃபிஷர் ஆவார். பந்தா பேர்வழி என சிலரால் சொல்லப்பட்டாலும், அமெரிக்கர்கள் பலர் செஸ் விளையாட இவரின் வெற்றியே துணை செய்தது. 

போப்பி ஃபிஷர், ஒரு சிறந்த, அதே நேரம் ஒரு ஆவேசமான விளையாட்டளர். 1972ல் இருந்து 1975 வரை இவர் ஆடிய ஆட்டங்களில் இவர் வெற்றியை இலக்காகக் கொண்டே விளையாடியது தெரிந்தது. போர் அடிக்கும் சம நிலை ஆட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அது போல வெற்றியோ தோல்வியோ, இரண்டில் ஒன்று இருக்க வேண்டும் என்றவர்.


அனட்டொலி கர்பொவ்

அனால், 1975ல் அனட்டொலி கர்பாவ் எனும் ரஷியரை எதிர்த்து தன் பட்டத்தை தற்காத்துக்கொள்ள விளையாடதால், இவரின் உலக சாம்பியன் பட்டம்
பறிக்கப்பட்டு அனடொலி கர்பாவ்விற்கு வழங்கப் பட்டது.

கர்பாவ், கெப்பபிளன்காவின் விசிறி. அவரின் ஆட்டச் சாயல் கர்பாவின் ஆட்டங்களில் காணப்படும். சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் 22 வயதான கேரி கஸ்பரோவிடம் பட்டத்தை விட்டுச்சென்றார்.


கேரி கஸ்பரோ

இதுவரைக்கும் செஸ் உலகம் பார்த்த விளையாட்டாளர்கள் போலில்லை இந்தப் புது சாம்பியன். மிக இளம் வயதுச் சாம்பியன் இவர்தான். ஆனால் அவர் சாதிக்கத்தொடங்கிய பல, ரஷிய அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது. 


இன்னும் வரும்...

No comments:

Post a Comment